Last Updated : 28 Mar, 2025 04:40 PM

 

Published : 28 Mar 2025 04:40 PM
Last Updated : 28 Mar 2025 04:40 PM

‘ஹாக் ஹாக் ஹாக்’ என்றால் என்ன? | உயிரினங்களின் மொழி - 12

படம்: மெட்டா ஏஐ

குரங்குகள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள பல உத்திகளைக் கையாள்கின்றன. ’ஹாக் ஹாக் ஹாக்’ என்கிற கூர்மையான ஒலி வருகிறது என்றால், அது வெர்வெட் குரங்கு எழுப்பும் எச்சரிக்கை ஒலி. அதைக் கேட்ட மற்ற வெர்வெட் குரங்குகள் மரத்தின் உச்சியை நோக்கிப் பாய்ந்து செல்லும். இதெல்லாம் ஒரே நொடியில் நடந்துவிடும். இதற்குக் காரணம் அந்தப் பக்கமாக நோட்டம் விட்டுச் சென்ற சிறுத்தையாகக்கூட இருக்கலாம்.

அதே கழுகுகளைக் கண்டால், ’பீப் பீப்’ என்கிற உயர் அதிர்வெண் ஒலியை எழுப்புகின்றன. இதைக் கேட்டதும் குரங்குகள் அருகிலுள்ள புதர்களில் ஒளிந்துகொள்கின்றன. பாம்பு தென்பட்டால், ’சுர்ர்ர்... சுர்ர்ர்...’ என்கிற தொடர்ச்சியான, மென்மையான ஒலியை எழுப்புகின்றன. இந்த ஒலியைக் கேட்ட மற்ற குரங்குகள் நிமிர்ந்து நின்று, கவனமாகத் தரையைப் பார்க்கத் தொடங்குகின்றன.

இதை ஒட்டி ஓர் ஆராய்ச்சி முயற்சியாக கென்யாவில், ஒலிபெருக்கி மூலம் வெர்வெட் குரங்குகளின் எச்சரிக்கை ஒலிகளை ஒலிபரப்பினர். ’ஹாக் ஹாக்’ ஒலி கேட்டதும், அந்தப் பகுதியில் உள்ள அனைத்துக் குரங்குகளும் மரங்களில் ஏறின. ’பீப் பீப்’ ஒலி கேட்டதும், அவை புதர்களில் ஒளிந்தன. இதன் மூலம் குரங்குகள் இந்த ஒலிகளை மட்டுமல்ல, அவற்றின் அர்த்தத்தையும் அறிந்திருக்கின்றன என்பது தெரியவந்தது.

டயானா குரங்குகள்கூட இந்த எச்சரிக்கை அழைப்புகளைப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவை. மற்ற குரங்கு இனங்களின் தொடர்பு மொழிகள் வெவ்வேறாக இருந்தாலும், எச்சரிக்கை ஒலியைச் சரியாகப் புரிந்துகொள்கின்றன.

இதுவே இந்திய ’மெக்காக்’ குரங்குகளைச் சந்தித்தால், முதலில் தங்கள் புருவங்களை வேகமாக உயர்த்தும். இது ’ஹலோ, நான் உனக்குத் தீங்கிழைக்க வரவில்லை’ என்பதன் சைகை மொழி. ஆராய்ச்சியாளர் ரோனால்ட் தனது ஆய்வில், மெக்காக் குரங்குகள் சில நொடிகளுக்கு மற்றொரு குரங்கின் கண்களைப் பார்த்து, பின்னர் புருவங்களை மேலே தூக்கும்போது, அது ஒரு நட்பு சைகையாகக் கருதப்படுகிறது என்று கண்டறிந்தார். இதையே நீண்ட நேரம் செய்தால், அது வாய் தகராறுக்கோ கைகலப்புக்கோ தயாராகிறது என்று அர்த்தம்.

மெக்காக் குரங்குகள் உணவைக் கண்டறிந்தால், ’கிக்-கிக்-கூ... கிக்-கிக்-கூ...’ என்று தொடர் ஒலிகளை எழுப்புகின்றன. இந்த ஒலியைக் கேட்டதும் மற்ற குரங்குகள் உணவு இருக்கும் இடத்திற்கு விரைகின்றன. உணவின் வகையைப் பொறுத்து ஒலியின் ஏற்றத்தாழ்வுகள் மாறுபடும். காய்கள் கிடைத்தால், ’கிக்-கிக்-கூஊஊ’ என ஒலிக்கும். பழங்கள் கிடைத்தால், ’கிக்-கிக்-கா’ என்கிற ஒலி.

ஒரு குரங்கு வணங்குவதைப் போல் தலையைக் குனிந்தால் அது, ’நான் இந்தக் கோட்டைத் தாண்டி வரமாட்டேன். நீயும் வராதே. நண்பர்களாக இருப்போம்’ என்பதைக் குறிக்கும். சில போனோபோ குரங்குகள் ஒன்றை மற்றொன்று சந்திக்கும்போது, பரஸ்பரம் அணைத்துக்கொள்கின்றன. இது நாம் கைகுலுக்குவதைப் போன்றது.
செபேக்கின் ஆய்வுகளின்படி, ’ஹூலர்’ குரங்குகள் எழுப்பும் உரத்த கூக்குரல்கள் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை கேட்கும். இது தொலைதூரம் உள்ள மற்ற குரங்குகளுடன் தொடர்புகொள்ள உதவுகிறது. குறிப்பாக, உரத்த ஒலிகளின் மூலம் எல்லையைக் குறிக்கவும், எல்லைப் பகுதியில் மற்ற குரங்குகளுடன் ஏற்படும் மோதல்களைத் தவிர்க்கவும் பயன்படுத்துகின்றன.

ஹவாய் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வில், குரங்கு தனது வாயை அகலமாகத் திறந்து, பற்களைக் காட்டினால் அது கோபத்தில் இருக்கிறது என்று அர்த்தம் என்று தெரியவந்திருக்கிறது. இது ஓர் அச்சுறுத்தல் சைகை. தனது தாடையை வேகமாக அசைக்கிறது என்றால், ’நான் உன்னைத் தாக்கப் போகிறேன்’ என்று அர்த்தம்.
இதற்கு நேர்மாறாக, ஒரு குரங்கு தனது உதடுகளை முன்னே நீட்டி, சப்புக்கொட்டும் ஒலியை எழுப்பினால், ’நான் அமைதியாக இருக்கிறேன், நீயும் அமைதியாக இரு’ என்பதைக் குறிக்கிறது. இந்தச் சைகைகள் குரங்குகளிடையே சண்டையைத் தவிர்க்க உதவுகின்றன.

சூடானின் அடர்ந்த காடுகளில் கெல்டா குரங்குகள் உணவு கிடைத்ததைக் குறிக்க, ’பஹூ பஹூ’ என்று கூச்சலிடுகின்றன. அதே ஒலியை வேறுபட்ட அழுத்தத்துடன் எழுப்பினால், அது ஓர் எச்சரிக்கை ஒலி.

கேம்பெல் குரங்குகள் மேற்கு ஆப்ரிக்காவின் மழைக்காடுகளில் வாழும் இனம். 2009இல் பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் க்ளாஸ் சுவோக்ஸும் அவருடைய குழுவும் நடத்திய ஆய்வில், இந்தக் குரங்குகள் ’கூ’ மற்றும் ’ஹூ’ என்கிற அடிப்படை ஒலிகளைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்துவதைக் கண்டறிந்தனர்.

’கூ’ என்கிற ஒலி சிறுத்தை அச்சுறுத்தலைக் குறிக்கிறது. ஆனால் அதனுடன் ’ஓ’ என்கிற ஒலியைச் சேர்த்தால் (கூ-ஓ), அது பொது ஆபத்து எச்சரிக்கையாக மாறுகிறது. இதேபோல், ’ஹூ’ என்கிற ஒலி பறவை அச்சுறுத்தலைக் குறிக்கிறது. ஆனால் ’ஹூ-ஓ’ என்கிற ஒலி மரங்களில் உள்ள அச்சுறுத்தலைக் குறிக்கிறது. இந்த ஆய்வு குரங்குகளின் மொழியில் ஒரு வகையான இலக்கண அமைப்பு இருப்பதைக் காட்டுகிறது.

சில வகையான குரங்குகள் இருபதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு முக பாவனைகளைப் பயன்படுத்துகின்றன. ஜேன் குடாலின் சிம்பன்சி ஆராய்ச்சியில் கைகளால் தட்டுதல், கட்டித் தழுவுதல், முத்தமிடுதல் போன்ற நடத்தைகள் சிம்பன்சிகளிடையே நட்பு, ஆதரவு, ஆறுதல் ஆகியவற்றைத் தெரிவிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரிச்சர்ட் பர்ன் குரங்குகளிடம் ’மனக் கோட்பாடு’ இருப்பதைக் கண்டறிந்துள்ளார். அதாவது, குரங்குகள் மற்றவர்களின் எண்ணங்கள், நம்பிக்கைகள், நோக்கங்களைப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவை. இது அவற்றின் தொடர்பு முறைகளுக்கு ஒரு பரிமாணத்தைச் சேர்க்கிறது. இது போல் இன்னும் பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இன்னும் பல புதிய தகவல்களும் நமக்குக் கிடைக்கலாம்.

- கட்டுரையாளர், எழுத்தாளர் | தொடர்புக்கு: writernaseema@gmail.com

முந்தைய அத்தியாயம் > பாடும் கிளிகள் | உயிரினங்களின் மொழி - 11

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x