Published : 22 Jan 2025 06:32 AM
Last Updated : 22 Jan 2025 06:32 AM
உலகம் ஒரு யானை என்றால் என் மலையாளம் அந்த யானையின் துதிக்கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு சின்ன மணல்துகள். அந்தச் சின்னஞ்சிறிய மணல் துகளின் மடியில்தான் ‘எம்.டி. வாசுதேவன் நாயர்’ எனும் நான் பிறந்தேன். அதில்தான் சுவாசிக்கத் தொடங்கினேன்.
அதில்தான் தவழ்ந்தேன். விழுந்தும் எழுந்தும் நடை பழகினேன். என் செவியில் வந்து விழுந்த முதல் ஓசை. என் நாவில் உருண்ட முதல் சொல். நான் விரல் பிடித்து எழுதிய முதல் எழுத்து. என் மலையாளம் மொழியல்ல, நான் வாழும் நிலமல்ல. என்னில் ஒரு பகுதி மலையாளம்.
என் கேரளத்தையும் என் இந்தியாவையும் இந்தியாவை ஒரு பகுதியாகக் கொண்டிருக்கும் என் உலகையும் என் தாய்மொழியின் வழியேதான் அறிந்துகொண்டேன். இத்தனைக்கும் தமிழ்போல் நீண்ட, நெடிய வரலாறு இல்லை மலையாளத்துக்கு. என் மொழியில் சங்க இலக்கியம் இல்லை. திருக்குறள் இல்லை. என் மண்ணில் ஒரு டால்ஸ்டாயோ செகாவோ தோன்றியதில்லை.
அதனால் சோர்ந்துவிடவில்லை மலையாளம். சோவியத் ஒன்றியத்துக்குப் பறந்து சென்று, டால்ஸ்டாயைச் சொல் சொல்லாக, வரி வரியாக, பக்கம் பக்கமாக அள்ளி எடுத்துவந்து எங்கள் கரங்களில் கொடுத்தது மலையாளம். பிரெஞ்சுக் கதைகளும் ஆங்கிலக் கதைகளும் அரபுக் கதைகளும் இன்னும் பல தேசத்துக் கதைகளும் மலையாளக் கரையோரம் கப்பல்போல் மிதந்து, மிதந்து வந்துசேர்ந்தன. ஆரவாரத்தோடு ஒவ்வொரு கப்பலிலும் தாவி ஏறி, அதிலுள்ள எல்லாச் சரக்குகளையும் அரவணைத்துக்கொண்டோம்.
ஒரு மொழி எப்படி வளரும் என்பதை மலையாளத்தைக் கண்டே தெரிந்துகொண்டேன். என்னிடம் பழமை இல்லை. அதனால் என்ன? கிரேக்கத்தின் பழமையும் ரோமாபுரியின் பழமையும் என் பழமைதான், இல்லையா? தமிழ் இருக்கும் இடத்தில் மலையாளத்தை நிரப்பினால் சங்க இலக்கியமும் திருக்குறளும் இன்னபிற இலக்கியங்களும் என் மொழியின் படைப்புகளாக மாறிவிடும் அல்லவா? எங்கோ இருக்கும் ஆப்பிரிக்காவை, எங்கோ இருக்கும் லத்தீன் அமெரிக்காவை மலையாளம் நாடிச் சென்று கைபிடித்து இழுத்துவந்தது.
எங்கோ பிறந்த ஹோமரை, ஏதோ மொழி பேசிய டால்ஸ்டாயை என் ஹோமர், என் டால்ஸ்டாய் என்று பெருமிதத்தோடு நான் தூக்கிப்பிடித்துக் கொண்டாடுவதற்குக் காரணம் மலையாளம். உன் சொற்கள் வளர வேண்டுமா? உன் கற்பனையில் அதிக வண்ணங்கள் வேண்டுமா? சிந்தனையில் கூர்மை தோன்ற வேண்டுமா? இன்னும், இன்னும் என்று விரிந்துகொண்டே போ. நானும் அதைத்தான் செய்கிறேன் என்கிறது என் மொழி.
ஒரே நேரத்தில் என்னால் ஓர் இளந்தளிராகவும் ஆலமரமாகவும் இருக்க முடிவதற்குக் காரணம் நான் எல்லாத் திசைகளிலிருந்தும் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொண்டே இருப்பதுதான் என்கிறது மலையாளம். கற்க, கற்க அழகு கூடும். கற்க, கற்க அடையாளம் தோன்றும்.
கற்க, கற்க உனக்கென்று ஒரு தனித்துவம் உருவாகும். அப்படி உருவாகும் தருணத்தில் நீ ஒரு மலையாள எழுத்தாளராகவும் உலக எழுத்தாளராகவும் ஒரே நேரத்தில் சுடர்விட்டு ஜொலிப்பாய் என்றது மலையாளம். நான் எழுத அமரும் ஒவ்வொரு முறையும் இதை நினைவில் வைத்திருப்பேன். அதனால்தான் என் வீதியில் உள்ள, நான் காணும் ஒரு மனிதனின் கதையை எழுதினாலும் அது உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனின் கதையாக உருமாறுகிறது.
கேரளம் எங்கே இருக்கிறது, மலையாளம் என்றால் என்ன என்று தெரியாதவர்களாலும்கூட ஒரு கேரளத்து மனிதனின் இதயத்தோடு ஒன்றமுடிகிறது. ஒரு மொழிதான் நூறு மொழியாக வளர்கிறது. ஒரு மனிதன்தான் கோடிக் கணக்கான மனிதனாக வளர்ந்து, பெருகுகிறான். ஓர் இதயம்தான் எல்லார் உடலிலும் கிடந்து துடிக்கிறது. ஒரு நிலத்தில்தான் அனைவரும் வாழ்கிறோம்.
ஒரு கடலைத்தான், ஒரு கதிரவனைத்தான், ஒரு பறவையைத்தான் அனைவரும் ரசிக்கிறோம். மனிதனின் கதை என்பது ஒன்றுதான். அந்த ஒரு கதையைத்தான் எல்லா எழுத்தாளர்களும் எல்லா மொழிகளிலும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். உலகில் ஒரு சொல்தான் உண்டு. அந்த ஒற்றைச் சொல்தான் கவிதையாக, கதையாக, வரலாறாக, சமயமாக உயர்கிறது. நீ உன் சொல்லை எழுது. உன் கதையை எழுது. உன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள். அதை உலகம் அணைத்துக்கொள்ளும் என்கிறது மலையாளம்.
அந்த அதிசயத்தைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். கேரளத்தின் கரைகளிலிருந்து மலையாளக் கப்பல்கள் வரிசை, வரிசையாக உலகின் பல பகுதிகளைச் சென்று சேர்ந்துகொண்டிருக்கின்றன. என் நிலத்துக்கு டால்ஸ்டாய் வந்ததுபோல், என் பஷீர், என் தகழி வேறு நிலங்களை அடைந்திருக்கிறார்கள். நான் சோவியத் கதைகளைப் பற்றிக்கொண்டதுபோல் மலையாளக் கதைகளை அவர்கள் பற்றிக்கொள்வதைப் பார்க்கிறேன். நீ யாருக்கு எழுதுகிறாய் என்று கேட்டால், உலகுக்காக என்பேன். எதற்கு எழுதுகிறாய் என்றால், என் மொழிக்காக என்பதே என் பதில்.
எம்.டி.வாசுதேவன் நாயர்: புகழ்பெற்ற எழுத்தாளர். சிறு வயதிலேயே மாத்ருபூமி இதழில் எழுத ஆரம்பித்தார். பின்னர் மாத்ருபூமியில் உதவியாசிரியராகச் சேர்ந்தார். இவரின் முதல் நாவல் ‘நாலுகெட்டு’ கேரள சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது. இலக்கியத்துக்காக வழங்கப்படும் ‘ஞானபீட விருது’ பெற்றிருக்கிறார். இவரின் கதைகள் திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன. திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார்.
(இனிக்கும்)
- marudhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment