Published : 19 Mar 2025 04:26 PM
Last Updated : 19 Mar 2025 04:26 PM
எலக்ட்ரானைக் கண்டறிந்தவர். அணு அமைப்பில் ஓர் அறிவியல் புரட்சி தோன்றக் காரணமானவர். ‘நவீன அணு இயற்பியலின் தந்தை’ என்று போற்றப்படுபவர் ஜெ.ஜெ. தாம்சன்.
1856, டிசம்பர் 18 அன்று இங்கிலாந்தின் மான்செஸ்டரில் பிறந்தார். தந்தை புத்தகக் கடை வைத்திருந்தார். எனவே தாம்சனுக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் வந்துவிட்டது.
14 வயதில் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஓவன்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். இடையில் தந்தையின் மரணத்தால் படிப்பு தடைபட்டது. மீண்டும் 1876இல் கேம்பிரிட்ஜின் டிரினிடி கல்லூரியில் பி.ஏ. கணிதம் சேர்ந்தார். 1880இல் இளங்கலைப் பட்டம் வென்றதோடு சிறப்பாகப் படித்ததற்கான ‘ஆதம்ஸ் பரிசை’யும் பெற்றார். 1882இல் முதுகலைப் பட்டம் பெற்றார்.
ஜேம்ஸ் க்ளர்க் மேக்ஸ்வெல் மின்காந்தம் தொடர்பான ஆய்வுகள் செய்திருப்பதை அறிந்தார். அவர்கள் தங்கள் கணிதத் திறனால் அவற்றிற்குத் தீர்வு கண்டிருப்பதைக் கண்டார். எப்படி ஆய்வு செய்தார்கள் என்பதைக் குறிப்பெடுத்துக் கொண்டார். தானும் அதைச் செய்ய நினைத்தார். மின்சாரமும் காந்தவியலும் ஒன்றோடு மற்றொன்று தொடர்புடையன. ஒன்றில் செய்யும் மாற்றம் மற்றதில் பிரதிபலிப்பதைக் கண்டறிந்தார்.
கேவென்டிஷ் ஆய்வகத்தில் ஆராய்ச்சி செய்து பார்க்க ஆசைப்பட்டார் தாம்சன். 1884இல் ராயல் கழகத்தின் உறுப்பினரானார். 1888இல் கேவென்டிஷில் இயற்பியல் பேராசிரியரானார். ஆய்வகத்தின் இயற்பியல் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இது தாம்ஸனின் சாதனைக்கு அறிவியல் உலகம் கொடுத்த அங்கீகாரம். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் இருக்கும் ஆய்வுக்கூடத்தில் 28 வயது இளைஞராகப் புது வேகத்தோடு செயல்பட்டார் தாம்சன்.
இதற்கிடையே 1886இல் இயற்பியல், வேதியியல் இரண்டையும் சேர்த்து இயக்கவியலின் தாக்கம் (அப்ளிகேஷன் ஆஃப் தி டைனமிக்ஸ் ஆஃப் பிசிக்ஸ் அண்டு கெமிஸ்ட்ரி) என்கிற ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார்.
கேத்தோடு கதிர் குழாய் மூலம் எதிர்மின் விளைவுகள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். எதிர்மின் கதிர்கள் மின்புலத்தால் தாக்கப்படுவதைக் கண்டறிந்தார். அடுத்து எலக்ட்ரானின் மின்னூட்ட நிறை விகிதத்தைக் கண்டறிய முற்பட்டார். எலக்ட்ரானை ’எதிர்மின் துகள்கள்’ என்றே குறிப்பிட்டார். பின்னர்தான் எலக்ட்ரான் என்கிற பெயர் சூட்டப்பட்டது.
அனைத்து வகையான பொருள்களிலும் எதிர்மின் துகள்கள் உள்ளன என்கிற தாம்சனின் முடிவு அடுத்த மூன்று ஆண்டுகளில் உறுதிப்படுத்தப்பட்டது. மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்துப் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் தாம்சன்.
1897இல் லண்டன் ராயல் கழகத்தில் நடைபெற்ற மாலைச் சொற்பொழிவின் போது, தான் கண்டறிந்த மின்னணுத் துகளைப் பற்றி அறிவித்தார். ’வாயுக்களின் வழியே மின்சாரம் கடத்துதல்’ என்கிற தலைப்பில் அதனை ஒரு நூலாகவும் வெளியிட்டார். அமெரிக்காவின் யேல் பலகலைக் கழகத்தில் அணுவின் அமைப்பு பற்றிச் சொற்பொழிவாற்றினார்.
1906 ஆம் ஆண்டு வாயுக்களின் மின்கடத்துத் திறன் குறித்த ஆராய்ச்சிக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1908இல் இவருக்கு நைட் பட்டம் வழங்கப்பட்டது. 1909இல் பிரிட்டிஷ் அறிவியல் முன்னேற்ற சங்கத்தின் தலைவரானார் தாம்சன். 1912 இல் ஆர்டர் ஆஃப் மெரிட் விருதைப் பெற்றார்.தாம்சன் சிறந்த பேராசிரியர். இயற்பியலில் தன்னை வளர்த்துக்கொண்டது போலவே மாணவர்களையும் வளர்த்துவிட்டார். தாம்சனுக்குக் கீழ் பணிபுரிந்தவர்களில் 7 பேர் நோபல் பரிசைப் பெற்றார்கள். 1937இல் இவருடைய மகன் ஜார்ஜ் பேஜட் தாம்சனும் அதே துறையில் நோபல் பரிசைப் பெற்றார்.
ஜே.எச்.பாய்ண்டிங் என்பவருடன் இணைந்து ஒலி, வெப்பம், ஒளி, மின்-மின்காந்தம் தொடர்பான புத்தகங்களை வெளியிட்டார். மேலும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்களை எழுதியிருக்கிறார். பல விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறார். அணுவைப் பற்றிய அடிப்படை உண்மைகளை விளக்கிய ஜெ.ஜெ. தாம்சன், 85 வயதில் 1940, ஆகஸ்ட் 30 அன்று மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment