Published : 24 Oct 2018 11:36 AM
Last Updated : 24 Oct 2018 11:36 AM
பிப்பெட்: கொலு முடிஞ்சிடுச்சு, தீபாவளி வரப்போகுது!
பியூரெட்: ஆமா கொலு முடிஞ்சிடுச்சு, தீபாவளி வரப்போகுது டும் டும் டும்!
பிப்.: என்ன பியூ? உற்சாகத்துல பாடவே ஆரம்பிச்சிட்டே.
பியூ.: ஆமா பிப். பொம்மைகளும் எனக்குப் பிடிக்கும், பட்டாசும் எனக்குப் பிடிக்குமே.
பிப்.: அப்ப இந்த வாரம் பட்டாசு பத்திச் சொல்லப் போறியா?
பியூ.: பட்டாசு பத்தி இல்ல, பட்டாசுல பயன்படுத்துற ஒரு வேதிப்பொருளைப் பத்தி.
பிப்.: அது என்ன வேதிப்பொருள்?
பியூ.: ஸ்ட்ரான்சியம்.
பிப்.: இந்தப் பேரை நான் கேள்விப்பட்டதே இல்லைப்பா.
பியூ.: அதனாலதான், நான் அதைப் பற்றி விளக்கிச் சொல்லப் போறேன். மத்தாப்பு, பட்டாசுகள்ல பிரகாசமான சிவப்பு வண்ணத்தைக் கொடுக்கும் வேதிப்பொருள் ஸ்ட்ரான்சியம்தான். உலக பட்டாசுத் தயாரிப்பில் ஸ்ட்ரான்சியத்தின் பயன்பாடு 5 சதவீதம்.
பிப்.: அப்படியா, புதுத் தகவல்தான்.
பியூ.: ஸ்ட்ரான்சியம் கார்பனேட் அடர் சிவப்பு வண்ணத்தைக் கொடுக்குது. இதே அடர் சிவப்பு வண்ணத்தை ஸ்ட்ரான்சியத்துக்கான ‘சுடர் சோதனை’யிலும் பார்க்கலாம்.
பிப்.: சுடர் சோதனைன்னா?
பியூ.: அது வேதிப்பொருட்களைக் கண்டறியப் பயன்படும் முறை. இன்னைக்கு பள்ளி, கல்லூரி ஆய்வகங்களில்கூட இந்த முறை பயன்படுத்தப்படுது. நவீன வேதியியல் ஆராய்ச்சிகளின் தொடக்க காலத்தில் இந்தச் சோதனை பெரிதும் பயன்பட்டிருக்கு. 1790-ல் அடயிர் கிராஃபோர்டு, வில்லியம் கிரூய்க் ஷாங்க் என ரெண்டு விஞ்ஞானிங்க, ஸ்காட்லாந்து கிராமத்தில் நடத்திய சுடர் சோதனையில்தான் இந்தத் தனிமத்தை கண்டறிஞ்சாங்க.
பிப்.: அப்ப சுடர் சோதனை முக்கியமானதுதான்.
பியூ.: சோதனை மட்டுமல்ல, அதைக் கண்டறிஞ்ச ஊரும் முக்கியம்தானே. அவர்கள் கண்டறிஞ்ச ஊரின் பெயர் ஸ்ட்ரான்சியன். அதனால், அந்தத் தனிமத்துக்கும் அந்த ஊர் பெயரையே வைச்சுட்டாங்க.
பிப்.: ஸ்ட்ரான்சியன் – ஸ்ட்ரான்சியம்.
பியூ.: ஆமா, கடைசி எழுத்து மாறும். அதுக்கு 18 வருஷம் கழிச்சு, 1808-ல் ஹம்ப்ரி டேவி மின் பகுப்பாக்கம் மூலமா ஸ்ட்ரான்சியத்தைப் பிரிச்செடுத்தார்.
பிப்.: இதுதானா ஸ்ட்ரான்சியத்தின் கதை?
பியூ.: ஆமா, அதன் தொடக்கம் பத்தின கதை.
பிப்.: ஆனா, பட்டாசு வெடிக்கிறதால நாம சுவாசிக்கிற காத்து மாசுபடுது. குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் வருதுன்னு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் மருத்துவர்களும் திரும்பத் திரும்ப எச்சரிக்கை பண்ணிக்கிட்டே இருக்காங்களே, அதைப் பத்தி உனக்குத் தெரியாதா பியூ?
பியூ.: சீனாவுலேர்ந்து இறக்குமதி செய்யுற பட்டாசை பத்தித்தானே சொல்ற பிப்.?
பிப்.: பட்டாசைக் கண்டுபிடிச்சவங்க என்னமோ சீனர்கள்தான். ஆனால், இன்னைய நிலைமைக்கு உலகின் எந்த மூலைல உற்பத்தி பண்ணின பட்டாசு என்றாலும், அது மாசுபாட்டைத்தான் உருவாக்குது.
பியூ.: வருஷத்துல ஒரு முறை பட்டாசு வெடிக்கிறதால, என்ன பெரிய பிரச்சினை வரப் போகுது?
