Published : 03 Oct 2018 12:31 PM
Last Updated : 03 Oct 2018 12:31 PM
‘எங்கே தோண்டலாம்?’ என்று கேட்டார் விக்டர் சரியானிடி. அவர் ரஷ்யாவைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர். 1978-ல் சோவியத் அரசும் ஆப்கனிய அரசும் இணைந்து விக்டர் தலைமையில் தொல்லியல் ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. அவர்கள் வட ஆப்கனிஸ்தானின் ஜோவ்ஸ்ஜான் பிரதேசத்தில் ஆய்வு மேற்கொள்ள இருந்தனர்.
‘‘Tillya Tepe என்ற மலை இருக்கிறது. பாக்திரியா ராஜ்ஜியத்தை ஆண்ட ராஜ வம்சத்தினரை இந்தப் பகுதியில்தான் புதைத்திருக்கிறார்கள். இங்கே ஏழு கல்லறைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு கல்லறையும் சுமார் இரண்டாயிரம் வருடம் பழமையானவை. இன்னொரு விஷயம், இதன் பெயருக்குத் ‘தங்க மலை’ என்று அர்த்தம்’’ என்றார் நடேர் ரசோலி. அவர் ஆப்கனிஸ்தான் தொல்லியில் துறையின் தலைவராக இருந்தவர். விக்டரும் நடேரும் சேர்ந்து அந்தத் ‘தங்க மலை’யில் இருந்த கல்லறைகளைத் தோண்ட முடிவு செய்தனர். அன்றைய பாக்திரியா ராஜ்ஜியம் என்பது இன்றைய ஆப்கனிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் பகுதிகள் அடங்கியது. இந்துகுஷ் மலைகளுக்கு வடக்கிலும், அமு தர்யா நதிக்குத் தெற்கிலும் அமைந்தது. மாவீரர் அலெக்சாண்டர், அவரது தளபதி செலூகஸ் போன்றோர் ஆட்சி செய்தது. கிரேக்கர்கள், சாகா பழங்குடியினர், குஷானர்கள், ஹன் சீனர்கள் என்று பலரும் பல்வேறு காலகட்டங்களில் அதனை ஆண்டனர்.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பாக்திரியா இஸ்லாமிய ஆட்சியாளர்களின் பிடியில் வந்தது. தொல்லியல் ஆய்வாளர் விக்டர் தலைமையில், நடேரின் வழிகாட்டுதலில் அந்தப் பழமையான கல்லறைகள் தோண்டப்பட்டன. அவர்கள் எதிர்பார்த்தபடியே அவற்றில் மனிதர்களின் எலும்புக்கூடுகள் இருந்தன. அவர்கள் எதிர்பார்த்ததுக்கும் மேல் ஒவ்வொரு கல்லறையிலும் தங்கம் குவிந்திருந்தது. அவை யாருடைய எலும்புக்கூடுகள் என்று துல்லியமாகச் சொல்ல இயலவில்லை. ஆனால், அந்த எலும்புக்கூடுகள் கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டது.
அப்போது அந்தப் பகுதியைச் சிதியப் பழங்குடியினர் அல்லது பார்த்தியப் பழங்குடியினர் ஆண்டிருக்கலாம். அவர்களது உடல்கள் இந்தக் கல்லறைகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்தார்கள். சீனப் பழங்குடியினரான யுவஸி (Yuezhi) வம்சத்தினரது ராஜ்ஜியமாக பாக்திரியா அப்போது இருந்திருக்கலாம். அந்த ராஜ குடும்பத்தினரது உடல்கள் இங்கே புதைக்கப் பட்டிருக்கலாம் என்றும் சிலர் சொன்னார்கள். எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
ஏழில் ஆறு கல்லறைகள் தோண்டப்பட்டன. அதில் ஒன்றில் மட்டும் ஆண் எலும்புக்கூடு கிடைத்தது. மற்ற ஐந்திலும் பெண் எலும்புக்கூடுகள். அவர் அரசர், மற்ற ஐவரும் அவரது மனைவிகளாக இருக்கக்கூடும். ஏனென்றால் அரசர், அரசிகளைத்தான் இவ்வளவு தங்கத்துடன் புதைக்கும் வழக்கம் அப்போது இருந்தது. இறந்தபின் வேறு உலகத்துக்கு அவர்கள் செல்வார்கள். அப்போது இந்தச் செல்வங்கள் அவர்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையுடன் புதைத்தார்கள். தங்க வளையல்கள், காதணிகள், அட்டிகைகள், காப்புகள், மோதிரங்கள் என்று விதவிதமான நகைகள், இரண்டு தங்கக் கிரீடங்கள், தங்கச் சிலைகள், ஆயுதங்கள், நாணயங்கள், தங்கம் – வெள்ளி – யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் – இவை அனைத்தும் சேர்த்து சுமார் 22,000 பொருள்கள் அந்தக் கல்லறைகளில் இருந்து சேகரிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பை அளவிடவே முடியாது.
நகைகள் நுணுக்கமான வேலைப் பாடுகளுடனும், மதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்டும் உருவாக்கப் பட்டிருந்தன. சிதியர்களே இப்படிப்பட்ட வேலைப்பாடுகள் கொண்ட நகைகளைச் செய்வதில் வல்லவர்கள் என்பது ஆய்வாளர்களது கருத்து. விக்டரும் நடேரும் அந்தச் செல்வங்களை எல்லாம் கவனமாகச் சேகரித்து, காபுல் தேசிய அருங்காட்சியத்தில் ஒப்படைத்தனர்.1979-ல் சோவியத், ஆப்கனிஸ்தான் மீது படையெடுத்தது. அந்தப் போரினால் உள்நாட்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. அப்போது காபுல் அருங்காட்சியக ஊழியர்கள், பாக்திரிய செல்வங்களை அதிபர் மாளிகைக்கு அருகில் இன்னொரு அருங்காட்சியகத்தில் பத்திரப்படுத்தினர். பிறகு அருங்காட்சியகத்தின் தலைமை அதிகாரி உமர் கான், அந்தச் செல்வங்களை சென்ட்ரல் ஆப்கன் வங்கியின் பாதுகாப்புக் கிடங்கில் ஒரு ரகசிய அறையில் பத்திரப்படுத்தினார். அமருதீன் அஸ்கர்ஸாய் என்பவரிடம் அதற்கான சாவிகள் வழங்கப்பட்டிருந்தன. அவர் நம்பிக்கைக்குரிய ஐந்து நபர்களிடம் சாவிகளைப் பிரித்து வழங்கியிருந்தார். அவர்களைப் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்பட்டது.
1990. தாலிபன்களின் பிடியில் ஆப்கனிஸ்தான் சிக்கியது. அங்கிருந்த கலாசாரத்தை அழிக்கும் விதமாக அருங்காட்சியகத்திலிருந்த 70 சதவீதப் பழம்பொருட்களை அபகரித்து, அவற்றை வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். கிடங்குக்குப் பொறுப்பாக இருந்த அமருதீன், தன் சாதுரியத்தால் பாக்திரிய செல்வங்களைக் கஷ்டப்பட்டுக் காப்பாற்றி வந்தார். ஒருமுறை கிடங்கின் அந்த ரகசிய அறையைக் கண்ட தாலிபன்கள், அதில் என்ன இருக்கிறது என்று கேட்க, ‘பழைய சீன ஜாடிகள்’ என்று சமாளித்தார். 2003-ல் தாலிபன்களின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போதுதான் விக்டர் தோண்டாமல் விட்டிருந்த ஏழாவது கல்லறை தோண்டப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டதும் தெரிய வந்தது. பாதுகாப்புக் கிடங்கையும் திறக்க முடியவில்லை. ஏனென்றால் சாவிகள் வைத்திருந்த ஐந்து பேர் யாரென்று கண்டுபிடிக்க இயலவில்லை. கடும் முயற்சிக்குப் பிறகு ஐந்து பேரும் கண்டுபிடிக்கப்பட்டனர். சாவிகள் கிடைத்தன.
திறந்திடு சீஸேம்! ரகசிய அறை திறக்கப்பட்டது. பாக்திரிய தங்கப் பொக்கிஷங்கள் சேதாரமின்றி மீட்கப்பட்டன. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்தப் பொக்கிஷங்கள், இப்போது காபுல் அருங்காட்சியகத்தில் பத்திரமாக இருக்கின்றன.
(பொக்கிஷங்களைத் தேடுவோம்!) கட்டுரையாளர், எழுத்தாளர் தொடர்புக்கு: mugil.siva@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT