Published : 03 Oct 2018 12:45 PM
Last Updated : 03 Oct 2018 12:45 PM
பிப்பெட்: என்ன பியூ, எப்படியிருக்க?
பியூரெட்: நான் நல்லாயிருக்கேன்பா, நீ நல்லாயிருக்கியா?
பிப்.: சூப்பரா இருக்கேன். ஆமா, மனித உடலில் உள்ள தனிமங்களைப் பத்திப் போன வாரம் சொன்னியே, அது முடிஞ்சிடுச்சா?
பியூ.: என்ன பிப், ஆறு தனிமங்களைப் பத்தித்தானே சொல்லியிருந்தேன். இன்னும் நிறையா இருக்கே!
பிப்.: ஆனா, இந்த வாரத்தோட மனித உடலோட தனிமங்கள் முடிஞ்சிடும்தானே?
பியூ.: நீ பயப்படாத பிப், நிச்சயம் முடிஞ்சிடும். போன தடவ கால்சியம், பாஸ்பரஸ் பத்தியெல்லாம்கூட நான் முழுசா சொல்லலை.
பிப்.: கால்சியம்னா வெள்ளையா இருக்குமே?
பியூ.: ஆமா, அது ஒண்ணுமில்ல சுண்ணாம்புதான். அதுதான் மனித எலும்புகள், பற்களை உருவாக்குது.
பிப்.: அது எப்படி அவங்களுக்குக் கிடைக்குது?
பியூ.: பால், கேழ்வரகு போன்ற உணவு மூலமாத்தான்.
பிப்.: அடுத்ததா நீ சொல்லப் போறது வெயில் பட்டாலே தீப் பற்றிக்கொள்ளுமே, அந்த பாஸ்பரஸ் பற்றித் தானே?
பியூ.: அதே பாஸ்பரஸ்தான். மனித உடலின் அடிப்படை ஆதாரங்களான ஆர்.என்.ஏ., டி.என்.ஏ.வை கட்டமைப்பதில் பாஸ்பரஸ் முக்கிய பங்கு வகிக்குது.
பிப்.: நல்லது, நல்லது. அப்ப சுண்ணாம்பும் பாஸ்பரஸும் உடலுக்கு அவசியம்தான்.
பியூ.: அடிப்படைத் தனிமங்களுக்கு அடுத்ததா மேக்ரோமினரல்ஸ் என்று அழைக்கப்படும் கந்தகம், பொட்டாசியம், குளோரின், சோடியம், மக்னீசியம் ஆகிய ஐந்து தனிமங்கள் வருகின்றன.
பிப்.: இதெல்லாம் என்னதான் பண்ணுது?
பியூ.: மனுச உடலில் உள்ள திரவங்களுக்கும் உடலின் கட்டுமானத்துக்கும் இவை அவசியம்.
பிப்.: அப்படின்னா ஆறு கூட்டல் ஐந்து, மொத்தம் 11. இந்த 11 தனிமங்கள் இருந்தா மனித உடலுக்குப் போதும்தானே பியூ?
பியூ.: இல்லைப்பா, அவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிடுமா?
பிப்.: ஓ, இன்னும் இருக்கா?
பியூ.: இருக்கு இருக்கு. மனித உடலில் உள்ள எட்டுத் தனிமங்களை 'டிரேஸ் எலிமென்ட்ஸ்'னு சொல்றாங்க. இந்த அத்தியாவசியத் தனிமங்கள் ஒரு சில கிராம்களில் இருந்து சில மில்லிகிராம் அளவுவரை தேவைப்படுகின்றன.
பிப்.: மில்லிகிராம் அளவுதானே, அது குறைஞ்சிட்டா அப்படி என்ன ஆகும்?
பியூ.: மனிதர்கள் சாப்பிடும் உணவில் இருந்து இந்தத் தனிமங்கள் அனைத்தையும் அவர்களோட உடல் கிரகித்துக்கொண்டே இருக்கிறது. தேவையான அளவைவிட ஒரு தனிமம் பற்றாக்குறையாகும்போது, உடல் கோளாறாக - குறைபாடாக வெளிப்படும்.
பிப்.: நிஜமாவா பியூ?
பியூ.: இரும்புச்சத்துக் குறைபாட்டால் ரத்தசோகை உருவாகிறது என்று 17-ம் நூற்றாண்டில் விஞ்ஞானிங்க கண்டறிஞ்சாங்க.
பிப்.: ஆமா, மனுசங்கள்ல சிலர் சோகை பிடிச்ச மாதிரி சுறுசுறுப்பு குறைவா இருக்கிறதுக்கு, இதுதான் காரணம்னு சொல்வாங்க.
பியூ.: அதே மாதிரி அயோடினும் உடலுக்குச் சிறிதளவு அவசியம்.
பிப்.: அது இல்லேன்னா?
பியூ.: வளர்ச்சிக் குறைபாடு ஏற்படலாம்.
பிப்.: அப்படியா! உடலில் அத்தியாவசியத் தனிமங்கள் மில்லி கிராம் அளவு குறைஞ்சாலும், ஏன் பிரச்சினைகள் இப்படி பூதாகரமாகின்றன?
பியூ.: அதற்குக் காரணம், உடலின் வேதிவினைத் தொடர்கண்ணிகளில் அந்தத் தனிமங்களும் இடம்பெற்றிருப்பதுதான். இவை குறைந்துபோவதால் அந்த வேதிவினைகள் பாதிக்கப்படும். வைட்டமின் பி12 என்பது கோபால்ட்டின் ஒரேயொரு அணுவைக் கொண்டது. இந்த அத்தியாவசியத் தனிமம் உடலில் பற்றாக்குறையாகும்போது, வைட்டமின் பி12 சத்துக்கான மூலக்கூறுடன் தொடர்புடைய மற்ற மூலக்கூறுகளையும் சேர்த்தே பாதிக்கிறது. இதனால் பிரச்சினை பெரிதாகிறது.
பிப்.: சரி, வைட்டமின் பி 12 பற்றாக்குறை என்ன பாதிப்பை ஏற்படுத்துது?
பியூ.: இதனால் பாதிக்கப்பட்டவங்க பலவீனமாகவும் அடிக்கடி மயக்கம் வர்றதுபோலவும் இருப்பாங்க.
பிப்.: இந்தப் பற்றாக்குறைகளை எல்லாம் குணப்படுத்த முடியாதா?
பியூ.: முடியும். மருந்து, சிறப்பு உணவு மூலமா குணப்படுத்தும் வேலையை மருத்துவர்கள் செய்றாங்க. இவற்றோட செம்பு, மாங்கனீஸ், துத்தநாகம் போன்றவையும் அத்தியாவசியத் தனிமங்கள் பட்டியலில் இருக்கு.
பிப்.: பட்டியல் முடிஞ்சிடுச்சா, இன்னும் இருக்கா?
பியூ.: ஆர்செனிக், செலெனியம், குரோமியம் போன்றவை புற்றுநோயைத் தூண்டிவிடக்கூடியவை. குறிப்பா இவற்றை வாயுவாக சுவாசித்தால் உடலுக்குப் பிரச்சினை, நோய் ஏற்படலாம். அதேநேரம் மிக நுணுக்கமான அளவில் உணவு வழியே இவை கிரகித்துக்கொள்ளப்படலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பிப்.: ம்ம்ம்... இத்தனை தனிமங்கள் மனித உடலுக்குள் இருக்குதா?
பியூ.: ஆமா, சில தனிமங்கள் மில்லிகிராம் அளவில் உடலுக்குத் தேவைப்படலாம். அதேநேரம், சமாளிக்க முடியாத அளவுக்கு உடலில் சேர்ந்தால் நோய் உருவாகவும் காரணமாகலாம்.
பிப்.: எதுவுமே, தேவையான அளவுல இருந்தா பிரச்சினையே இல்ல, அப்படித்தானே?
பியூ.: ஆமா பிப்.
பிப்.: இந்த வாரப் பேச்சும் பெரிசாகிட்டே போகுது, முடிச்சுக்குவமா?
பியூ.: ரொம்ப கிண்டல் பண்ணாத, முடிச்சுக்குறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT