Published : 19 Mar 2025 06:39 AM
Last Updated : 19 Mar 2025 06:39 AM
“என்ன வெட்டுக்கிளியே, ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணோம்” என்று நலம் விசாரித்தது ஓணான். “உனக்கு என்ன ஞாபக மறதியா? காலையில் தானே அந்த எருக்கஞ்செடி மேல உட்கார்ந்து எருக்கம் பூக்களை டப்பு டப்புனு வெடிச்சிட்டு இருந்தோம். அதுக்குள்ள மறந்துட்டியா?” என்று அதிர்ச்சியாகக் கேட்டது வெட்டுக்கிளி.
“நான் அப்பவே சொன்னேன், அந்த நாவல்காட்டுப் பக்கம் போகாதேன்னு. அங்கே போனவங்களுக்கு இப்படித்தான் அடிக்கடி மறதி வருமாம்'' என்றது பச்சைப் பாம்பு. “அச்சச்சோ! ஓணானைப் பழைய நிலைக்கு எப்படிக் கொண்டு வருவது?” என்று வெட்டுக் கிளியையும் பச்சைப் பாம்பையும் பயத்துடன் பார்த்தது பொன்வண்டு.
“பயப்படாதே, எங்க தாத்தா கிட்ட போகலாம். அவருக்கு நாவல்காட்டைப் பற்றி நல்லா தெரியும். மூலிகைச் செடி பறிக்க அந்தக் காட்டுக்குத்தான் போவாரு” என்றது பச்சைப் பாம்பு. “அப்போ உங்க தாத்தாவுக்கு ஒண்ணும் ஆகலையா?” என்றது வெட்டுக்கிளி.
“அவருக்கு எல்லாம் ஒண்ணும் ஆகாது” என்றது பச்சைப் பாம்பு. “பெரியவங்ககிட்ட தீர்வு இருக்கும், தாத்தாவைப் பார்க்கப் போகலாம்” என்றது வெட்டுக்கிளி. பச்சைப் பாம்பு, பொன் வண்டு, வெட்டுக்கிளி ஆகிய மூன்றும் ஓணானை அழைத்துக்கொண்டு தாத்தாவைப் பார்க்கச் சென்றன. “நாலு பேரும் எங்கே போறீங்க?” குரல் வந்த திசையில் நான்கும் திரும்பிப் பார்த்தன.
“யாரையும் காணோமே...” என்று பயத்தில் நடுங்கியது ஓணான். மாமரத்தின் கிளையிலிருந்து இறங்கி வந்தது மரபல்லி. “நீயா, பயந்துட்டேன்... “நீயும் பயந்து எங்களையும் பயமுறுத்தறதே உன் வேலையாப் போச்சு. வாங்க போகலாம்” என்றது பொன்வண்டு. “எல்லாரும் எங்கே போறீங்க?” என்று கேட்டது மரபல்லி.
“இந்த ஓணான் நாவல்காட்டுப் பக்கம் போயிருக்கான். அதிலிருந்து மறதி வந்துருச்சு. ஏற்கெனவே எதற்கெடுத்தாலும் பயப்படுவான். அதான் நாவல்காட்டைப் பற்றிப் பச்சைப் பாம்பு தாத்தாவுக்குத் தெரியுங்கிறதால, அவர் ஏதாவது ஒரு வழி சொல்லுவார்னு அவரைப் பார்க்கப் போறோம்” என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தது வெட்டுக்கிளி.
“அங்கே இருக்கிற நாவல் மரத்துல நிறைய நாவல் பழம் இருக்குமாம். நாம அதைச் சாப்பிட நினைச்சு அந்தப் பக்கம் போனால்... அங்கே ஏதோ...” என்று மரபல்லி இழுத்தது. “போதும் நிறுத்து. ஏற்கெனவே நாங்க பயந்து போயிருக்கோம். இதுல நீ வேற பயமுறுத்தாத” என்று மரபல்லியை அமைதியாக இருக்கச் சொன்னது பொன்வண்டு.
“எப்படியாவது ஓணானுக்கு நினைவு வரவழைக்க முடியுமான்னு தாத்தா கிட்ட கேட்கணும். வழியை விடு” என்றது பச்சைப் பாம்பு. “சரி, நானும் வரேன்” என்று மரபல்லி அவர்களுடன் இணைந்துகொண்டது. “க்ர்ர்க்... க்ர்ர்க்...” “என்ன சத்தம் அது?” என்று பயத்தில் பச்சைப் பாம்பின் பின்னால் ஒளிந்துகொண்டது ஓணான்.
தாவித் தாவி முன்னே வந்தது தவளை. “அட! தவளை... நலமா? உன்னைப் பார்த்தே பல நாள் ஆகுது” என்றது ஓணான். “என்னது, காலையில வேலியில் படர்ந்திருந்த கொடியில் உன் கால் மாட்டிக்கொண்டது. நான்தானே உன் காலை எடுத்துவிட்டேன்” என்றது தவளை.
“அவனுக்கு இப்படித்தான் அடிக்கடி மறதி வந்துடுது” என்றது வெட்டுக்கிளி. “அப்படியா?” “எல்லாம் அந்த நாவல்காட்டுக்குப் போனதாலதான்” என்றது பொன்வண்டு. “நாவல்காட்டுக்கா?” என்று பயத்துடன் கேட்டது தவளை. “அந்தக் காட்டைப் பற்றி எங்க தாத்தாவுக்கு எல்லாம் தெரியும். அதான் அவர் கிட்ட கூட்டிட்டுப் போறோம்” என்றது பச்சைப் பாம்பு.
“ஓ... நானும் உங்ககூட வரேன்” என்று தவளையும் அவர்களுடன் இணைந்துகொண்டது. கொஞ்சம் தூரம் நடந்ததும் முந்திரி தோப்பு வந்தது. “தாத்தா... தாத்தா...” என்று அழைத்துக்கொண்டே முந்திரி மரத்தின் அடியில் ஒரு பெரிய பொந்துக்குள் அனைத்தும் நுழைந்தன.
அங்கு வந்திருந்த எட்டுக்காலிக்கு எட்டுக்கால்களிலும் சுளுக்கு விழுந்ததை வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தது பச்சைப் பாம்பு தாத்தா.“என்ன எல்லாரும் வந்திருக்கீங்க?”“இந்த ஓணான் நாவல்காட்டுப் பக்கம் போனான். அங்க போயிட்டு வந்ததிலிருந்து அவனுக்கு அடிக்கடி மறதியும் பயமும் வந்துகொண்டே இருக்கு தாத்தா” என்றது பச்சைப் பாம்பு.
“ஹ... ஹ... ஹா...” “ஓணானுக்கு என்ன ஆச்சோன்னு பயத்தில் இருக்கோம். நீங்க சிரிக்கிறீங்களே” என்றது வெட்டுக்கிளி. “நாவல்காட்டுக்குப் போன பிறகு என்ன நடந்தது?” என்று ஓணானிடம் கேட்டது பச்சைப் பாம்பு தாத்தா. ஓணான் சொல்ல ஆரம்பித்தது. “நாவல் பழம் பறிக்க அந்தக் காட்டுக்குள்ள போனேன். ஒவ்வொரு மரத்திலயும் ஏராளமான பழங்கள். வேகமாக மரத்தில் ஏறி ஒரு நாவல் பழத்தைப் பறித்துச் சாப்பிட்டேன்.
ருசியா இருந்துச்சு. இன்னொரு கிளைல இதைவிடப் பெரிய பெரிய பழங்களா தொங்கிக்கிட்டு இருந்தது. அதுல ஒண்ணைப் பறிக்கப் போனேன். நாவல் பழம் என் கையைக் கடிச்சிட்டு, கீச்... கீச்னு சத்தம் போட்டுக்கிட்டே படபடன்னு பறந்திருச்சு.
அந்தச் சத்தம் கேட்டு மத்த எல்லாப் பழங்களும் பறந்துருச்சு! நான் அதிர்ச்சியாகப் பார்த்துக்கிட்டு இருக்கும் போதே மறுபடியும் வந்து கிளைகளில் பழங்கள் ஒட்டிக்கிருச்சு! நான் பயத்துல மரத்திலிருந்து கீழே விழுந்துட்டேன்” என்றது ஓணான்.“வைத்தியரே, ஒரு ஓணான் மரத்திலிருந்து என் வலையில் விழுந்ததில் என் கால்களில் சுளுக்குன்னு சொன்னேனே, அது இவன்தான்...” என்று சிரித்தது சிலந்தி.
“நாவல் மரத்துல பகலில் வௌவால்கள் தலைகீழாகத் தொங்கிட்டு இருக்கும். அதைப் பழம்னு நினைச்சுப் பறிக்கப் போயிருக்கான். வௌவால் தனக்கு ஆபத்துன்னு தெரிஞ்சு, இவன் கையைக் கடிச்சிருக்கு. பயத்துல மரத்திலிருந்து கீழே விழுந்துட்டான். தலையில லேசா அடிபட்டிருக்கு. அதனாலதான் அடிக்கடி ஞாபக மறதி வந்திருக்கு” என்று சொல்லி முடித்தது பச்சைப் பாம்பு தாத்தா.
“இதைச் சரிபண்ண முடியாதா தாத்தா?” என்று கேட்டது மரபல்லி. “மருந்தே வேணாம். ரெண்டு நாளில் சரியாயிரும்” என்றது பச்சைப் பாம்பு தாத்தா. “ச்சே! அங்க இருக்கறது எல்லாம் வௌவால்களா? நாவல்காட்டுல வேற என்னமோ இருக்குன்னு எல்லாரும் பயமுறுத்தினதால இத்தனை நாளா நாமளும் பயத்தோடே இருந்திருக்கோம்” என்று தவளை சொல்ல, எல்லாம் சிரித்தன. “பசங்களா, பயம்தான் உங்க முதல் எதிரி.
பயத்தை விட்டுட்டு எல்லாத்தையும் தைரியமா எதிர்கொள்ளப் பழகிக்கணும் சரியா? நான் நாவல்காட்டுக்கு மூலிகை பறிக்கப் போறேன். என்கூட யாரெல்லாம் வர்றீங்க?” என்று கேட்டது பச்சைப் பாம்பு தாத்தா. “நாங்க எல்லாரும் வருவோம்” என்று அனைத்தும் கத்தின.
- சங்கீதா பிரபு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment