Last Updated : 10 Oct, 2018 09:57 AM

 

Published : 10 Oct 2018 09:57 AM
Last Updated : 10 Oct 2018 09:57 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: என்னால் இப்போது பார்க்க முடிகிறது!

“அம்மா ஏன் எப்போதும் இருட்டாகவே இருக்கிறது? சூரியன் எங்கே போய்விட்டது? எப்போது வெளிச்சம் வரும்? எப்போது நான் வெளியில் போகலாம்? எப்போது விளையாடலாம்?” என்று ஓயாமல் நச்சரித்துக்கொண்டிருந்த மூன்று வயது லூயி பிரெயிலுக்கு என்ன பதில் சொல்வது என்று அம்மாவுக்குத் தெரியவில்லை.

அப்பாவோ, இதற்கு நான்தான் காரணம் என்று தினம் தினம் துடித்துக்கொண்டிருந்தார். ”

தோல் பொருட்களை உருவாக்குவதற்காக நான் வைத்திருந்த குத்தூசியை, பிரெயில் எடுத்து விளையாடியதை எப்படிக் கவனிக்காமல் போனேன்? கண்ணில் குத்திக்கொள்ளும்வரை என்ன செய்துகொண்டிருந்தேன்?”

பிரெயில் வீறிட்டு அலறியவுடன் பதறியடித்து தூக்கிக்கொண்டு மருத்துவரிடம் ஓடோடிதான் போனார். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முந்தைய பிரான்ஸில் மருத்துவம் இன்றுள்ளதைப்போல் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை என்பதால் குழந்தையின் ஒரு கண் பார்வை பறிபோய்விட்டது. சில நாட்களில் இன்னொரு கண்ணும் பாதிப்படைந்தது. எல்லாமே இருட்டாகிவிட்டதா என்று கண்களைக் கசக்கியபடி பிரெயில் கேட்டபோது, அம்மாவும் அப்பாவும் குழந்தையைக் கட்டியணைத்துக் கொண்டார்கள்.

அவர்களுடைய வேதனையை அதிகரிக்கும்படி பிரெயிலிடமிருந்து தினம் தினம் கேள்விகள் வந்துகொண்டே இருந்தன. என்னால் பார்க்கத்தான் முடியவில்லை, விளையாடவும் கூடாதா? விளையாடத்தான் கூடாது, படிக்கவும் முடியாதா? அக்கம் பக்கத்தில் இருப்பவர்களைப்போல் பள்ளிக்கூடத்துக்குக் கூடவா நான் போகக் கூடாது? வீட்டுக்குள்ளே இருட்டில் எத்தனை நாள்தான் அடைந்து கிடப்பது அம்மா?

பார்வையற்ற குழந்தைகளுக்கான ஒரு பள்ளியைத் தேடிக் கண்டுபிடித்து பிரெயிலைக் கொண்டுபோய்ச் சேர்த்தபோது அவர் வயது பத்து. மெல்ல மெல்ல உலகம் விரிவடைவதுபோல் இருந்தது பிரெயிலுக்கு. கதை பேசுவதற்குப் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். படிக்கவும் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். ஒரு பெரிய மரத்துண்டு இருக்கும். அதில் பூதம்போல் ஓர் எழுத்தைப் பெரிதாகப் பொறித்து வைத்திருப்பார்கள். அதைத் தொட்டுப் பார்த்து ‘A’ என்று உச்சரிக்க வேண்டும். பிறகு இன்னொரு மரத்துண்டு. இந்த முறை ‘B’. இப்படிதான் ‘A’,‘B’ கற்றுக் கொடுப்பார்கள். அம்மா, இன்று என்ன கற்றுக்கொண்டேன் தெரியுமா என்று உற்சாகமாகக் கத்தியபடி வீட்டுக்கு ஓடிவருவார் பிரெயில்.

எழுத்து முடிந்ததும் எண்கள். பிறகு எழுத்துகளைக் கூட்டி சொற்கள். நாளை வாக்கியம் என்றார் ஆசிரியர். பிரெயில் பரபரத்தார். இல்லை, இன்றே நான் கதை படிக்க வேண்டும். மரத் துண்டுகள் போதும், எனக்கு நிஜமான புத்தகம் வேண்டும் என்றார். இந்தா என்று ஒரு கதை புத்தகத்தைக் கொண்டுவந்து வைத்தார்கள். ஆர்வத்துடன் பாய்ந்து சென்று பற்றிக்கொள்ள முயன்றார் பிரெயில். முடியவில்லை. அந்தப் புத்தகம் அவரைவிடப் பெரிதாகவும் அவரைவிடக் கனமாகவும் இருந்தது. காகிதங்களுக்குப் பதில் தடித்த அட்டைகள். அப்போதுதானே எழுத்துகளைப் பொறிக்கமுடியும்?

ஒரு பக்கத்தைத் திருப்ப வேண்டும். அதில் ஓர் எழுத்து இருக்கும். தொட்டுப் பார்த்து ‘ஒ’ என்று சொல்ல வேண்டும். அடுத்த பக்கத்தில் ‘ரு’ இருக்கும். அடுத்ததில் ‘ஊ’. பல மணி நேரம் செலவழித்து, ஏராளமான பக்கங்களைத் திருப்போ திருப்பு என்று திருப்பி, கை வலியே வந்துவிடும்போதுதான் கதை முடியும். அந்தக் கதை என்னவென்று நினைக்கிறீர்கள்? ஓர் ஊரில் ஒரு நரி. அதோடு கதை சரி.

அடப் போங்கப்பா என்று சலித்துக்கொண்டார் பிரெயில். இந்த நரிக்கே இவ்வளவு கஷ்டப்பட்டால் நான் எப்படிப் பெரிய பெரிய சாகசக் கதைகளையும் தேவதைக் கதைகளையும் படிப்பது? முதல் வாக்கியத்தைப் படித்து முடித்து அடுத்ததை ஆரம்பிப்பதற்குள் இதுவரை என்ன படித்தோம் என்பதே மறந்துவிடுகிறதே. இதற்கு வேறு வழியே கிடையாதா? நாய்குட்டியைப்போல் அழகாகவும் பந்துபோல் கனமில்லாமலும் புத்தகம் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆசையாக அள்ளியெடுத்து மடியில் வைத்துக்கொண்டு ரசித்துக்கொண்டே இருக்கலாமே!

கவலையுடன் அப்பாவின் அறைக்குள் நுழைந்தார் பிரெயில். குழந்தையாக இருந்தபோது இந்த அறைக்குள் மட்டும் நான் நுழையாமல் இருந்திருந்தால்? மேஜை மீது இருந்த குத்தூசியைத் தேடி எடுத்து கையில் பிடித்துக்கொண்டார். இதோ, இதுதானே என்னை இருளில் தள்ளியது? இந்தப் பொல்லாத ஊசி மட்டும் இல்லாமல் போயிருந்தால் நானும் மற்றவர்களைப்போல் பெரிய நூலகங்களுக்கு எல்லாம் சென்று பலவிதமான கதைகளையும் கவிதைகளையும் பாடல்களையும் நாடகங்களையும் படித்து ரசித்திருக்கலாம் அல்லவா? குத்தூசியைத் தடவியபடி அப்படியே சில நிமிடங்கள் நின்றுகொண்டிருந்தார் பிரெயில். சட்டென்று ஒரு மின்னல் வெட்டியதுபோல் இருந்தது.

பரபரவென்று விரைந்து ஒரு காகிதத்தை எடுத்தார். ஊசியைக் கொண்டு காகிதத்தில் குத்தி சிறிய ஓட்டைகளைப் போட்டார். பிறகு தன் விரலைக் கொண்டு அந்த ஓட்டைகளைத் தீண்டினார். மெலிதாகத் தடவினார். மேலும் கீழுமாக விரலை அலையவிட்டார். தனது மெலிந்த விரலைக் கொண்டு அவரால் காகிதத்தில் இருந்த மேடுகளையும் பள்ளங்களையும் உணரமுடிந்தது. பிரெயிலின் முகம் ஆச்சரியத்தில் மலர்ந்தது. சில காகிதங்களை எடுத்துவந்தார். அவரது மூளை கடகடவென்று கணக்குப் போட ஆரம்பித்தது. நிறுத்தி நிதானமாக ஊசியைக் கொண்டு ஆறு புள்ளிகளை அவர் காகிதத்தில் வைத்தார்.

“போதும், இனி இது போதும். அட்டைகளும் மரக்கட்டைகளும் இனித் தேவைப்படாது. ஆயிரக்கணக்கான வார்த்தைகளை, நூற்றுக்கணக்கான பக்கங்களை அழகிய ஆறு புள்ளிகளுக்குள் அடக்கிவிடலாம். நான் மட்டுமல்ல, இனி பார்வை இல்லாத எந்தக் குழந்தையும் கஷ்டப்பட வேண்டாம். இனி கவலையில்லை, நண்பர்களே.

இரு கண்கள் படிக்க வேண்டிய அனைத்தையும் உங்களுடைய ஒரு சிறிய விரல் படித்துமுடித்துவிடும். இரு கண்களைக் கொண்டு காண வேண்டிய உலகை ஒரு விரலைக் கொண்டு நீங்கள் இனி தரிசித்துவிடுவீர்கள். நீங்கள் படிக்கப் படிக்க உங்களுக்குள் வெளிச்சம் பரவுவதை நீங்கள் உணரலாம். உங்களுக்குள் மட்டுமல்ல, உங்களைச் சுற்றிலும் அந்த வெளிச்சத்தைப் பரவவிடுங்கள். பிறகு இருட்டு எப்படி வருகிறது என்று பார்த்துவிடுவோம்.”

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x