Last Updated : 07 Feb, 2025 12:33 PM

 

Published : 07 Feb 2025 12:33 PM
Last Updated : 07 Feb 2025 12:33 PM

தேனீக்களின் நடன மொழி | உயிரினங்களின் மொழி - 5

பல கோடி ஆண்டுகளாகப் பூமியில் வாழ்ந்துவரும் தேனீக்களின் சமூக வாழ்க்கை, கூடுகட்டும் நேர்த்தி, தேன் உற்பத்தி, கூட்டு உழைப்பு போன்றவை வியப்பூட்டக்கூடியவை.

ஒரு தேனீக் கூட்டம் ராணித் தேனீ, வேலைக்காரத் தேனீக்கள், ஆண் தேனீக்கள் என்று பல அடுக்குக் கட்டமைப்பைக் கொண்டு செயல்படுகிறது. இத்தகைய சமூக அமைப்பை வெற்றிகரமாக இயக்க, தங்களுக்கென ஒரு தனித்துவமான மொழியைக் கொண்டுள்ளன.

பல உயிரினங்களின் மொழிகளில் முதன்முதலாக விஞ்ஞானரீதியாக ஆராயப்பட்ட மொழி, தேனீக்களின் நடன மொழிதான். ஆஸ்திரிய விஞ்ஞானி காரல் வான் ஃப்ரிஷ் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தேனீக்களை ஆய்வு செய்தார். தேனீக்கள் சூரியனின் நிலையைக் கொண்டு, திசையறியும் திறன் கொண்டவை என்பதே அவரின் முதல் கண்டறிதல். தேன்கூட்டின் முன் கண்ணாடிச் சுவர் அமைத்து, அவற்றின் நடனத்தின் ஒவ்வோர் அசைவைக் குறித்தும் நுணுக்கமாக விவரித்தார். இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

நாம் பேசுவதற்கு வார்த்தைகளைப் பயன்படுத்துவதுபோல் தேனீக்கள் நடனத்தைப் பயன்படுத்துகின்றன. தேன் சேகரிக்கச் சென்ற தேனீ ஒன்று திரும்பிவந்து தேன் கூட்டை வட்டமாகச் சுற்றி ஆடுகிறது என்றால், அது ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கிறது. அதற்கு ’நம் கூட்டிலிருந்து ஐம்பது மீட்டருக்குள் மிக நல்ல பூக்கள் உள்ளன’ என்று அர்த்தம்.

ஜெர்மனியின் வுர்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த நடனத்தின் நுணுக்கங்களை ஆராய்ந்து, வேகத்துக்கும் தேனின் தரத்திற்கும் உள்ள நேரடித் தொடர்பைக் கண்டறிந்துள்ளனர். இந்த வட்ட நடனத்தின் வேகம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்தப் பூக்களில் கிடைக்கும் தேனின் தரமும் அவ்வளவு உயர்வாக இருக்கும்.

ஆனால் அதே உணவு சற்றுத் தொலைவில் இருந்தால்? அப்போது தேனீ வேறு விதமாக ஆடும். இந்த நடனத்திற்கு Waggle Dance என்று பெயர். 50 முதல் 150 மீட்டர் தொலைவில் உள்ள உணவின் இருப்பிடத்தை இந்த நடனம் மூலம் மற்ற தேனீக்களுக்குச் சொல்கிறது. நடனத்தின் காலம் எவ்வளவு நீளமாக இருக்கிறதோ, உணவின் தொலைவும் அவ்வளவு அதிகமாக இருக்கும். அதைப் போலவே நடனத்தின் போது, தேனீக்கள் தங்களது உணர்கொம்புகளைப் (antennae) பயன்படுத்தி ஒன்றுக்கு இன்னொன்று அடையாளம் கண்டு, தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன.

ஒவ்வொரு பூவின் தனித்துவமான வாசனையையும் நினைவில் வைத்துக்கொள்ளும் திறன்கொண்டவை தேனீக்கள். நடனம் மூலம் மட்டுமல்ல, வாசனை மூலமாகவும் தேனீக்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன. ஃபெரோமோன்கள் என்கிற வாசனைப் பொருள் ஒவ்வொரு தேனீயிடமிருந்தும் சுரக்கிறது.

ராணித் தேனீயின் தாடைப் பகுதியிலிருந்து சுரக்கும் ‘மண்டிபுலர் பெரோமோன்கள்’ தேனீக் கூட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன. தேன்கூட்டில் உள்ள மற்ற தேனீக்களிடம் ஒழுங்கைக் கொண்டுவருவதில் இந்த ஃபெரோமோனின் பங்கு அதிகம். அதாவது அம்மா சொல்வதைக் கேட்டு நடக்கும் குழந்தையைப் போல், ஃபெரோமோன்களின் மூலம் ராணித் தேனீ என்ன நினைக்கிறது என்றும் ராணியின் உடல் நிலை பற்றியும் மற்ற தேனீக்கள் தெரிந்துகொள்கின்றன .

வேலைக்காரத் தேனீக்களிடமிருந்து ’நாஸனோவ் ஃபெரோமோன்கள்’ சுரக்கின்றன. இவை திசைகாட்டிகளாகச் செயல்பட்டு, தேன்கூட்டிற்கு வழிகாட்டுவதோடு, உணவு தேடும் தேனீக்களை இலக்கை நோக்கியும் அழைத்துச் செல்கின்றன.

அது போலவே உணவு மூலங்களைக் கண்டுபிடித்த தேனீக்கள், ’மார்க்கர் ஃபெரோமோன்கள்’ மூலம் அந்த இடத்தை அடையாளப்படுத்துகின்றன. இந்த வாசனை பூக்களில் உள்ள தேனின் அளவையும் தெரிவிக்கின்றன.

ஆபத்து நேரத்தில் தேனீக்கள் ’ஐசோபென்டைல் அசெட்டேட்’ என்கிற எச்சரிக்கை ஃபெரோமோன்களை வெளியிடுகின்றன. இது கூட்டத்தை உடனடியாகப் பாதுகாப்புக்காக ஒன்று சேர்க்கிறது. ஒவ்வொரு தேனீக் கூட்டமும் தனக்கென தனித்துவமான அடையாள ஃபெரோமோன்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் அந்தக் குழுவின் உறுப்பினர்கள் ஒருவரை இன்னொருவர் அடையாளம் கண்டு, அந்நிய தேனீக்களை விரட்டிவிடுகின்றன.

குழு பிரியும் நேரத்தில் புதிய குழுவுக்கான சிறப்பு ஃபெரோமோன்கள் வெளியிடப்படுகின்றன. இவை பழைய குழுவிலிருந்து பிரிந்து செல்லும் தேனீக்களைப் புதிய இடத்திற்கு வழிநடத்துகின்றன. வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், ஒரு நானோகிராம் (மில்லியனில் ஒரு கிராம்) அளவிலான ஃபெரோமோன்கள்கூட ஆயிரக்கணக்கான தேனீக்களின் நடத்தையை மாற்றும் திறன் கொண்டவை!

நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வுகள், தேனீக்களின் ஒலிவழித் தொடர்பு பற்றிய புதிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. தேனீக்கள் தங்கள் இறக்கைகளின் அதிர்வால் 200-500 ஹெர்ட்ஸ் வரையிலான ஒலிகளை உருவாக்குகின்றன. வெவ்வேறு அதிர்வெண்களில் வெளிப்படும் இந்த ஒலிகள் வெவ்வேறு செய்திகளைத் தெரிவிக்கின்றன.

தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தேனீக்களின் நடனங்களை ஆய்வு செய்யும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

கட்டுரையாளர், எழுத்தாளர். writernaseema@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x