Last Updated : 20 Nov, 2018 06:22 PM

 

Published : 20 Nov 2018 06:22 PM
Last Updated : 20 Nov 2018 06:22 PM

திறந்திடு சீஸேம் 09: தங்க மலை ரகசியம்!

முதல் உலகப்போரின் விளைவாக, 1929-ல் அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை உண்டானது. பங்குச்சந்தை வீழ்ந்தது. பல வங்கிகள் திவாலாயின. அடுத்த நான்கு வருடங்களுக்கு எழவே முடியவில்லை.

1933-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட், பொருளாதாரத்தைச் சரிசெய்யும் விதமாக ஒரு சட்டம் (United States Gold Reserve Act) கொண்டு வரும் முயற்சியில் இருந்தார். அமெரிக்காவில் யாரும் தங்கத்தை அதிக அளவில் கையிருப்பாக வைத்திருக்கக் கூடாது. தங்கத்தைப் பதுக்குதல் சட்ட விரோதம். தங்கத்தை நிதி அமைச்சகத்திடம் கொடுத்துவிட்டு, பணமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றது அந்தச் சட்டம்.

அமெரிக்காவில் நிலவிய இந்தச் சாதகமற்ற பொருளாதாரச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தார் லியோன் டிரபுகோ. இவர் மெக்சிகோவின் பியுப்லா நகரத்தைச் சேர்ந்த பெரிய பண்ணையார். சுரங்கத் தொழில் அதிபர்.

டிரபுகோ, தனது நண்பரும் பொருளாதார நிபுணருமான கஸ்மேன் மொரடா, நிதித்துறை ஆலோசகர் ரஃபேல், பண்ணையார்களான ரிச்சர்டோ,  கார்லோஸ் ஆகியோரை அழைத்தார். எல்லோருமே மெக்சிகோகாரர்கள். திட்டம் ஒன்றைப் போட்டார்கள்.

1933-ல் மேற்குலகச் சந்தையில் ஓர் அவுன்ஸ் தங்கத்தின் விலை   20-21 டாலர்வரை இருந்தது. மேலே சொன்ன சட்டம் நிறைவேற்றப்பட்டால் 30 - 40 டாலர்வரை விலை உயரும் என்பது மொரடாவின் கணிப்பு. இந்த நேரத்தில், தங்கத்தை டன் கணக்கில் வாங்கிப் பதுக்கி வைத்து, பிறகு விலை அதிகரிக்கும்போது விற்றால் மிக அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று யோசித்தார்கள்.

அமெரிக்காவுக்குச் சென்று தங்கம் வாங்க முடியாது. மெக்சிகோவில்தான் வாங்கிப் பதுக்கி வைக்க வேண்டும். விற்பதற்கான காலம் வரும்போது, சாலை வழியாகக் கொண்டு சென்றால் எல்லையில் பிரச்சினை வரும். எனவே, வான் வழியே கொண்டு செல்லவும் திட்டமிட்டிருந்தார்கள்.

டிரபுகோ, மற்ற மூவருடன் சேர்ந்து தங்கத்தைத் திரட்ட ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 12 டன் சேகரித்தார். ரிச்சர்டோவும் கார்லோஸும் பணம் போட, ரஃபேல், மேலும் 5 டன் தங்கம் திரட்டினார். நாணயங்களாக, நகைகளாக, பிற வடிவில் கிடைத்த 17 டன் தங்கத்தை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றிக்கொண்டனர். அதை அமெரிக்காவுக்குக் கடத்திச் சென்று உரிய நேரத்தில் விற்றுக் பணமாக்கும்வரையிலான முழுப் பொறுப்பையும் டிரபுகோ எடுத்துக்கொண்டார். டிரபுகோவின் பண்ணைவீடு ஒன்றில், ஆயுதம் ஏந்திய ஆட்கள் பாதுகாக்க, தங்கக்கட்டிகள் பதுக்கப்பட்டன.

வில்லியம் எலியாட் என்ற அமெரிக்கர் சிறு விமானங்கள் வைத்திருந்தார். அவரிடம் டிரபுகோ பேசினார். மெக்சிகோவிலிருந்து, நியு மெக்சிகோவின் ‘நான்கு மூலை மலைப் பகுதி’க்குப் பறப்பதற்கான வரைபடம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. (அமெரிக்க மாநிலங்களான நியு மெக்சிகோ, அரிஸோனா, யூடா, கொலரடோ ஆகிய நான்கும் இணையும் பகுதியை Four Corners Area என்பார்கள். அங்கே ‘மெஸா’ என்ற வகை மலைகள் உண்டு. மலையின் உச்சி குவிந்து இல்லாமல், சமதளப்பரப்புடன் காணப்படுவதே மெஸா.)

மொத்தம் 17 டன் தங்கக் கட்டிகள். ஒரு சில வாரங்களில் இரவோடு இரவாகப் பறந்து இந்த இடத்துக்குக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். இடையில் எங்கும் நிறுத்தக் கூடாது. மொத்தம் எத்தனை முறை பறக்க வேண்டியது இருக்கும்? எலியாட், கூட்டிக் கழித்துப் பார்த்து 23 முறை என்றார். ஒரு தடவைக்கு 2500 டாலர் என சம்பளம் பேசினார் டிரபுகோ. மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்ட எலியாட், அடுத்த சில நாட்களில், ‘தங்கப் பயண’த்தை ஆரம்பித்தார்.

மெக்சிகோவில் டிரபுகோவின் பண்ணை நிலத்திலிருந்து எலியாட்டின் சிறு விமானத்தில் தங்கக் கட்டிகள் பாதுகாப்பாக ஏற்றப்பட்டன. நியு மெக்சிகோவை ஒட்டிய நான்கு மூலை மலைப்பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் விமானத்தை இறக்கினார் எலியாட். டிரக் ஒன்று காத்திருந்தது. அதில் கடப்பாரை, மண்வெட்டிகள் சகிதமாக ‘கௌபாய்’ உடையில் டிரபுகோ காத்திருந்தார்.

ஆட்கள், சரக்கை விமானத்திலிருந்து டிரக்குக்கு இடம் மாற்றினர். டிரபுகோ மட்டும் தனியே டிரக்கை ஓட்டிக்கொண்டு மலை மேலே கிளம்பினார். யாரும் பின்தொடரக் கூடாது என்று உத்தரவு. மனிதர்களே இல்லாத ஃபார்மிங்டன் மலைப்பகுதியில் அந்தத் தங்கக்கட்டிகளைப் புதைத்துவிட்டுத் திரும்பினார்.

எலியாட் அங்குமிங்கும் மொத்தம் 23 முறை பறந்தார். 1933 ஜூலை 14-ல் தனது கடைசிப் பயணத்தை முடித்தார். டிரபுகோவும் 23 முறை டிரக் ஓட்டினார். 17 டன் தங்கமும் புதைக்கப்பட்டது.

1934, ஜனவரி 30-ல் அமெரிக்க அரசு Gold Reserve Act-ஐ நிறைவேற்றியது. தங்கத்தின் விலை ஓர் அவுன்ஸுக்கு 35 டாலர் நிர்ணயிக்கப்பட்டது. தங்கத்தைக் கொடுத்து டாலராக மாற்றிக்கொள்ள ஐந்து வருட அவகாசம் வழங்கப்பட்டது. டிரபுகோவும் மற்றவர்களும் இன்னும் விலை ஏறும் என்று காத்திருந்தார்கள். அப்போதே அவர்கள் விற்றிருந்தால்கூட சுமார் ஏழு மில்லியன் டாலர் லாபம் கிடைத்திருக்கும்.

ஆனால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அந்த விலை உயரவே இல்லை. இடைப்பட்ட காலத்தில் டிரபுகோவின் பங்காளிகளான ரிச்சர்டோவும் ரஃபேலும் இறந்து போயிருந்தனர். கார்லோஸ், கார் விபத்து ஒன்றில் சந்தேகத்துக்குரிய விதத்தில் செத்துக் கிடந்தார். இரண்டாம் உலகப்போரில் விமான வீரராகக் கலந்துகொண்ட எலியாட், அதில் இறந்து போனார்.

இரண்டாம் உலகப்போர் நேரத்தில் இருந்த கெடுபிடிகளால் டிரபுகோவால் தங்கத்தை எடுத்து விற்க முடியவில்லை. அதற்குப் பின் தனி நபர்களிடம் கள்ளச் சந்தையில் விற்க அவர் பேரம் பேசியபோது, விஷயம் வெளியே கசிந்தது. அமெரிக்க அரசு, டிரபுகோவிடம் தங்கத்தை வெளியே கொண்டு வரச் சொல்லி எச்சரித்தது.

டிரபுகோ கண்டுகொள்ளவில்லை. அமெரிக்காவுக்குள் காலடி எடுத்து வைக்கவே இல்லை. 1958-ல் மெக்சிகோவிலுள்ள தன் சொத்துகளை விற்றுவிட்டு, ஐரோப்பியக் கண்டத்துக்குச் சென்றுவிட்டார். அதே நேரத்தில் டிரபுகோவின் தங்கம் புதைக்கப்பட்ட ஃபார்மிங்டன் மலைப்பகுதிகளில் தேடுதல் வேட்டையும் ஆரம்பமாகியிருந்தது.

ஆனால், இதுவரை அமெரிக்க அரசாங்கத்தாலோ, தனிப்பட்ட நபர்களாலோ டிரபுகோவின் தங்கத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. டிரபுகோ என்ன ஆனார் என்ற தகவலும் கிடையாது.

டிரபுகோவின் புதையல் மேப், டைரிக் குறிப்புகள் என்று எதுவும் கிடையாது. எந்த இடத்தில் புதைத்தார் என்பது அவரது பங்காளிகளுக்குக்கூடத் தெரியாது. 17 டன் தங்கக் கட்டிகளைப் புதைத்து வைக்க வெறும் 27 கன சதுர அடி நிலம் போதுமென்பதால் இதுவரை யாராலும் அந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தங்க மலை ரகசியம் தொடர்கிறது.

(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x