Last Updated : 25 Dec, 2024 06:06 AM

 

Published : 25 Dec 2024 06:06 AM
Last Updated : 25 Dec 2024 06:06 AM

வாசிக்க சில நூல்கள்

கிரிக்கெட்டில் சுழலும் கணிதம், விழியன், புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24332424

பெரும்பாலான விளையாட்டுகளில் கணிதம், புள்ளியியல் இருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது அதை நாம் உணர்வதில்லை. அறிவியல், கணிதம் இல்லாமல் எந்த நவீன அம்சமும் உலகில் செயல்பட முடியாது. அந்த வகையில் கணிதத்தை கிரிக்கெட் வழியாக நெருக்கமாக்க முயல்கிறது இந்த நூல். கிரிக்கெட்டின் எல்லா நிலைகளிலும் கணிதம் உள்ளதாகக் குறிப்பிடும் ஆசிரியர், அதைக் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் கதைபோலக் கொடுத்துள்ளார்.

தமிழில் சிறார் இலக்கியம், ப.இப்ராஹிம், என்.சி.பி.எச்., தொடர்புக்கு: 044-2635 9906

சிறார் இலக்கிய வரலாறு குறித்த நூல்கள் தமிழில் குறைவு. அதிலும் நவீனத் தமிழ் சிறார் இலக்கியம் குறித்து நூல்கள் அதிகமில்லை. இந்த நூல் ஆசிரியர் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் வளர்ச்சி, வகைகள் குறித்துப் பேசியிருக்கும் அதேநேரம், 18 சிறார் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியும் உள்ளார். அதில் பாதிப் பேர் தற்காலத்தில் எழுதிவருபவர்கள். எழுத்தாளர்கள் குறித்த அறிமுகம் மட்டுமல்லாமல் சில புத்தகப் பகுதிகளின் சுருக்கத்தையும் கொடுத்துள்ளார்.

மந்திரத் தொப்பி,ஸ்ரீயக் ஷா, ஸ்ரீ பப்ளிகேஷன்ஸ், தொடர்புக்கு: 8072903442

குழந்தைகளே கதை எழுதி நூல்கள் பிரசுரமாகும் காலம் இது. கோத்தகிரியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஸ்ரீயக் ஷா எழுதியுள்ள சிறுகதை நூல் இது. நூலின் தலைப்புக் கதையான மந்திரத் தொப்பி, குழந்தைகளை ஆச்சரியப்படுத்தும் மந்திரவாதியுடன் ஊர்க் குழந்தைகளுக்கு ஏற்படும் விநோத அனுபவம் தொடர்பானது. இந்த நூலில் இதுபோல் 10 கதைகள் இடம்பெற்றுள்ளன. தொடர் வாசிப்பின் மூலமாக இதுபோன்ற கதைகளை எழுதியிருப்பதாக ஸ்ரீயக் ஷா சொல்கிறார்.

போக்கிரி இளவரசி, கேத்லீன் எம். முல்டூன், தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ, ஓங்கில் கூட்டம், தொடர்புக்கு: 044-24356935

மாற்றுத்திறனாளிகளை, மாற்றுத்திறனாளிக் குழந்தைகளைப் புரிந்துகொள்வதில் சமூகத்துக்குப் பிரச்சினை இருக்கிறது. அது மற்ற குழந்தைகளிடமும் எதிர்மறைத் தாக்கத்தைச் செலுத்துகிறது. அதைக் குறித்துக் குழந்தைகளுக்கு எப்படி இணக்கமாகப் புரியவைப்பது என்பதைக் கதை வடிவில் முயன்றுள்ளது இந்த நூல். இந்த உலகம் அனைவருக்குமானது என்பதை நம் அனைவருக்கும் உணர்த்தும் வகையில் இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது.

பாட்டி பெயர் என்ன?, ச.மாடசாமி; பாட்டியும் பேத்தியும், லைலாதேவி, புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24332924

பேராசிரியர் ச.மாடசாமியும் லைலாதேவியும் எளிய மொழிநடையில், மக்களுக்கு அவசியம் தேவைப்படும் கருத்துகளை மையமாக வைத்துக் கதை எழுதுபவர்கள். இந்த இரண்டு நூல்களிலும் நம் சமூகம் குறித்துக் குழந்தைகளுக்குக் கூறப்பட வேண்டிய கதைகள் இடம்பெற்றுள்ளன. பாட்டியின் பெயர் தெரியாத பேரக் குழந்தைகள், உழைப்பை மட்டும் நம்புவது, புத்தியை ஏன் தீட்ட வேண்டும், குழந்தைகளைப் புரிந்துகொள்ளாத பெற்றோர் என்று பல விஷயங்களை இந்த எளிய கதைகள் பேசுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x