Last Updated : 21 Mar, 2025 11:43 AM

 

Published : 21 Mar 2025 11:43 AM
Last Updated : 21 Mar 2025 11:43 AM

பாடும் கிளிகள்

உயிரினங்களின் மொழி- 11

மனிதர்கள் வளர்க்கும் வளர்ப்பு உயிரினங்களில் பேச்சுத் திறமைக்குப் பெயர் பெற்றவை கிளிகள். அவற்றுக்கு அறிவுக்கூர்மையும் அதிகம். நாம் கற்றுத்தரும் சொற்களை அப்படியே திரும்பவும் சொல்லும் திறன் கொண்டவை. அதே நேரத்தில் அவற்றுக்கு என்று தனித்துவமான ஒரு மொழியும் உண்டு.

ஒரு சராசரி கிளியால் இருபது முதல் நாற்பது வெவ்வேறு வகையான ஒலிகளை உருவாக்க முடியும். ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட அர்த்தம் உண்டு. உதாரணத்திற்கு, ’கீ..கீ..’ என்று சத்தமிட்டால், குழுவில் உள்ள மற்ற கிளிகளை அழைக்கிறது. அல்லது தன் இருப்பிடத்தைத் தெரிவிக்கிறது. அதுவே திடீரென்று உரத்த ஒலிகளை எழுப்பினால் ஆபத்து இருக்கிறது. மென்மையான, இனிமையான ஒலிகள் எனில் துணையை ஈர்க்க. அது போலவே குழுவிற்குள் உறவுகளை நிர்வகிக்க வேறு விதமான ஒலிகளைப் பயன்படுத்துகின்றன.

2020இல் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பாடும் கிளிகள் தங்களின் குஞ்சுகளுக்குத் தனித்துவமான ஒலிக்குறிப்புகளைச் சொல்லிக் கொடுப்பதைக் கண்டறிந்தனர்.

அமேசான் கிளிகள் மற்றும் ஆப்ரிக்கச் சாம்பல் கிளிகள் போன்ற பெரிய கிளிகளும் தங்களின் குழுவில் உள்ள ஒவ்வோர் உறுப்பினரையும் அடையாளம் காணக்கூடிய திறன் கொண்டுள்ளன. அவை தங்களின் ஒலிக்குறிப்புகளை மாற்றி வெவ்வேறு கிளிகளுடன் பேசுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பேசுவதில் மட்டுமல்ல, பாடுவதிலும் கிளிகள் திறமையானவை. அதிலும் குறிப்பாக, காதல் பாடல்கள் பாடுவதில் கைதேர்ந்தவை. ஒரு கிளி ஒரு குறிப்பிட்ட இசை வரியைப் பாடும். அதன் துணை அதற்குப் பதிலளிக்கும். பின்னர் இரண்டும் இணைந்து ஓர் அழகான பாடலை உருவாக்குகின்றன. இப்படித்தான் ஓர் இசைக்கச்சேரியை அவை உருவாக்குகின்றன.
டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தது என்னவென்றால், ஒவ்வோர் இணையும் தங்களுக்கென ஒரு தனித்துவமான ’இசைக் கையொப்பத்தை’ உருவாக்குகின்றன. ஒரே நாளில் இந்தப் பாடல்கள் முழுமை பெறுவதில்லை. ஒரு பாடலை முடிக்கச் சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை அவை எடுத்துக்கொள்ளும். இசைக் கலைஞர்களைப் போலவே, கிளிகளும் தங்களின் பாடல்களை உருவாக்கப் பயிற்சி செய்வதில் மணிக்கணக்கில் செலவிடுகின்றன.

காதல் பாடல்களைப் பாடுவது மூலம் தங்களுடைய காதலின் ஆழத்தை மற்ற கிளிகளுக்கு அறிவிக்கின்றன. பாடல் எத்தனை இனிமையாக இருக்கிறதோ அத்தனைக்கு அவை நெருக்கமாக இருக்கிறது என்று அர்த்தம். ஓர் இணை ஒரே பாடலைப் பல ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாகப் பாடும். ஆனால் கால ஓட்டத்தில் புதிய தொடர்களைச் சேர்த்து மேம்படுத்தும் செயலும் நடக்கும்.

கிளிகளால் புதிய ஒலிகள் மற்றும் தொடர்பு முறைகளைக் கற்றுக்கொள்ளவும் முடியும். 2019ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வின்படி, வெவ்வேறு பகுதிகளில் வாழும் ஒரே இனத்தைச் சேர்ந்த கிளிகளின் பேச்சுவழக்கு ஒரே மாதிரி இருந்துள்ளது. இது மனித மொழிகளில் உள்ள பிராந்திய உச்சரிப்புகளை ஒத்திருக்கின்றன.

கிளிகள் மனிதர்களால் கேட்க முடியாத அல்ட்ரா-சோனிக் அதிர்வெண்களிலும் தகவல் பரிமாற்றம் செய்கின்றன. இந்த உயர் அதிர்வெண் ஒலிகள், ஆபத்து எச்சரிக்கைகளுக்காகவும் குழு ஒருங்கிணைப்புக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

கைரோபைசிஸ் குடும்பத்தைச் சேர்ந்த கிளிகள் பூமியின் காந்தப்புலத்தை உணரும் திறன் கொண்டவை. இந்தத் திறனைப் பயன்படுத்தி அவை தகவல் பரிமாற்றம் செய்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நீண்ட தூர இடப்பெயர்வின் போது குழு உறுப்பினர்களுடன் தொடர்புகொள்ள இம்முறை பயன்படுகிறது.

கிளிகளின் மொழித்திறன் அவற்றின் தனித்துவமான மூளை அமைப்பின் காரணமாக ஏற்படுகிறது. 2022இல் மேக்ஸ் பிளாங்க் நரம்பியல் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, கிளிகளுக்கு ஒலிகளைக் கற்றுக்கொள்ளவும் மீண்டும் உருவாக்கவும், மூளையில் ’மொழிக் கற்றல் வளையம்’ என்கிற சிறப்பான பகுதி உள்ளது. இது, மனித மூளையில் உள்ள ப்ரோகா பகுதியை ஒத்திருக்கிறது. இந்தப் பகுதிதான் பேச்சுத் திறனுக்குப் பொறுப்பு. அதாவது, கிளிகளும் மனிதர்களும் வெவ்வேறு பரிணாமப் பாதைகளில் இருந்தாலும், மொழிக் கற்றல் திறனில் ஒரே மாதிரியான மூளை கட்டமைப்புகளைக் கொண்டுள்ளோம்.
கிளிகளின் நினைவாற்றல் அவற்றின் மொழித் திறனை அடர்த்தியாக்குகிறது. அமேசான் கிளிகள் நூற்றுக்கும் மேற்பட்ட தனித்துவமான ஒலிகளை ஏழு முதல் பத்து ஆண்டுகள் வரை நினைவில் வைத்துக் கொள்ளும்.

2019ஆம் ஆண்டு யேல் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் ஆப்ரிக்கச் சாம்பல் கிளிகள் தங்கள் அழைப்பு ஒலிகளை வாக்கியங்களாக ஒழுங்கமைப்பதைக் கண்டறிந்துள்ளனர். உதாரணமாக, ஆபத்தை எச்சரிக்கும் ஒரு சாம்பல் கிளி முதலில் கி..கீ.. என்று அழைக்கிறது. பின்னர் ஆபத்தின் வகையைக் குறிக்கக்கூடிய வேறுபட்ட ஒலியை உருவாக்குகிறது.

ஒலிகளை எழுப்புவதன் மூலம் மட்டுமன்றி, உடல் அசைவின் மூலமும் தகவல்களைப் பரிமாறுகின்றன. இறகுகளின் சிலிர்ப்பானது ஆர்வம், ஆச்சரியம் அல்லது பயத்தைக் காட்டுகிறது. கண் இமைகளைச் சுருக்குதல் என்பது ஈர்ப்பு அல்லது மகிழ்ச்சியைக் குறிக்கிறது. அலகின் மூலம் கொத்துவது எச்சரிக்கை அல்லது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறது. தலையைச் சாய்த்தால், ஆர்வமாக இருக்கிறது என்றோ அல்லது கேள்வி கேட்கிறது என்றோ அர்த்தம்.

கிளிகளின் இந்த அற்புதமான மொழியைப் புரிந்துகொள்ள மேலும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் கிளி மொழியின் அகராதி இன்னமும் விரிவடையும்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
writernaseema@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x