பிப்.: போன வருஷம் நம்ம நாட்டோட தலைநகர் டெல்லி முழுக்க புகை சூழ்ந்து மக்கள் வெளியே வரவே முடியாம கஷ்டப்பட்டாங்களே. அப்போ பட்டாசு வெடிக்கக் கூடாதுன்னு நீதிமன்றம் உத்தரவு போட்டப்ப, பலரும் அதைப் புரிஞ்சுக்காம பட்டாசுகளைவிட பெருசா சத்தம் போட்டாங்களே.
பியூ.: ஆமா, அதெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு.
பிப்.: அதெல்லாம் நம்ம மக்கள் காதுக்குள்ள போனாலும், தலைக்குள்ள போனதாத் தெரியலையே. கடந்த நூற்றாண்டின் முதல் பாதிவரை கோயில் திருவிழாக்கள்ல சின்ன அளவில் மட்டுமே பட்டாசு வெடிச்சிருக்காங்க. அதுக்குக் காரணம் பல்பு, மின்சாரம், தொலைத் தொடர்பு வசதி எதுவுமே அப்போ பெருசா இல்லை. இருட்டுல திருவிழா நடக்குதுன்னு கிராம மக்களுக்கு அறிவிக்கிறது மாதிரி வேட்டு போட்டிருக்காங்க. ஆனா, இப்பப் பாரு, உன் வீட்டுல அதிகமா வெடிச்சியா, என் வீட்டுல அதிகமா வெடிச்சியான்னு போட்டி போட்டுக்கிட்டு ஆயிரக்கணக்குல மக்கள் காசைக் கரியாக்குறாங்க.
பியூ.: நீ சொல்றது சரிதான். ஆனா பட்டாசு, மத்தாப்புகள்ல மட்டும் ஸ்ட்ரான்சியம் பயன்படல.
பிப்.: அப்புறம்?
பியூ.: முதலாம் உலகப் போருக்கு முன்னாடி ஜெர்மானிய சர்க்கரை ஆலைகள், சர்க்கரை உற்பத்தி முறையில் கோடிக்கணக்கான கிலோ கிராம் ஸ்ட்ரான்சியத்தை பயன்படுத்தி இருக்காங்க.
பிப்.: அப்ப, இப்ப அந்த முறை இல்லேன்னு சொல்ல வர்றே.
பியூ.: ஆமா, பெரிய டப்பா மாதிரியான பழைய டிவி பெட்டிகளைப் பார்த்திருக்கியா?
பிப்.: எங்க வீட்டுல இன்னும் அந்த மாதிரி டிவி தானே வைச்சிருக்கோம்.
பியூ.: அந்தத் தொலைக்காட்சிப் பெட்டி வெளியிடும் எக்ஸ் ரே கதிர்களைத் தடுக்க ஸ்ட்ரான்சியம் பயன்படுது. எக்ஸ் ரே கதிர் தொடர்ந்து மனிதர்களின் உடலின் மீது படக் கூடாது. அதனால், டிவி கேதோடு கதிர் குழாய்களை உருவாக்குறதுல பேரியத்துடன் ஸ்ட்ரான்சியத்தையும் பயன்படுத்துறாங்க. ஆனா, அது போன்ற வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளின் தயாரிப்பு இப்போ குறைஞ்சுக்கிட்டிருக்கு.
பிப்.: ஆமா, இப்ப எல்லாம் கம்ப்யூட்டர் திரை மாதிரியான தட்டையான டிவியைத்தானே மக்கள் விரும்புறாங்க.
பியூ.: அது மட்டுமில்ல, எனக்குப் பிடிச்ச பொம்மைகள்லயும் ஸ்ட்ரான்சியம் இருக்கு.
பிப்.: பொம்மைகள்லயா?
பியூ.: இரவில் ஒளிரும் பொம்மைகள்ல ஸ்ட்ரான்சியம் அலுமினேட் என்ற சேர்மம் பயன்படுத்தப்படுது. ஏன்னா, வேதியியல் ரீதியிலும் உயிரியல் ரீதியிலும் இது எளிதில் வினைபுரியாது. அதனால குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதுங்கிறதாலதான்.
பிப்.: நல்லது பியூ. பார்ப்போம்.
இந்த வாரத் தனிமம் ஸ்ட்ரான்சியம் அணு எண்: 38 குறியீடு: Sr கண்டறியப்பட்ட ஆண்டு: 1790 பிரித்தெடுத்தவர்: ஹம்ப்ரி டேவி. 1808-ல் மின்பகுப்பாக்கம் (எலெக்ட்ரோலைசிஸ்) மூலம் ஸ்ட்ரான்சியத்தைப் பிரித்தெடுத்தார். ஸ்ட்ரான்சியம் ஒரு கார உலோகம். மிருதுவான, வெள்ளி மஞ்சள் நிறம் கொண்டது. எளிதில் வினைபுரியக் கூடியது. பூமியின் மேலோட்டில் அதிகம் கிடைக்கும் 16-வது தனிமம் இது. இன்றைக்கு ஸ்ட்ரான்சியத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு சீனா. |
தொடர்புக்கு: valliappan@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT