Published : 28 Aug 2018 06:32 PM
Last Updated : 28 Aug 2018 06:32 PM
உலகம் முழுவதும் பரவலாகச் சுவைக்கப்படும் ஓர் இனிப்புப் பொருள் சாக்லெட்தான். டார்க் சாக்லெட், மில்க் சாக்லெட், நட்ஸ் சாக்லெட், ட்ரை ஃப்ரூட் சாக்லெட் என்று விதவிதமான சாக்லெட்கள் வந்துவிட்டன.
சாக்லெட் என்றதும் நம் நினைவுக்கு வருவது கட்டியாகச் சுவைத்துச் சாப்பிடக் கூடிய இனிப்புப் பொருள்தானே! ஆனால் கோகோ விதைகளிலிருந்து பெறப்படும் அனைத்துப் பொருட்களுக்குமே சாக்லெட் என்றுதான் பெயர். சாக்லெட்டின் வரலாற்றில், பெரும்பாலும் சாக்லெட் என்பது குடிக்கக்கூடிய பானமாகவே இருந்திருக்கிறது. கடந்த இரு நூற்றாண்டுகளுக்குள்தான் கடிக்கக்கூடிய சாக்லெட் உருவாகியிருக்கிறது.
மத்திய அமெரிக்காவில்தான் கோகோ மரங்கள் செழித்து வளர்ந்தன. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய மெக்சிகோ பகுதியில் வாழ்ந்த மக்கள், கோகோவைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். மாயன் மக்களும் அஸ்டெக் மக்களும் கோகோவுக்கு மந்திர சக்தி இருப்பதாக நம்பினர்.
அதனால் குழந்தை பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளின்போது, கோகோவைப் பயன்படுத்தினர். விலைமதிப்புமிக்கப் பொருளாகக் கருதப்பட்ட கோகோ விதைகளைக் கொடுத்து, தேவையான பொருட்களையும் வாங்கிக்கொண்டனர்.
கோகோ விதைகளை வறுத்து, பொடித்து, தண்ணீரில் கலந்து குடித்தால் உடலுக்கு நல்லது என்று நினைத்தனர். ஆனால் இந்தக் கோகோ பானம் சுவையாக இல்லை, மிகவும் கசப்பாக இருந்தது. பிறகு இந்தப் பானத்தில் தேன், மிளகாய், மிளகு போன்றவற்றைச் சேர்த்துக் குடித்தனர். இது ‘கடவுளின் பானம்’ என்றும் அழைக்கப்பட்டது.
அஸ்டெக் மன்னரைச் சந்திக்க ஸ்பெயினைச் சேர்ந்த பயணி ஹெர்னாண்டோ கோர்டெஸ் வந்தார். அவரை வரவேற்று விருந்து அளிக்கப்பட்டது. அந்த விருந்தில் கோகோ பானமும் இருந்தது. அதை முதல்முறை சுவைத்த ஹெர்னாண்டோவுக்குச் சுவை பிடிக்கவில்லை. இப்படி ஒரு கசப்பான பானத்தை எப்படிக் கடவுளின் பானமாகச் சுவைக்கிறார்கள் என்று தோன்றியது.
சாக்லெட் பானத்துடன் ஸ்பெயின் வந்து சேர்ந்தவர், ‘இந்தப் பானம் பன்றிகளுக்கானது’ என்று எழுதினார். ஆனால், கோகோ பானத்தில் தேனையும் சர்க்கரையையும் சேர்த்துச் சுவைத்தவர்கள் பிரமாதமாக இருப்பதாகக் கூறினார்கள். அப்போதும் செல்வந்தர்களின் பானமாகத்தான் கோகோ இருந்தது.
17-ம் நூற்றாண்டின் இறுதியில் நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அதிக அளவில் மற்ற நாடுகளுக்கு கோகோ அனுப்பி வைக்கப்பட்டது. இதன்மூலம் ஐரோப்பா முழுவதும் சாக்லெட் பானம் பரவியது.
1828-ம் ஆண்டு டச்சு நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர், கோகோ விதைகளைத் தூளாக்கி, அவற்றிலிருந்து கோகோ வெண்ணெய்யின் அளவைப் பாதியாகக் குறைத்தார். கார உப்புகள் சிலவற்றைச் சேர்ந்தார். இதன் மூலம் கசப்புச் சுவை மறைந்தது. இவரது பானத்தை ‘டச்சு கோகோ’ என்று அழைத்தனர்.
ஃபிரான்கோய்ஸ் லூயி கைலர் என்ற 23 வயது ஸ்விட்சர்லாந்துக்காரர், திட வடிவில் சாக்லெட்டை உருவாக்கினார். பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளுக்கும் இவர் மூலம் திட சாக்லெட் பரவியது.
1847-ம் ஆண்டு இன்றைய நவீன சாக்லெட்டை உருவாக்கியவர் ஜோசப் ஃப்ரை. கோகோ தூளைப் பசையாக மாற்றி, வெண்ணெய்யைக் கலந்து, அச்சுகளில் ஊற்றி திட சாக்லெட்டை உருவாக்கினார்.
1868-ம் ஆண்டு இங்கிலாந்தில் கேட்பரி என்ற சிறிய நிறுவனம் மிட்டாய்களையும் சாக்லெட்களையும் பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மில்க் சாக்லெட்டை அறிமுகம் செய்தது. அது மக்களை மிகவும் கவர்ந்துவிட்டது. நெஸ்லே என்ற நிறுவனமும் சாக்லெட் தயாரிப்பில் இறங்கியது. அமெரிக்காவிலும் சாக்லெட் நிறுவனங்கள் தோன்றி, மிகப் பெரிய வியாபார நிறுவனங்களாக மாறின. ஓர் அமெரிக்கர் ஒரு மாதத்தில் குறைந்தது கால் கிலோ சாக்லெட்டையாவது சுவைக்கிறார்.
இன்று சாக்லெட் குறைந்த விலையில் கிடைப்பதால், உலகம் முழுவதும் செல்வாக்குப் பெற்ற இனிப்பாக வலம் வருகிறது. வீட்டிலேயே சாக்லெட்களை உருவாக்கும் விதத்தில் அதன் தயாரிப்பு முறையும் எளிதாகிவிட்டது. இனி சாக்லெட்டைச் சுவைக்கும்போது, சாக்லெட்டின் கதையையும் நினைத்துப் பாருங்கள்.
(கண்டுபிடிப்போம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT