Published : 25 Jul 2018 10:45 AM
Last Updated : 25 Jul 2018 10:45 AM
சிங்கராஜா கம்பீரமாக நடந்து வந்தது. வழியில் பார்த்த விலங்குகளும் பறவைகளும் வணக்கம் சொல்லிவிட்டுச் சென்றன.
‘பரவாயில்லையே, எனக்கு இன்னும் இந்தக் காட்டில் செல்வாக்கு நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. வணக்கம் சொல்வதிலேயே அது தெரிகிறது’ என்று நினைத்தது சிங்கராஜா.
அப்போது அந்தப் பக்கமாக வந்த கரடி, சிங்கராஜாவைக் கவனிக்காமல் வேகமாகக் கடந்து சென்றது. உடனே சிங்கராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது.
“கரடியே, இங்கே வா” என்று காடு அதிரும்படி கர்ஜனை செய்தது.
குரல் கேட்டு, பயந்துகொண்டே ஓடிவந்தது கரடி.
“என்னைப் பார்த்தும் பார்க்காததுபோல் செல்லும் அளவுக்கு நீ பெரியவனாகிவிட்டாயா? அரசருக்கு வணக்கம் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையான நாகரிகம் கூட உனக்குத் தெரியாதா?” என்று கோபத்துடன் கேட்டது சிங்கராஜா.
“மன்னியுங்கள் சிங்கராஜா. என்னுடைய குட்டியைக் காணவில்லை. அந்தத் துயரத்தில் இருந்ததால் உங்களைக் கவனிக்கவில்லை. இப்போது வணக்கம் சொல்லிவிடுகிறேன்” என்று கை கூப்பியது கரடி.
“என்னை விட உன் குட்டி காணாமல் போனதுதான் உனக்குப் பெரிய விஷயமாக இருக்கிறதா? இந்த ஆணவத்துக்குச் சரியான தண்டனையை இப்போதே அளிக்கிறேன். யாரங்கே, உடனே சபையைக் கூட்டுங்கள்” என்று உத்தரவிட்டது சிங்கராஜா.
சற்று நேரத்தில் சபை கூடியது. விலங்குகளும் பறவைகளும் என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் அமர்ந்திருந்தன.
“இன்று நானே வழக்கு கொண்டு வந்திருக்கிறேன். கரடி எனக்கு வணக்கம் சொல்லாமல், ஆணவமாக நடந்துகொண்டது. இதற்குத் தண்டனையாகக் கரடியைக் காட்டிலிருந்து விலக்கி வைக்கிறேன். ஒரு மாதத்துக்குப் பிறகு, என்னிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு மீண்டும் காட்டுக்குள் வசிக்கலாம்” என்று தீர்ப்பு வழங்கியது சிங்கராஜா.
“சிங்கராஜா, மன்னியுங்கள். நேற்று கரடியின் குட்டி காணாமல் போய்விட்டதால், துயரத்தில் உங்களைக் கவனிக்கவில்லை. மற்றபடி உங்களை மனத்தளவில் கூட அவமரியாதை செய்ய வேண்டும் என்று நினைக்காது கரடி” என்று புலி கூறியது.
“இப்படிக் கரடிக்கு ஆதரவாக யாராவது பேசினால், அவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஒரு மாதமும் கரடியிடம் யாரும் பேசக் கூடாது” என்ற சிங்கராஜா, வேகமாகச் சபையை விட்டு வெளியேறியது.
கரடிக்கு உதவ முடியாத வருத்தத்தில் விலங்குகளும் பறவைகளும் கலைந்து சென்றன. காட்டின் எல்லைக்குச் சென்று வசிக்க ஆரம்பித்தது கரடி.
ஒரு வாரத்துக்குப் பிறகு, வன உலாவுக்குக் கிளம்பியது சிங்கராஜா. திடீரென்று காலில் ஏதோ குத்தியதுபோலிருந்தது. உடைந்த கண்ணாடி சீசா, சிங்கராஜாவின் பாதத்தைக் கிழித்துவிட்டது. ரத்தம் கொட்டியது. வலி உயிர் போனது.
சிங்கராஜாவின் அலறலைக் கேட்டு புலி வந்தது.
“உடனே வைத்தியரை அழையுங்கள். ரத்தம் கொட்டுகிறது. வலியைத் தாங்க முடியவில்லை” என்றது சிங்கராஜா.
“கரடி வைத்தியர் காட்டுக்குள் இல்லை ராஜா. உங்கள் தண்டனைக்காக எல்லையில் இருக்கிறது.”
“உடனே அழைத்து வாருங்கள்.”
“பேசினால் தண்டனை என்று சொன்னீர்களே….”
“ஐயோ… விவாதிக்க இது நேரமில்லை. இப்போதே கரடி வந்தாக வேண்டும். இது என் உத்தரவு.”
அடுத்த ஒரு மணி நேரத்தில் கரடி வந்து சேர்ந்தது. சிங்கராஜாவுக்கு வணக்கம் சொன்னது. மருந்து போட்டது.
“சிங்கராஜா, ஒரு வாரத்துக்குத் தினமும் மருந்து வைத்துக் கட்ட வேண்டும். அப்போதுதான் குணமாகும். ஆனால், தினமும் என்னால் எல்லையில் இருந்து வர இயலாது. அதனால் நீங்களே மருந்துக்கு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்” என்றது கரடி.
“தண்டனை பெற்றும் ஆணவம் மட்டும் குறையவில்லைபோலிருக்கிறது” என்றது சிங்கம்.
“நான் என்ன தவறு செய்தேன்? எனக்கு அளிக்கப்பட்ட தண்டனை அநியாயம் என்பது இந்தக் காட்டுவாசிகளுக்கும் ஏன் உங்களுக்கும் கூடத் தெரியும். ஆனால், நான் அநாவசியமாகத் தண்டனையை அனுபவித்து வருகிறேன். மருத்துவரின் கடமை உயிரைக் காப்பாற்றுவதுதான் என்பதால் கூப்பிட்ட உடனே ஓடிவந்தேன். எல்லையிலிருந்து என் குட்டியை விட்டுவிட்டு வர முடியாது. மன்னியுங்கள்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பியது கரடி.
”கரடியே, சற்று நில்லு. இப்போதே உன் தண்டனையை ரத்து செய்கிறேன். இனிமேல் யாருக்கும் இப்படி அநாவசியமாகத் தண்டனை அளிக்க மாட்டேன். மரியாதை என்பது தானாக வரவேண்டும், கேட்டுப் பெறக் கூடாது என்பதையும் புரிந்துகொண்டேன்” என்று வலியுடன் கூறியது சிங்கராஜா.
நன்றி சொன்ன கரடி, தினமும் சிங்கராஜாவின் காலுக்கு மருந்து போட்டு, ஐந்தே நாட்களில் குணப்படுத்திவிட்டது.
இப்போது மீண்டும் வன உலாவுக்குக் கிளம்பிவிட்டது சிங்கராஜா.
- எஸ். அபிநயா, 10-ம் வகுப்பு, தேவனாங்குறிச்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT