Published : 24 Oct 2018 11:37 AM
Last Updated : 24 Oct 2018 11:37 AM
இடம், பொருள், மனிதர், விலங்கு. உங்களுக்கு இந்த நான்கில் எது பிடிக்கும் என்று ஐசக் நியூட்டனிடம் கேட்டிருந்தால் அவர் என்ன சொல்லியிருப்பார் தெரியுமா? மனிதரைத் தவிர, இந்த உலகில் எல்லாமே பிடிக்கும் என்றுதான்.
மரம், செடி, கல், பூ, குரங்கு, சூரியன், சந்திரன் எல்லாமே அவருக்குப் பிடிக்கும். வீட்டுக் கதவில் உள்ள ஒரே ஒரு சிறிய துளை வழியாக உள்ளே வரும் சூரியக் கதிரை மணிக்கணக்கில், சாப்பாடு தூக்கம் இல்லாமல் அவரால் பார்த்து ரசிக்க முடியும். ஒரு கத்தைக் காகிதங்களை எடுத்து வைத்துக்கொண்டு நாள் முழுக்க ஏதேதோ விநோதக் கணக்குகளைப் போட்டுப் போட்டுப் பார்க்க முடியும்.
அல்லது தோட்டத்துக்குச் சென்று புல்வெளியில் மல்லாக்கப் படுத்தபடி மேகம் எப்படி மெல்ல நகர்கிறது என்று ராத்திரி முழுக்கக் கொட்டக் கொட்ட விழித்தபடி பார்க்க முடியும். அல்லது, ஒன்றுமே செய்யாமல் வெறுமனே ஒரு மூலையில் உட்கார்ந்து எதைப் பற்றியாவது யோசிக்கக்கூட அவர் தயார்.
ஆனால், விளையாடப் போகலாமா நியூட்டன் என்று யாராவது அபூர்வமாக அழைத்தால் போதும். மன்னிக்கவும் ரொம்ப முக்கியமான வேலை அல்லது ஒரே தலைவலி என்று சாக்கு சொல்லி, தட்டிக் கழித்துவிடுவார். ஒருவருடனும் பேசக் கூடாது, விளையாடக் கூடாது என்று சபதம் எல்லாம் இல்லை. ஆனால் காமாசோமா என்று ஏதாவது பேசினால் நியூட்டனுக்கு எரிச்சல் வந்துவிடும்.
நாம் ஏன் நீளம், பரப்பு, யூக்கிளிடிய வடிவியல், இயற்கணிதம், பிதாகரஸ், பகுமுறை, உகப்புநிலைப்படுத்தல் என்று ஏதாவது ஆர்வமூட்டும் விஷயங்களைப் பேசக் கூடாது என்று கேட்பார். ‘ஐயோ பேய்’ என்பதுபோல் நண்பர்கள் ஓடிவிடுவார்கள். அவனிடம் மட்டும் போய்விடாதே, கூறாக்க வடிவியலின் அடிப்படைப் பண்புகள் என்று சொல்லி நம்மை ஒரு வழி செய்துவிடுவான் என்று மற்ற நண்பர்களையும் எச்சரித்து வைப்பார்கள்.
மொத்தத்தில், நியூட்டனைப் பார்த்து மற்றவர்கள் ஓடுவார்கள். மற்றவர்களைப் பார்த்து நியூட்டன் ஓடுவார். விளைவு? எப்போதும் நியூட்டன் தனியாகவே இருப்பார்.
இப்படித்தான் ஒரு நாள் நியூட்டன் தோட்டத்தில் அமர்ந்து சூரியன் குறித்தும் அதிலிருந்து வரும் ஒளி குறித்தும் சிந்தித்துக்கொண்டிருந்தார். உலகையே மறந்து கண்களை மூடிக் கிடந்தபோது தொப்பென்று வந்து விழுந்தது ஓர் ஆப்பிள் பழம். இது நடந்தது இங்கிலாந்தில் உள்ள லிங்கன்ஷெர் என்னும் இடத்தில்.
1666-ம் ஆண்டில். அப்போது நியூட்டனுக்கு கிட்டத்தட்ட 23 வயது. ஆப்பிள் விழும் சத்தம் கேட்டதும் நியூட்டன் சட்டென்று நிமிர்ந்து பார்த்தார். யோசித்துப் பாருங்கள், ஆண்டாண்டு காலமாகப் பல ஆப்பிள்கள் தினம் தினம் விழுந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இந்த ஆப்பிளை மட்டும் வரலாறு அழுத்தமாக நினைவில் வைத்திருக்கிறது. காரணம் ஆப்பிள் அல்ல, நியூட்டன்.
படபடவென்று அவர் சிந்தனை புதிய திசையில் விரியத் தொடங்கியது. இந்த ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது? ஆப்பிள் மட்டுமா, காய்ந்த சறுகுகளும் கீழேதான் விழுகின்றன. மழைத்துளிகள் கீழே விழுகின்றன. சூரியக் கதிர்களும்கூட கீழேதான் விழுகின்றன. ஆனால் சூரியன்? நிலா? நட்சத்திரங்கள்? அவை மட்டும் ஏன் கீழே விழாமல் இருக்கின்றன? பொருட்கள் கீழே விழுவதற்கும் பூமிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
ஆப்பிள் கீழே விழுகிறதா அல்லது பூமியால் அது ஈர்க்கப்படுகிறதா? அப்படியானால் நிலாவை மட்டும் ஏன் பூமி தன்னை நோக்கி ஈர்ப்பதில்லை? ஆப்பிளைப்போலவே அதுவும் வந்து விழ வேண்டியதுதானே? ஒரு பந்தை மேலே தூக்கி எறிந்தால் அது வேகமாக மேலே பறந்து செல்கிறது. ஆனால், ஒரு கட்டத்தில் வேகம் குறைந்து பொத்தென்று அதுவும் கீழேதான் விழுகிறது. ஏன்?
இப்படி யோசிப்போம். ஒருவேளை நிலா இருக்கும் உயரத்தில் ஆப்பிள் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? அதுவும் அங்கேயே நின்றபடி அழகாகச் சிரித்துக் கொண்டிருக்குமா? ஆப்பிள் இருந்த இடத்தில் நிலா இருந்திருந்தால் அது இப்படித்தான் தொப்பென்று கீழே வந்து விழுமா? எல்லாவற்றையும் பூமிதான் ஈர்க்கிறது.
ஆனால் நிலாவோடு அது வம்பு வைத்துக்கொள்வதில்லை. நீ யாரோ, நான் யாரோ என்று முகத்தைத் திருப்பிக்கொள்கிறது. ஆனால், இந்த அப்பாவி ஆப்பிளை மட்டும் அடிக்கடி பிடித்து இழுக்கிறது. ஏன்? நிலாவைவிட ஆப்பிள்தான் பூமிக்குப் பக்கத்தில் இருக்கிறது என்பதாலா?
நியூட்டன் விறுவிறுவென்று வீட்டுக்கு விரைந்து சென்று கணக்குப் போட ஆரம்பித்தார். பூமிக்கும் ஆப்பிளுக்குமான உயரத்தைச் சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். நிலாவுக்கும் பூமிக்குமான உயரத்தைக் கண்டுபிடிக்க முடியுமா? ஆப்பிள் ஒரே நேர்க்கோட்டில் மேலிருந்து கீழாகப் பயணம் செய்கிறது.
ஆனால் நிலாவோ மேலிருந்து கீழாக அல்லாமல் நீள்வட்ட வடிவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இந்தப் பாதையை யார் முடிவு செய்வது? ஆப்பிள் கீழே விழுவதற்கும் நிலா சுற்றி வருவதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இந்த இரண்டுக்கும் பூமியோடு என்ன தொடர்பு? இதை எல்லாம் கணிதத்தைக் கொண்டு புரிந்துகொள்வது சாத்தியமா?
புவியீர்ப்பு விசையின் ரகசியத்தை நியூட்டன் கண்டுபிடித்ததற்கு அந்த ஆப்பிளுக்குதான் நாம் நன்றி சொல்ல வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம். ஆப்பிள் விழுந்தது, அதை நியூட்டன் பார்த்தார் என்று மட்டும்தான் வரலாறு சொல்கிறது. ஆனால் நியூட்டனைப் பிடிக்காத அவருடைய நண்பர்களில் யாரோ ஒருவர் ‘அந்த ஆப்பிள் சும்மா விழவில்லை, நியூட்டனின் தலையில்தான் விழுந்தது’ என்று கதையைக் கொஞ்சம் மாற்றிவிட்டார்கள். ஆனால், இதற்கெல்லாம் அவர் கவலைப்படுவார் என்றா நினைக்கிறீர்கள்?
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT