Last Updated : 18 Dec, 2024 06:21 AM

 

Published : 18 Dec 2024 06:21 AM
Last Updated : 18 Dec 2024 06:21 AM

ஒரு ஜப்பானியக் கனவு! | தேன் மிட்டாய் 33

எந்தக் கனவும் வரலாமா என்று நம்மிடம் அனுமதி கேட்டுக்கொண்டு தோன்றுவது இல்லை. நம் உத்தரவைக் கேட்டுக் கொண்டு கிளம்புவதும் இல்லை. அதுவாகவே வருகிறது. அதுவாகவே விலகுகிறது. எனக்குள் அப்படி ஒரு கனவு என் அனுமதி கேட்காமல் ஒரு நாள் தோன்றிவிட்டது. கிளம்பிவிடு என்று நான் கெஞ்சிக் கேட்டுக் கொண்ட பிறகும் மாட்டேன் என்று விடாப்பிடியாகக் கட்டிப்பிடித்துக் கொண்டு விட்டது. அதன் தீவிரத்தைக் கண்டதும் நானும் ஒரு முடிவெடுத்துவிட்டேன். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். யாரும் எதுவும் சொல்லட்டும். என் கனவை இறுதிவரை கைவிடமாட்டேன்.

அப்படி என்ன கனவு என்கிறீர்களா? என் தாய்நாடான ஜப்பானுக்கு என் விரல்களால் ஒரு வரைபடத்தை உருவாக்க வேண்டும். அவ்வளவுதான். எப்படிச் செய்யப் போகிறேன்? தெரியாது. எந்தப் பெரிய பின்புலமும் இல்லாத என்னைப் போன்ற ஒரு தனி மனிதனால் இதைச் சாத்தியப்படுத்த முடியுமா? தெரியாது. என் வாழ்நாளுக்குள் இதை என்னால் நிறைவேற்ற முடியுமா? தெரியாது. அப்படியே செய்து முடித்தாலும் அதனால் எனக்கு என்ன பலன்? தெரியாது.

தெரிய வேண்டியதும் இல்லை. ’இனோ தடாதகா’ எனும் என் பெயர் வரலாற்றில் நிலைத்திருக்க வேண்டும் என்பது அல்ல என் நோக்கம். ஜப்பானியர்கள் என்னைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்தப் பணியை நான் ஆரம்பிக்கப் போவதும் இல்லை. என் உடலோடும் உணர்வோடும் கலந்திருக்கும் ஜப்பானுக்காக இதை நான் செய்ய விரும்புகிறேன்.

ஓர் ஓவியர் நினைத்தால் எதையும் வரைந்துவிட முடியும். பறவை, விலங்கு, மரம், கதிரவன், கடல், நட்சத்திரம், நிலா அனைத்தையும் கோடுகளிலும் வண்ணங்களிலும் கொண்டுவந்துவிட முடியும். நம்மால் காண முடியாத கடவுளையும் சாத்தானையும்கூடக் கண்மூடிக் கற்பனை செய்து கொண்டுவந்துவிட முடியும். ஒரு நாட்டை வரைபடமாக மாற்றுவது எளிதல்ல. இந்தா, பார்த்துக்கொள் இதுதான் நான் என்று ஒரு நாடு எழுந்து வந்து உங்கள் முன்னால் நிற்கப் போவதில்லை. வரைபடம் என்பது ஓவியமல்ல என்பதால் கற்பனை செய்யவும் முடியாது.

நான் வரைய விரும்பும் ஜப்பான் துல்லியமாக இருக்க வேண்டும். இதுதான் ஜப்பான். இப்படித்தான் காட்சி அளிக்கும் ஜப்பான். அதன் நீளம் இவ்வளவு, அகலம் இவ்வளவு, இங்கே கடல் இருக்கும், இங்கே நிலம் இருக்கும், இங்கே எரிமலைகள் இருக்கும், இங்கே எல்லை தொடங்குகிறது, இங்கே முடிவடைகிறது என்று ஒவ்வொன்றையும் தனித்தனியே குறிக்க வேண்டும். இதுதான் ஜப்பான் என்று என் நாட்டை உயர்த்திப் பிடித்து உலகுக்குக் காண்பிக்க வேண்டும். இதுதான் நம் நாடு, பார்த்துக்கொள்ளுங்கள் என்று நம் மக்களுக்கும் எடுத்துச்சொல்ல வேண்டும்.

