Published : 28 Nov 2018 10:39 AM
Last Updated : 28 Nov 2018 10:39 AM

அன்றாட வாழ்வில் வேதியியல் 10: உலகை வாழ வைக்கும் ஹீலியம்!

பிப்பெட்: புயல் ஓய்ஞ்சிருச்சு, ஆனா இழப்புகளின் பட்டியல் ஓயலை.

பியூரெட்: ஆமா பிப். காவிரி டெல்டா மாவட்டங்கள்ல இருந்து வர்ற செய்திகள் பெரும் கவலையைத் தருது.

பிப்.: என்னால முடிஞ்ச உதவிகளை நண்பர்கள் மூலமா அனுப்பிட்டு இருக்கேன்.

பியூ.: நான் நேர்லயே உதவிகளைக் கொண்டுபோய் கொடுத்துட்டு வந்தேன்.

பிப்.: நீ திரும்பவும் போகும்போது சொல்லு, நான் கொஞ்சம் பணம் திரட்டி வைச்சிருக்கேன்.

பியூ.: நிச்சயமா சொல்றேன் பிப். கஜா புயல் காத்து மாதிரியே, இன்னைக்கு ஒரு வாயுவைப் பத்தித்தான் பேசப் போறோம்.

பிப்.: அப்படியா, அது என்ன வாயு?

பியூ.: அணு எண் 1 கொண்ட ஹைட்ரஜனைப் பலருக்கும் தெரிஞ்சிருக்கும். அது தண்ணீரிலும் இருக்கு. அணு எண் 2 கொண்ட தனிமத்தைப் பத்தி அவ்வளவா கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அது ஹீலியம்.

பிப்.: ஹீலியமா? நான் கேள்விப்பட்டிருக்கேனே. விழாக் காலங்கள், சிறப்பு நிகழ்ச்சிகளில் உயரே காற்றில் பறக்கும் பலூன்ல நிரப்புவாங்களே, அதுதானே?

பியூ.: அதேதான்.

பிப்.: சாதாரணமாகக் காற்று ஊதப்பட்ட பலூன்கள் பறக்குமே தவிர, மேலே மேலே உயரமா போகாது. ஆனால், ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்கள் மட்டும் மேகங்களைத் தொடும் உயரத்துக்குக்கூட போகுதே. இது எப்படி?

பியூ.: ஹீலியத்தோட தன்மைதான் காரணம். அது காற்றைவிட எடை குறைவா இருக்குது இல்லையா, அதுனாலதான் மேலே மேலே போகுது. தனிம அட்டவணையில் உள்ள தனிமங்களிலேயே மிக லேசான வாயுக்கள்ல ஒண்ணு ஹீலியம். அடர்த்தி குறைந்த தனிமமும்கூட. தட்பவெப்பநிலை ஆய்வுக்குப் பயன்படுத்தும் பலூன்களை வானில் செலுத்தவும் ஹீலியம் வாயு பயன்படுத்தப்படுது.

பிப்.: லேசான ஹீலியம், பறக்கும் ஹீலியம்.

பியூ.: இந்தத் தனிமம் பூமியில கண்டறியப்படுறதுக்கு முன்னாடி வானத்துலதான் முதன்முதல்ல கண்டுபிடிச்சாங்க.

பிப்.: அப்படியா என்ன?

பியூ.: அது மட்டுமில்ல, இந்தியாவுலதான் அதைக் கண்டுபிடிச்சாங்க.

பிப்.: இது ரொம்பப் பெரிய பெருமையாச்சே. அது எப்ப நடந்துச்சு?

பியூ.: 150 வருஷத்துக்கு முன்னாடி ஒரு சூரிய கிரகண நாள்ல அதைக் கண்டுபிடிச்சாங்க. அப்போ சூரிய நிறமாலையை ஆராயுற நோக்கத்தோட, பிரான்ஸிலிருந்து பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செஞ்சு இந்தியா வந்திருந்தார் பியரி ஜான்சென். அவர் வந்து சேர்ந்த இடம் ஆந்திர மாநிலம் குண்டூர்.

பிப்.: அங்க அவர் என்ன பார்த்தார்?

பியூ.: சூரிய நிறமாலைக் கதிர்ல மாறுபட்டிருந்த மஞ்சள் நிறப்பட்டையைக் கண்டறிந்தார். அதுவே ஹீலியம்.

பிப்.: இந்தியாவையும் பியரி ஜான்சென் பெருமைப்படுத்திட்டார்.

பியூ.: இல்ல, லண்டனில் இருந்த ஆங்கிலேய வானியலாளர் நார்மன் லாக்யர் 1868 அக்டோபர் 20-ம் தேதி பட்டப் பகலில் சூரிய தீச்சுவாலைகளை வெற்றிகரமா ஆராய்ஞ்சிருந்தார். அவருடைய ஆய்வறிக்கையும் பியரி ஜான்செனின் ஆய்வறிக்கையும் பிரெஞ்சு அறிவியல் அகாடமிக்கு ஒரே நாள்ல வந்தன. அதனால், ஹீலியம் வாயுவைக் கண்டறிஞ்ச பெருமை இருவருக்குமே  கிடைச்சுச்சு.

பிப்.: ஓ, அப்படியா விஷயம்!

பியூ.: ஆனா, புதிய தனிமத்துக்கு ஹீலியம்னு பேரு வெச்சது லாக்யர்தான். ஹீலியோஸ் என்ற கிரேக்கச் சொல்லுக்கு சூரியன்னு அர்த்தம். அதிலிருந்தே ஹீலியம்கிற பேரு வந்துச்சு.

பிப்.: ஹீலியம் புகழ் முடிஞ்சிடுச்சா?

பியூ.: இல்ல, தொடர்ந்து வேதிவினை நடக்குறதால சூரியனுக்குள் இருக்கும் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறிக்கிட்டே இருக்கு. இந்த அணுக்கரு இணைப்பு வினையாலதான், சூரியன் கணக்கற்ற ஆற்றலை உற்பத்தி செய்யுது.

பிப்.: அப்ப சூரியன் மூலமா, பூமிய வாழ வைக்கிறதே ஹீலியம்தான்னு சொல்லு.

பியூ.: எல்லா புகழும் ஹீலியத்தையே சேரும். வாழ்க ஹீலியம்.

 

 

chemistry-22jpgright

இந்த வாரத் தனிமம்: ஹீலியம்

குறியீடு: He

அணு எண்: 2

பிரபஞ்சத்தில் ஹைட்ரஜனுக்கு அடுத்தபடியாக மிக அதிகமாக உள்ள தனிமம் ஹீலியம். மந்த வாயுக்களில் ஒன்றாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. எல்லா வேதிப்பொருட்களுடனும், இது எளிதில் வினைபுரிவதில்லை.

எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்களிலும் கடலடிக்கு நீந்திச் செல்லும் ஸ்கூபா டைவிங்கிலும் ஹீலியம் உதவுகிறது. நஞ்சற்றதாகவும் எளிதில் அழுத்தப்படக்கூடியதாகவும் இருப்பதால், கடலடி நீந்துதலுக்கான சிறப்பு சுவாசக் கருவிகளில் இது சேர்க்கப்படுகிறது. நட்சத்திர மண்டலங்களை உருவாக்குவதில் ஹீலியம் முக்கியப் பங்கு வகிக்கிறது.


தொடர்புக்கு: valliappan@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x