Published : 15 Jan 2025 04:42 PM
Last Updated : 15 Jan 2025 04:42 PM

ரோசலிண்ட் ஃபிராங்க்ளின் | விஞ்ஞானிகள் - 17

டி.என்.ஏ மூலக்கூறு அமைப்பு என்றதும் இரண்டு ரிப்பன் பின்னிப் பிணைந்தது போன்ற அமைப்பு நினைவுக்கு வரும். கூடவே வாட்சன், கிரிக்கும் வருவார்கள். ஆனால் அவர்களுக்குப் பின்னால் வெளியே தெரியாத ஒரு பெண் விஞ்ஞானி இருக்கிறார். அவர் ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின். இயற்பியலாளர், வேதியியலாளர், மூலக்கூறு உயிரியல் மற்றும் எக்ஸ் கதிர் படிக வரைவி நிபுணர். மரபணு, வைரஸ், நிலக்கரி, கிராபைட் ஆகியவற்றின் வடிவமைப்பக் கண்டறிந்ததில் பெரும் பங்காற்றியவர்.

1920, ஜூலை 25 அன்று லண்டனில் பிறந்தார் ரோசலிண்ட். பள்ளியில் படிப்பு, விளையாட்டு இரண்டிலும் சிறந்து விளங்கினார். ரோசலிண்டின் தந்தை பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார். மற்ற குழந்தைகள் வரலாற்றுப் பாடத்தில் ஆர்வம் காட்ட, ரோசலிண்ட் மட்டும் அறிவியலில் ஆர்வமாக இருந்தார்.

கல்லூரிப் படிப்பில் அறிவியலைத் தேர்ந்தெடுதார் ரோசலிண்ட். 1938இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நியூன்ஹாம் கல்லூரியில் இயல் வேதியியல் படிப்பில் சேர்ந்தார். 1941இல் படிப்பை முடித்ததும், அதே கல்லூரியில் ஆராய்ச்சி செய்ய உதவித் தொகையோடு வேலை கிடைத்தது.

சிறிது காலத்தில் ரோசலிண்டுக்கு பிரிட்டிஷ் நிலக்கரி பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவி ஆராய்ச்சியாளர் பணி கிடைத்தது. கிடைத்த உதவித் தொகையை விட்டு இந்த வேலைக்கு மாறினார். இங்கு வேலை செய்துகொண்டே நிலக்கரி கார்பன் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். நிலக்கரி கார்பன் குறித்து 19 ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார்.

முனைவர் பட்டம் முடித்த பிறகு பாரிஸில் உள்ள மாநில ரசாயன ஆய்வகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு ஜாக் மெரிங் என்பவருடன் இணைந்து எக்ஸ்ரே சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். எக்ஸ்ரே படிகவியல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் அடைந்தார் ரோசலிண்ட்.

1950இல் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் வேலை கிடைத்தது. வேலையுடன் சேர்த்து டி.என்.ஏ. ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மாரிஸ் வில்கின்ஸ் என்பவரும் டி.என்.ஏ. ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். எனவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ரோசலிண்ட் தன் டி.என்.ஏ. ஆராய்ச்சியின்போது அதை முதன் முதலாகப் படம் எடுத்தார். ரோசலிண்டின் நிபுணத்துவ எக்ஸ்ரே படிகவியல் திறனே அதற்குக் காரணம். அந்த டி.என்.ஏ. மூலக்கூறில் ஏ, பி என்று இரண்டு மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்தார். இரட்டை அமைப்பு கொண்ட டி.என்.ஏ. இழைகளின் அடிப்படை பரிமாணங்களைக் கண்டறிந்தார். டி.என்.ஏ. குறித்து அடுத்தடுத்து 5 ஆய்வுக் கட்டுரைகளை எழுதி அனுப்பினார். இருப்பினும் வில்கின்ஸுடனான தொடர் கருத்து வேறுபாட்டால் கல்லூரியை விட்டு வெளியேறினார் ரோசலிண்ட்.

அதே நேரத்தில்தான் ஜேம்ஸ் வாட்சன், பிரான்சிஸ் கிரிக் இருவரும் சேர்ந்து டி.என்.ஏ. அமைப்பை ஆராய்ச்சி செய்தனர். ரோசலிண்டின் டி.என்.ஏ. படம் உள்ளிட்ட ஆராய்ச்சிக் கட்டுரை வில்கின்ஸ் மூலம் வாட்சன், கிரிக்கிற்குக் கிடைத்தன.

வாட்சன், கிரிக் இருவரின் சந்தேகங்களுக்கும் ரோசலிண்ட் எடுத்த படம் விளக்கம் அளித்தது. இருவரும் மேலும் ஆராய்ச்சி செய்து மரபணுக் குறித்த செய்திகளைக் கண்டறிந்தனர். மேம்படுத்திய ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிட்ட வாட்சன், கிரிக் இருவருக்கும் பெயரும் புகழும் கிடைத்தன.

நடந்த எதுவும் ரோசலிண்டிற்குத் தெரியாது. பிர்க் பக் ஆராய்ச்சிக் கூடத்தில் புகையிலை வைரஸ் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். வைராலஜி என்கிற துறை தோன்ற அடித்தளமான ஆராய்ச்சிகளைச் செய்தார். வைரஸ் குறித்து 21 ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.

45 ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. ரோசலிண்டிற்குக் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டது. 38 வயதில் 1958, ஏப்ரல் 16 அன்று மறைந்தார். டி.என்.ஏ. மூலக்கூறு அமைப்பு கண்டறிந்ததில் பாதிக்கும் மேற்பட்ட உழைப்பைச் செலுத்தியது ரோசலிண்ட்தான் என்கிற உண்மையை மூவரும் வெளி உலகிற்குச் சொன்னார்கள்.

ரோசலிண்ட் இறந்த நான்கு ஆண்டுகளில் டி.என்.ஏ.வின் இரட்டை வடிவமைப்பைக் கண்டறிந்ததற்காக வாட்சன், கிரிக், மாரிஸ் வில்கின்ஸ் மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அவர்கள் ரோசலிண்டுடன் சேர்ந்து நோபல் பரிசைப் பகிர்ந்துகொள்ள விருப்பம் தெரிவித்தனர். ஆனால், நோபல் பரிசு உயிருடன் இருப்பவருக்கு வழங்கப்படுவதால் ரோசலிண்ட் பெயர் ஏற்கப்படவில்லை. எனவே ’தி டார்க் லேடி ஆஃப் டி.என்.ஏ.’, ’மறக்கப்பட்ட விஞ்ஞானி’ போன்ற பெயர்களால் ரோசலிண்ட் அழைக்கப்பட்டார்.

- கட்டுரையாளர், எழுத்தாளர்

> முந்தைய அத்தியாயம்: எட்வர்டு ஜென்னர் | விஞ்ஞானிகள் - 16

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x