Published : 20 Nov 2018 06:24 PM
Last Updated : 20 Nov 2018 06:24 PM
உங்களுக்கு ஷேக்ஸ்பியர் தெரியுமா என்று கேட்டால், ‘எங்கோ கேள்விப்பட்டதுபோல் இருக்கிறதே, யார் அவர்? உங்கள் சொந்தக்காரரா?’ என்று ஒருவர்கூட இன்று கேட்க மாட்டார்கள். மாறாக, அவருடைய நாடகங்களை வரி மாறாமல், வார்த்தை பிசகாமல், காற்புள்ளி, புள்ளி, கோடு மறக்காமல் கடகடவென்று கண்களை மூடிக்கொண்டு ஒப்பிப்பவர்கள் உலகம் முழுக்க நிறைந்திருக்கிறார்கள்.
அண்டார்டிகாவில் வசிக்கும் பனிக்கரடிகூட, ’ஓ அவருடைய மெக்பெத்தை எங்கள் மொழியில் படித்திருக்கிறேனே’ என்றுதான் சொல்லும்! வேண்டுமானால் சில காட்சிகள் நடித்துக் காட்டட்டுமா என்றும் அந்தக் கரடி கேட்கக்கூடும்!
இருந்தும் ஷேக்ஸ்பியரைப் பற்றி நமக்குக் கிட்டத்தட்ட ஒன்றுமே தெரியாது. தன் வாழ்நாளில் ஷேக்ஸ்பியர் பத்து லட்சம் வார்த்தைகள் எழுதியிருக்கிறார் என்று தெரியும். அவர் இங்கிலாந்தின் தேசியக்கவி என்று நமக்குத் தெரியும். ஆனால் அவர் எந்த ஆண்டு பிறந்தார்? எப்படி எழுத்தாளர் ஆனார்? ஏன் நாடகம் எழுதினார்? மெக்பெத் அல்லது ஹாம்லெட் எழுத அவருக்கு எவ்வளவு காலம் பிடித்தது?
பென்சிலில் எழுதினாரா அல்லது மை இறகில் எழுதினாரா? அடித்துத் திருத்தி எழுதினாரா அல்லது உட்கார்ந்ததும் அருவிபோல் கடகடவென்று வார்த்தைகள் கொட்டுமா? எழுத வேண்டுமென்றால் படிக்க வேண்டுமே.
அவர் எப்படிப்பட்ட புத்தகங்களைப் படித்தார்? வரலாறும் அரசியலும் படித்தாரா அல்லது கதைப் புத்தகங்களா? நூலகத்தில் உறுப்பினராக இருந்தாரா? புத்தகத்தைக் கிழிக்காமல் மடக்காமல் தேதி தப்பாமல் சமர்த்தாகத் திருப்பிக் கொடுத்தாரா? அவருக்குக் கத்திச் சண்டை பிடிக்குமா? முறுக்கு மீசை வைத்திருந்தாரா?
எதுவுமே தெரியாது. 16, 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த ஷேக்ஸ்பியர் குறித்து ஏதேனும் துப்பு கிடைக்குமா என்று 400 ஆண்டுகளாக ஆய்வாளர்கள் தேடோ தேடு என்று தேடித் தீர்த்துவிட்டார்கள். ஷேக்ஸ்பியர் தன் கைப்பட எழுதிய 14 வார்த்தைகள் மட்டுமே இதுவரை கிடைத்திருக்கின்றன.
அவற்றில் ஆறு முறை அவர் தன் கையெழுத்தை வெவ்வேறு இடங்களில் போட்டிருக்கிறார். சரி, இதுவாவது கிடைத்ததே என்று திருப்திபட்டுக்கொள்ளலாம் என்றால் அங்கும் பிரச்சினை. ஷேக்ஸ்பியர் ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு விதமாகத் தன் பெயரை எழுதியிருக்கிறார்.
வணக்கம் என் பெயர் வில்லியம் ஷேக்ஸ்ப் என்கிறார் ஓரிடத்தில். நான்தான் ஷேக்ஸ்பி என்கிறார் இன்னோரிடத்தில். வில்ம் ஷேக்ஸ்பர் என்று ஓர் ஆவணத்தில் கையெழுத்துப் போடுகிறார். வணக்கம் நண்பர்களே, என் பெயர் விம் ஷேக்ஸ்ப் என்கிறார் ஒரு நாடகத்தில். இல்லை, இல்லை என் பெயர் ஷேக்ஸ்பீ!
ஓ, நோ என்னை நீங்கள் ஷியாக்ஸ்பியாரே என்றே கூப்பிடலாம், என்னது ஷாக்ஸ்ஸிப்பிபிபியர் என்றா சொன்னீர்கள்? பரவாயில்லை, அது நான்தான். ஷெகிஸ்பீர்? ஷோகோஸ்பீர்? ஷெக்காஸ்பியர்? கெஷ்ஷாஸ்பியர்? பாவம், வாய் சுளுக்கிக்கொள்ளப் போகிறது. அது நான்தான்.
நாடகம் எழுதும்போதுகூட இவ்வளவு குழப்பம் ஏற்பட்டிருக்காது. ஆனால் தன் பெயரை எழுதும்போதுதான் நிறையவே தடுமாறியிருக்கிறார் ஷேக்ஸ்பியர். ஆனால் அதற்குக் காரணம் இருக்கிறது. என்ன இருந்தாலும் ஸ்ட்ராட்ஃபோர்ட் நான் பிறந்த ஊர். என்னைத் தூக்கி வளர்ந்த மக்கள் அங்கேதான் இருக்கிறார்கள்.
நான் ஆங்கிலம் எழுதக் கற்றுக்கொண்டது அங்குள்ள பள்ளியில் படித்துதான். லத்தீன் மொழி கற்றுக்கொண்டதும் அங்கேதான். திருமணம் செய்துகொண்டது அங்கே. ஒரு மகளும் இரு மகன்களும் (இரட்டைக் குழந்தைகள்) பிறந்ததும் இந்த ஊரில்தான். எனவே என் பெயரை இங்குள்ளவர்கள் அழைப்பதைப்போலதான் இனி எழுதப் போகிறேன் என்று ஷேக்ஸ்பியர் முடிவு செய்திருக்கலாம்.
1592 வாக்கில் லண்டனில் ஷேக்ஸ்பியரில் இருந்திருக்கிறார். சொந்த ஊரிலிருந்து எப்போது கிளம்பினார், எப்போது வந்து சேர்ந்தார் என்று தெரியவில்லை. ஆனால் அதற்குப் பிறகு அவர் லண்டன்வாசியாக மாறிவிட்டார். ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்கள் அச்சானது இங்கேதான்.
அரங்கேற்றப்பட்டதும் இங்கேதான். வருமானமும் செல்வாக்கும் பெருகியதும் இங்கேதான். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், எங்கள் ஷேக்ஸ்பியர் மூலமாக லண்டனின் புகழ் உலகெங்கும் பரவப் போகிறது என்று சவால் விட்டவர்களும் லண்டனில்தான் இருந்தார்கள்.
அடடா, நம் எழுத்தை இவ்வளவு ரசிக்கிறார்களே என்று உணர்ச்சிவசப்பட்ட ஷேக்ஸ்பியர், இனி லண்டன் என்னை எப்படி அழைக்கிறதோ, அதுதான் என் பெயர் என்று தன் முடிவை மாற்றிக்கொண்டிருக்கலாம்.
ஊருக்குப் போகும்போது ஊர்ப் பாசம். லண்டனுக்குத் திரும்பும்போது லண்டன் பாசம். அங்கே ஒரு பெயர், இங்கே ஒரு பெயர். மூன்றாவதாக இன்னோர் ஊருக்குப் போக நேரும்போது அங்குள்ளவர்களின் வாயில் நுழைவதைப்போல் தன் பெயரைச் சுலபமாக மாற்றி எழுதியிருக்கிறார். இப்படி அவரே எழுதியது போக, அவர் பெயரை ஆளாளுக்குத் தங்களுக்குப் பிடித்ததைப்போல் எழுதியிருக்கிறார்கள்.
ஏ,பி,சி,டியைக் குலுக்கிப்போட்டு என்னென்ன எழுத்துகள் வருகின்றனவோ எல்லாவற்றையும் கலக்கிப் பொட்டலம் போட்டு எழுதியிருக்கிறார்கள். அதனால்தான் 80 வகையான பெயர்கள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. கூப்பிடும்போது இன்னும் என்னென்னவெல்லாம் சொல்லிக் கூப்பிட்டார்களோ, தெரியவில்லை!
அவர் இறுதிவரை பயன்படுத்தாத ஒரு பெயர் இருக்கிறது. அதுதான் நாம் இப்போதும் பயன்படுத்தும் பெயர். வில்லியம் ஷேக்ஸ்பியர். ஆனால் இதை அவர் ஏற்றுக்கொள்வாரா? இந்தப் பஞ்சாயத்துக்கு நீங்களே ஒரு முடிவு சொல்லுங்கள், உங்களை என்ன பெயரைச் சொல்லி அழைப்பது என்று ஷேக்ஸ்பியரிடம் கேட்டால், தனது ரோமியோ ஜூலியட் நாடகத்தைப் பிரித்து அதிலுள்ள ஒரு வரியை நமக்குக் காட்டுவார். ‘நீங்கள் என்ன பெயர் சொல்லி அழைத்தாலும், ரோஜா பூவின் வாசம் இனிமையாகவே இருக்கும்.’
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT