Published : 25 Mar 2025 04:56 PM
Last Updated : 25 Mar 2025 04:56 PM

ஜான் டால்டன்

விஞ்ஞானிகள் - 27

நவீன அணுக் கோட்பாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் ஜான் டால்டன். வேதியியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் எனப் பல்வேறு துறைகளில் சிறந்தவராகத் திகழ்ந்தவர். அணு எடை குறித்த பட்டியலை முதன்முதலில் வெளியிட்டவரும் இவரே.

1766, செப்டம்பர் 5 அன்று இங்கிலாந்தில் பிறந்தார் டால்டன். இவரின் தந்தை நெசவாளர். மூன்று குழந்தைகளில் டால்டன் கடைசி குழந்தை. ஜான் பிளெட்சர் நடத்திய பள்ளியில் டால்டன் படித்தார். டால்டன் வானியல் கல்வியை எலிஹு ராபின்சன் என்பவரிடம் கற்றுக்கொண்டார். கணிதம், கிரேக்கம், லத்தீன் போன்றவற்றை ஜான் கோஃப் மூலம் அறிந்துகொண்டார். தினசரி வானிலை குறித்த குறிப்புகளை நாள்குறிப்பில் எழுதி வைத்தார். வாழ்நாளின் கடைசி நாள்வரை வானிலை அளவீட்டில் குன்றாத ஆர்வத்தோடு இருந்தார்.

1793இல் மான்செஸ்டர், நியூ காலேஜ் என்கிற கல்வி நிறுவனத்தில் கணிதம் கற்பிக்கச் சென்றார். அங்குதான் வானிலை ஆராய்ச்சி தொடர்பாகத் தான் எழுதிய கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். வளிமண்டலம் தனிமங்களின் கலவை அல்ல. 80 சதவீத நைட்ரஜன், 20 சதவீத ஆக்சிஜனின் கலவை என்கிற கருத்தை ஆதரித்தார்.

டால்டனின் சமகால விஞ்ஞானி ஜான் ஃபிரடெரிக் டேனியர் டால்டனை ’வானிலை அறிவியலின் தந்தை’ என்று பாராட்டினார்.

மான்செஸ்டரில் இலக்கிய, தத்துவ சங்கத்தின் உறுப்பினரானார் டால்டன். அங்கு டால்டன் தனது சகோதரரின் பார்வைக் குறைபாட்டை விவரித்து நிறக்குருடு தொடர்பான ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். மரபணுக் காரணமாக நிறக்குருடு ஏற்படலாம் என்றார். அதற்கு ’டால்டனிசம்’ என்று பெயர்.

பழைய அணுக்கோட்பாட்டை ஆராய்ச்சி செய்தார் டால்டன். ஒரு கலவையில் உள்ள அனைத்துப் பொருள்களின் அணுக்களும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு தனிமத்திலும் அணுக்களின் அளவு, நிறை போன்றவை வேறுபடும் என்றார். இந்தக் கூற்றுதான் புதிய அணுக் கோட்பாட்டிற்கு வித்திட்டது. வேதியியல் சேர்மங்களில் இருக்கும் ஒவ்வொரு தனிமத்தின் அணுக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். டால்டனின் இந்த அணுக் கோட்பாடு அவருக்கு ’வேதியியலின் தந்தை’ என்கிற பெயரைப் பெற்றுத் தந்தது.

50 வயதிற்குப் பிறகும் டால்டன் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்தார். ராயல் கழகத்தின் உறுப்பினரானார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கௌரவ பட்டம் பெற்றார். எந்த வேலை செய்தாலும் மாணவர்களுக்குத் தொடர்ந்து கற்பிக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்தார் ஜான் டால்டன். 1844, ஜூலை 27 அன்று 77 வயதில் பக்கவாதத்தால் மறைந்தார்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon