Published : 11 Jul 2018 10:39 AM
Last Updated : 11 Jul 2018 10:39 AM
கு
ழந்தை நடக்க ஆரம்பிக்கும்போதே அறிமுகமாகிவிடும் வாகனம் சைக்கிள். சிறுவர் முதல் பெரியவர்வரை உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனமும் சைக்கிள்தான். சைக்கிளுக்கு எரிபொருள் தேவை இல்லை. அதனால் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து இல்லை. மற்ற வாகனங்களைவிட விலையும் குறைவாக இருப்பதால் எளிய மக்களின் விருப்பமான வாகனமாக இருந்துவருகிறது.
சைக்கிள் கண்டுபிடிப்பு நீண்ட காலத்துக்கு முன்பே சீனாவிலும் ஐரோப்பாவிலும் ஆரம்பித்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இருக்கின்றன. 1790-ம் ஆண்டு பிரான்சில் வசித்த கோம்டி மீடி சைவ்ராக், மரத்துண்டுகளைச் செதுக்கிக் கொண்டிருந்தபோது தற்செயலாக சைக்கிள் போன்ற வாகனத்தை உருவாக்கினார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உழைத்து முதல் சைக்கிளைக் கொண்டுவந்தார். இந்த சைக்கிளில் அமர்ந்து, கால்களால் தரையில் உந்திச் செல்ல வேண்டும். இதை அறிஞர்கள், பொதுமக்களுக்கு அறிமுகமும் செய்தும் வைத்தார்.
1816-ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த பாரன் கார்ல் வோன் ட்ரைஸ், கோம்டி உருவாக்கிய சைக்கிளின் மாதிரியை அடிப்படையாக வைத்து, புதிதாகப் பல விஷயங்களைச் சேர்த்தார். ஆணிகளைத் தவிர, சைக்கிளின் அனைத்து பாகங்களும் மரத்தால் செய்யப்பட்டன. முன் சக்கரமும் பின் சக்கரமும் இணைக்கப்பட்டிருந்தது. முன் சக்கரம் திருப்பும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. பெடல் மட்டும்தான் இந்த சைக்கிளில் இல்லை. இதுதான் இன்று நாம் பயன்படுத்தும் நவீன சைக்கிள் போன்று இருந்தது. 30 கிலோ எடை கொண்ட சைக்கிளுக்கு 1818-ம் ஆண்டு காப்புரிமையும் பெற்றார். அது ஐரோப்பா முழுவதும் பரவியது.
லண்டனைச் சேர்ந்த டென்னிஸ் ஜான்சன், பாரன் கார்ல் சைக்கிளை மேலும் எளிதாகப் பயன்படுத்தும் விதத்தில் மாற்றினார். மரத்துக்குப் பதிலாக உலோகங்களைப் பயன்படுத்தினார். இதனால் சாலையில் சைக்கிள் எளிதாகவும் சற்று வேகமாகவும் சென்றது. ஹாபி ஹார்ஸ் என்று அழைக்கப்பட்ட இந்த சைக்கிள்கள் மிகவும் பிரபலமாகின. ஆனால் அருகில் நடந்து செல்பவர்களுக்கு ஆபத்தை விளைவித்ததால், 1820-ம் ஆண்டு பயன்பாடு குறைந்துவிட்டது.
1839-ம் ஆண்டு முதலில் மிதிக்கக்கூடிய பெடல் வைத்த சைக்கிளை உருவாக்கினார் கிர்க்பாட்ரிக் மெக்மில்லன். இன்றைய நவீன சைக்கிளில் இருந்த அத்தனை அம்சங்களும் இதில் இருந்தன. முன் சக்கரத்தைவிடப் பின் சக்கரம் சற்றுப் பெரிதாக இருந்தது. அதனால்தான் சைக்கிள் என்றதும் மெக்மில்லனின் நினைவு நம் எல்லோருக்கும் வந்துவிடுகிறது.
பிரான்ஸைச் சேர்ந்த ஏர்னஸ்ட் மிசாக்ஸ், 1863-ம் ஆண்டு பால் பேரிங், கிராங்ஸ் போன்றவற்றை இணைத்து சைக்கிளை இன்னும் எளிதாக மாற்றினார். இவரே வணிக ரீதியில் சைக்கிள்களை விற்பனைக்குக் கொண்டுவந்தவர். 1870 முதல் 1880வரை பென்னி ஃபார்திங் என்ற இங்கிலாந்துக்காரர் தயாரித்த, மிகப் பெரிய பின் சக்கரமும் மிகச் சிறிய முன் சக்கரமும் கொண்ட சைக்கிள்கள் பிரபலமாக இருந்தன. இவை இவரது பெயரிலேயே அழைக்கப்பட்டன.
1886-ம் ஆண்டு ஜான் கெம்ப் ஸ்டார்லி இரு சக்கரங்களும் ஒரே அளவில் இருக்கும் சைக்கிளை உருவாக்கினார். இது பயணம் செய்ய மிகவும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது. இவரே நவீன சைக்கிளின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
ரிம், பற்சக்கரம், சங்கிலி, ரப்பர் டியூப், டயர்கள், பிரேக் என்று முன்னேற்றங்கள் வந்தன. ஜான் கெம்ப் ஸ்டார்லியுடனும் டான் பாய்ட் டன்லப்புடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, சர் எட்மண்ட் கிரேன் இங்கிலாந்தில் ’ஹெர்குலிஸ்’ என்ற சைக்கிள் உற்பத்தி நிறுவனத்தை ஆரம்பித்தார். பத்தே ஆண்டுகளில் உலகம் முழுவதும் இந்த சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. 1910 முதல் 1950வரை உலகின் சாலைகளில் முதன்மையான வாகனமாக சைக்கிளே இருந்தது.
இன்று குழந்தைகள் சைக்கிள், பெண்கள் சைக்கிள், பந்தய சைக்கிள், மலையேற்ற சைக்கிள் என்று பலவும் வந்துவிட்டன. 2010-ம் ஆண்டு கணக்கின்படி உலகம் முழுவதும் 12,500 முதல் 13,000 கோடி சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்பட்டன!
(கண்டுபிடிப்போம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT