Published : 20 Nov 2024 06:18 AM
Last Updated : 20 Nov 2024 06:18 AM

இறக்கைகளைத் தீர்மானிப்பது எது? | பறப்பதுவே 06

பறவைகளில் பொதுவாக நான்கு வகையான இறக்கை வடிவமைப்புகள் உள்ளன. இறக்கைகளின் வடிவத்தைப் பற்றி அறியும் முன் புலன் விகிதத்தைப் புரிந்துகொள்வோம். ஒரு பொருளின் நீளத்துக்கும் அகலத்துக்கும் உள்ள விகிதத்தைத்தான் ‘புலன் விகிதம்’ என்கிறோம்.

அதாவது வேப்பிலையின் நீளம், அகலத்தைப் போல் மூன்றிலிருந்து நான்கு மடங்கு இருக்கும். வாழை இலை நீளமாக இருந்தாலும் அதன் நீள, அகல விகிதம் இதுபோலத்தான் இருக்கும். கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி எனச் செவ்வக வடிவில் இருக்கும் அனைத்துக்கும் நீள, அகல விகிதங்கள் குறிப்பிட்ட வகையில் இருப்பதைக் காணலாம்.

முதல் வகை ‘நீள்வட்ட வடிவமான இறக்கைகள்’ கொண்ட பறவைகள். இவை குறைந்த புலன் விகிதத்தைக் கொண்டவை. அதனால், எந்தச் சிறிய இடத்திலும் மிகவும் நேர்த்தியாக வளைந்து, நெளிந்து செல்லக்கூடிய ஆற்றல் கொண்டவை. அடர்ந்த காடுகளுக்கு இடையே உள்ள மரங்கள், செடிகளில் எங்கும் மோதாமல் இவற்றால் பறந்து செல்ல முடியும்.

ஆனால், தொலைதூரம் செல்வதற்கு இந்த இறக்கைகள் பயன்படாது. நீள்வட்ட வடிவமான இறக்கைகளின் நுனிப் பகுதியில் அதிகமான இடைவெளி இருப்பதைக் காணலாம். இந்த இடைவெளியை மாற்றி அமைப்பதன் மூலமாகப் பறவை கீழே இறங்கும்போது காற்றினால் தடைபடாமல் இறங்க வேண்டிய இடத்தைத் துல்லியமாக அடைகிறது.

ஓசனிச் சிட்டு, சிட்டுக்குருவி போன்றவை நீள்வட்ட வடிவமான இறக்கைகளைக் கொண்டவை. சிட்டுக்குருவி ஜன்னலில் உள்ள சிறிய ஓட்டை வழியாக நம் வீட்டுக்குள் வந்து போவதற்கு அதன் இறக்கைகளின் பங்கு மிக முக்கியமானது. வௌவாலுடைய இறக்கையும் நீள்வட்ட வடிவமானதுதான். ஆனால், அது பாலூட்டி. அதன் இறக்கைகளின் வடிவமைப்பு நீள்வட்ட வடிவமாக இருந்தாலும் பறவை போன்ற அடுக்குகளைக் கொண்டது இல்லை.

தொலைதூரம் செல்ல வேண்டும் என்றால், பறவைகள் வேகமாகச் சென்றால்தானே இலக்கை அடைய முடியும். இல்லை என்றால் அவை சென்று சேர்வதற்கு அதிக நாள்கள் ஆகும். அந்த வகை இறக்கைகள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவை. இவற்றை ‘அதிவேக இறக்கைகள்’ எனலாம்.

இந்த இறக்கைகள் மூலம் பறவைகள் வேகமாகப் பறக்கக்கூடிய ஆற்றலைப் பெறுகின்றன. இந்த இறக்கைகளின் முனை கூர்மையாக இருக்கும், இடைவெளிகள் இருக்காது. மணிக்கு 300 கி.மீ. வரை வேகத்தில் பறக்கும் பறவைகள் இந்த வகை இறக்கைகளைக் கொண்டுள்ளன. வல்லூறு அதிவேக இறக்கைகள் கொண்ட பறவை இனத்தைச் சேர்ந்தது.

அதனால் வேகமாகப் பறக்க முடியும். அது செல்லும் வேகத்துக்குத்தேவைப்படும் ஆற்றலைக் கணக்கிட்டால், நீள்வட்ட வடிவமான இறக்கைகளைக் கொண்ட பறவைகளைக் காட்டிலும் குறைவாக இருக்கும். மூன்றாவது வகை இறக்கைகள், அதிகப்‘புலன் விகிதம்’ கொண்டவை. அல்பட்ராஸ் பறவை இந்த வகையைச் சேர்ந்தது.

ஒரு பறவை இறக்கையின் நீள, அகலங்களைப் பொறுத்துதான் அந்தப் பறவை பறப்பதற்கு எவ்வளவு ஆற்றல் தேவை என்பது தெரியவருகிறது. அல்பட்ராஸ் இறக்கைகளின் நீளம் அதிகமாக இருப்பதால், பறக்க ஆரம்பித்தவுடன் காற்றிலே பறந்துகொண்டிருப் பதற்குத் தேவைப்படும் ஆற்றல் மிகவும் குறைவாகவே தேவைப்படுகிறது.

பொதுவாகக் கடல் பறவைகள் இந்த வகையான இறக்கைகளைக் கொண்டுள்ளன. எவ்வளவு தொலைவு பறந்தாலும் களைப் படையாமல் இந்தப் பறவைகளால் பறக்க முடியும். நெடுந்தூரப் பயணத்துக்குப் பயன்படும் விமானங்கள் இந்தப் பறவைகளை அடிப்படையாகக் கொண்டுதான் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த இறக்கைகளில் கூர்மையான நுனி மட்டும் இருக்கும், இடைவெளிகள் இருக்காது.

நான்காவது வகை இறக்கைகள் கழுகு போன்ற பறவைகளிடம் இருக்கின்றன. ‘அதிக எடை தூக்கும் இறக்கைகள்’ என்று இவற்றை வகைப்படுத்தலாம். கழுகு, வேட்டையாடி உண்ணும் ஒரு பறவை. கழுகின் உடலமைப்பில் இரையைப் பிடித்த உடன், அதைத் தூக்கிக்கொண்டு செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால், அதிக எடை தூக்கும் இறக்கைகளைக் கொண்டுள்ள பறவைகள் அதிக எடையைத் தூக்குவதற்கும் உடனடியாக உயரத்துக்குச் செல்வதற்கும் இறக்கைகளைப் பயன்படுத்துகின்றன.

இந்த இறக்கைகளின் நுனிப் பகுதியில் குறைந்த இடைவெளி காணப்படும். இதன் புலன் விகிதம் சற்றுக் குறைவாகத்தான் இருக்கும். கழுகு நேராகப் பறந்து கொண்டிருக்கும்போது, நீர்ப்பரப்பில் இருக்கும் மீனை எளிதாகத் தூக்கிக்கொண்டு வேகமாக உயரே பறந்து செல்ல முடியும். பருந்து கோழிக்குஞ்சைத் தூக்கலாம் என்று முடிவு செய்துவிட்டால், 200 கி.மீ. வேகத்துக்கு மேலாக வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கிவிட்டு, அதே வேகத்தில் மேலே சென்றுவிடும். அது இவ்வாறு செல்வதற்கு அதன் இறக்கைகள் பேருதவியாக இருக்கின்றன. இந்த வகைப் பறவைகள் இறக்கையின் நுனியில் உள்ள இடைவெளியை மாற்றி அமைப்பதன் மூலம் காற்றினால் ஏற்படும் உராய்வு விசையைப் பெருமளவு மாற்றியமைக்கின்றன.

தென்னை இலையையும் வாழை இலையையும் பாருங்கள். எவ்வளவு வேகமான காற்று அடித்தாலும் தென்னங்கீற்றில் உள்ள இடைவெளியில் காற்று சென்றுவிடுவதால் சேதாரம் அடைவதில்லை. ஆனால் வேகமான காற்று வாழை மரத்தில் படும்போது, வாழை இலையில் இடைவெளி எதுவும் இல்லாததால் காற்றை எதிர்த்து நிற்க முயற்சி செய்து, இலை கிழிவதுடன் மரமே முறியும் நிலை உருவாகிறது.

(பறப்போம்)

- writersasibooks@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x