சாமானியர் முதல் மன்னர் வரை அனைவரின் கரங்களிலும் தவழ வேண்டும் என் வரைபடம். குடிசை முதல் மாளிகை வரை எங்கும் இருக்க வேண்டும் என் வரைபடம். ஜப்பானைச் சுற்றிப் பார்க்கத் துடிக்கும் ஒவ்வோர் அயல்நாட்டுக்காரருக்கும் என் வரைபடம் தெளிவாக வழிகாட்ட வேண்டும். சாலை அமைக்க வேண்டுமா? கட்டிடம் கட்ட வேண்டுமா? அடிக்கடி ஜப்பானைத் தாக்கும் நிலநடுக்கம் எங்கே ஏற்படுகிறது, எப்படி ஏற்படுகிறது, எப்படித் தப்பிப்பது ஆகியவற்றைத் திட்டமிட வேண்டுமா? என் வரைபடத்தை அழையுங்கள். அது உதவிக்கு வரும்.

என் ஜப்பானில் எங்கெல்லாம் காடுகள் இருக்கின்றன, எங்கெல்லாம் ஆறுகள் பாய்கின்றன, எங்கெல்லாம் பயிர்களை விளைவிக்க முடியும், எங்கெல்லாம் இயற்கை வளங்கள் இருக்கும், ஒரு மாகாணத்தில் இருந்து இன்னொன்றுக்கு எப்படி விரைவாகப் போய்ச் சேர்வது? அனைத்துக்கும் என் வரைபடத்திடம் விடைகள் இருக்கும்.

என் கனவை யாரிடம் பகிர்ந்துகொண்டாலும் அவர் என்னிடம் கேட்ட ஒரே கேள்வி. ’கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இவ்வளவு பெரிய திட்டத்தை எப்படி நீ முன்னெடுப்பாய்?’ முதல் அடியை எடுத்து வைப்பதன் மூலம் என்றேன் ஒவ்வொருவரிடமும். ஒரு கனவை அடைவதற்கு நாம் செய்ய வேண்டியது, அது மட்டும்தான் என்பது என் உறுதியான நம்பிக்கை. ஓர் அடி. அதன்பின் இன்னோர் அடி.

அதன்பின் இன்னொன்று. இன்னொன்று. இன்னொன்று. அதுபோதும். ஒரு குழந்தை அப்படித்தானே நடக்க ஆரம்பிக்கிறது? ஒரு பெரும் மழை ஒரு தூறலில்தானே தொடங்குகிறது? ஓர் எழுத்தில் இருந்துதானே எல்லாப் பெரிய படைப்புகளும் உருவாகின்றன? ஒரேயொரு சிறு கற்பனையில் இருந்துதானே எல்லாக் கவிதைகளும் எல்லாக் காவியங்களும் தீட்டப்படுகின்றன? நான் நடப்பேன்.

நடக்கும் ஒவ்வோர் அடியையும் அளப்பேன். ஒவ்வொன்றையும் குறித்துக்கொள்வேன். என் வீட்டுக்கு ஒரு வரைபடத்தை உருவாக்குவதற்கு எனக்குச் சில மணி நேரம் போதும். என் கிராமத்துக்கு? அதிகம் ஆகும். கடினமாக இருக்கும். நிறைய நடக்க வேண்டும். நிறைய அளக்க வேண்டும். நிறைய குறிப்புகள் எடுக்க வேண்டும். ஆனால் செய்வது சாத்தியம்.

என் கிராமம் முடிந்ததும் இன்னொரு கிராமத்துக்குச் செல்வேன். அது முடிந்ததும் மற்றொன்று. ஒரு மாகாணம் முடிந்ததும், இன்னொன்று. அது முடிந்ததும் மற்றொன்று. என் ஜப்பான் முழுக்க நடப்பேன். கல்லும் முள்ளும் நீரும் சருகும் மிதிபட, மிதிபட நடப்பேன். என் ஜப்பானின் காற்று முழுவதையும் சுவாசித்து முடிக்கும்வரை என் பயணம் நிறைவடையாது. ‘நீ நட. நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்கிறது என் கனவு. ’நீ நட. நான் இருக்கிறேன்’ என்கிறது என் ஜப்பான். வேறென்ன வேண்டும் எனக்கு?

இனோ தடாதகா: 1745ஆம் ஆண்டு பிறந்தவர். ஓய்வு பெற்ற பிறகு, நிலம் அளக்கும் நில அளவையர் பணியை நாட்டுக்காக மேற்கொண்டவர். நவீன கணக்கெடுப்பு நுட்பத்தைப் பயன்படுத்தி, ஜப்பானின் முதல் வரைபடத்தை உருவாக்கியவர்.

(இனிக்கும்)

- marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x