Last Updated : 05 Mar, 2025 06:49 AM

 

Published : 05 Mar 2025 06:49 AM
Last Updated : 05 Mar 2025 06:49 AM

தூங்காதே ஷீலு தூங்காதே... | கதை

“ஷீலு, எழுந்திரி. நேரமாகிவிட்டது பார்” என்று அம்மா முயலின் குரல் ஷீலுவுக்குக் கேட்டது. இருந்தாலும் வளைக்குள் வைக்கோல், காய்ந்த புல் கொண்டு அம்மா தயார் செய்துள்ள மெத்தையில் சுருண்டு படுத்திருப்பதில்தான் என்ன சுகம்! ஷீலு இன்னொரு பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டது.

“சரி, நான் கிளம்பறேன்... சீக்கிரம் போனால்தான் செழிப்பான இலைகள், புற்கள், கேரட், கோஸ் எல்லாம் கிடைக்கும். கவனமா இரு” என்று சொல்லிவிட்டு அம்மா முயல் கிளம்பியது. ஷீலுவின் தோழர்களான நீட்டு முயலும் கினி அணிலும், “ஷீலு... ஷீலு...” என்று அழைத்தபடி வந்தன. ஷீலு மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்து, “ம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டது. “இன்னுமா தூங்கிக்கிட்டு இருக்க, எழுந்திரி” என்றது கினி.

“நாங்க எழுந்து, காலை உணவைக்கூட முடிச்சுட்டோம்” என்றது நீட்டு. ஷீலு ஒருமுறை புரண்டு படுத்து, கை கால்களை நீட்டி சோம்பல் முறித்தது. “இன்னிக்குக் காலை உணவு அருமையா இருந்தது. அதிலும் அந்த கேரட் அடடா!” என்றது நீட்டு. “எனக்கும் கொய்யாப்பழம் தித்திப்பா இருந்தது” என்றது கினி. ஷீலுவுக்குப் பசித்தது. உடனே அம்மாவின் நினைவு வந்துவிட்டது. படுத்தபடியே, “அம்மா, பசிக்குது” என்று குரல் கொடுத்தது ஷீலு. “உங்க அம்மா வெளியே கிளம்பிப் போயாச்சு. நீதான் சோம்பேறியா படுத்துக்கிட்டு இருக்க ஷீலு...” என்றது நீட்டு.

ஆனாலும் ஷீலு எழுந்து வெளியே வரவில்லை. நண்பர்கள் விளையாட ஆரம்பித்தன. “தூங்காதே ஷீலு தூங்காதே... சோம்பேறி என்ற பெயர் வாங்காதே” என்று நீட்டு பாட ஆரம்பித்தது. “சத்தம் போடாதீங்கப்பா... ஏற்கெனவே பசியால் வயிறு வலிக்குது. நீங்க போடற சத்தத்தாலே தலைவலி வந்திடும்போல இருக்கு” என்று ஷீலு புலம்பியது. “உன்னை எழுப்பத்தானே சத்தம் போடுறோம்” என்றது நீட்டு. “நீட்டு, நம்ம ரீட்டுவுக்கு இன்னிக்குப் பிறந்தநாள். அவன் அம்மா நம்மை கேக் சாப்பிட வரச் சொல்லிருக்காங்க. ஷீலு வரலைன்னா பரவாயில்லை. வா, நாம போகலாம். நேரமாச்சு” என்றது கினி.

கேக் என்றதும் ஷீலுவின் நாக்கில் எச்சில் ஊறியது. “கினி, எனக்கும் ரெண்டு துண்டு கேக் எடுத்துட்டு வந்துரு” என்றது ஷீலு. “ஆசை, தோசை, அப்பளம் வடை... பிறந்தநாள் விழாவுக்கு வந்தால்தான் கேக் கிடைக்கும்” என்றது கினி. “நீ இங்கயே படுத்துக்கிட. நாங்க கேக்கும் ஸ்ட்ராபெர்ரியும் சாப்பிட்டுட்டு வர்றோம்” என்றது நீட்டு. “இல்ல இல்ல... என்னை விட்டுட்டுப் போகாதீங்க. இதோ நான் தயாராயிட்டேன்” என்று பொந்திலிருந்து வெளியே ஓடிவந்தது ஷீலு.

“நீ குளிச்சு, அலங்காரம் பண்ணிட்டு வர்றதுக்குள்ள விழாவே முடிஞ்சிடும். நானும் கினியும் கிளம்பறோம்” என்றது நீட்டு. “இனிமேல் இப்படித் தூங்க மாட்டேன்... இதோ ரெண்டே நிமிஷத்துல வந்துடறேன்” என்று நண்பர்களிடம் கெஞ்சியது ஷீலு. நீட்டுவும் கினியும் காத்திருந்தன. ஐந்து நிமிடங்களில் வந்துசேர்ந்தது ஷீலு. மூன்றும் பேசிக்கொண்டே ரீட்டுவின் வீட்டுக்குச் சென்றன. அங்கே விழா முடிந்து, வந்திருந் தவர்கள் எல்லாம் கிளம்பிவிட்டனர்.

“பிறந்தநாள் வாழ்த்துகள் ரீட்டு! கேக்கை எடுத்துட்டு வா” என்றது ஷீலு. “ஏன் நீங்க மூணு பேரும் இவ்வளவு தாமதமா வந்தீங்க... கேக் ரொம்ப சுவையா இருக்குன்னு எல்லாரும் சாப்பிட்டுட்டுப் போயிட்டாங்க... மன்னிச்சிடுங்கப்பா” என்றது ரீட்டு. “எல்லாம் ஷீலுவாலதான். நாங்க இன்னிக்கு ரொம்ப சீக்கிரமே எழுந் துட்டோம். இவளுக்காகக் காத்திருந்து கேக்கையும் கோட்டை விட்டுட்டோம்” என்றது கினி.

ஷீலுவுக்கு ஏமாற்றமாகிவிட்டது. “என்னால்தானே உங்களுக்கும் கேக் கிடைக்கல. என்னை மன்னிச்சிடுங்கப்பா. இனி இப்படிச் செய்ய மாட்டேன்” என்றது. “அடடா! இப்பதான் வந்தீங்களா? ஷீலு, நீட்டு, கினிக்கு கேக் எடுத்து வச்சிருக்கேன். வாங்க, ரீட்டுவும் உங்களுக்காகத்தான் சாப்பிடாமல் காத்திருக்கான்” என்று ரீட்டுவின் அம்மா அழைத்துச் சென்று, கேக்கைப் பரிமாறினார். ஷீலு, நீட்டு, கினியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x