Published : 12 Jun 2018 05:54 PM
Last Updated : 12 Jun 2018 05:54 PM
ஒ
ழுங்கற்ற துண்டுகளை ஒன்றாகச் சேர்த்தால் முழுமையான படம் கிடைக்கும், இதுதான் ஜிக்சா புதிர். இன்று 3 வயது குழந்தைகளிலிருந்து ஜிக்சா விளையாட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆரம்பத்தில் இது பெரியவர்களுக்கான புதிராகவே இருந்தது!
1760-ம் ஆண்டுகளில் ஐரோப்பாவில் வரைபடம் தயாரிப்பது மிக முக்கியமான தொழிலாக இருந்தது. சிறிய மரத்துண்டுகளை வெட்டி, அவற்றை ஒன்று சேர்த்து ஒரு வரைபடமாக உருவாக்குவார்கள். 1767-ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ஸ்பில்ஸ்பரி என்ற வரைபடக் கலைஞர், வரைபடத்தை வைத்து ஜிக்சா புதிரை உருவாக்கினார். இன்றும்கூட அமெரிக்கப் பள்ளிகளில் வரைபட ஜிக்சா புதிரை வைத்துதான் மாணவர்களுக்கு நாடுகளை அறிமுகம் செய்கிறார்கள்.
ஜான் பில்ஸ்பரியின் ஜிக்சா புதிரைப் பார்த்துப் பலரும் அதைப் போலவேசெய்ய ஆரம்பித்தனர். நாளுக்கு நாள் வரவேற்பும் அதிகரித்தது. 1880-ம் ஆண்டு ஜிக்சா புதிருக்கான துண்டுகளை வெட்டும் ஃப்ரெட்சாவிலிருந்து (fretsaw) ’ஜிக்சா’ என்ற பெயர் உருவானது.
மரத்தால் உருவாக்கப்பட்ட ஜிக்சா புதிர்கள் செலவு அதிகம் பிடித்தன. 500 துண்டுகள் கொண்ட மிகப் பெரிய ஜிக்சா புதிரை வாங்குவதற்கு, ஒரு மாதச் சம்பளத்தைக் கொடுக்க வேண்டியிருந்தது. அதனால் ஆர்வம் இருந்தாலும் சாதாரணமான மக்களால் இந்தப் புதிரை வாங்க முடியவில்லை. பொழுதுபோக்குக் கூடங்கள், வீட்டு விசேஷங்களில் ஜிக்சா புதிர்கள் இடம்பிடித்தன.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பார்கர் பிரதர்ஸ், ’பாஸ்டைம்’ என்ற பெயரில் ஜிக்சா புதிர்களை விற்பனைக்குக் கொண்டுவந்தது. இது சற்று எளிமையாக இருந்தது. விலங்குகள், பறவைகள் போன்று மக்களுக்கு நன்கு அறிமுகமான படங்களை ஜிக்சாவில் அறிமுகம் செய்தது. ஒருகட்டத்தில் ஜிக்சா புதிர்கள் விற்பனையில் சாதனை படைத்தன. 1909-ம் ஆண்டு பார்கர் பிரதர்ஸ் நிறுவனம் மற்ற விளையாட்டுப் பொருட்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டு, ஜிக்சா புதிர்களை மட்டும் தயாரித்தது.
1929-ம் ஆண்டு பொருளாதார மந்தநிலை உருவானது. பொழுபோக்குக்காகச் செலவு செய்ய மக்களிடம் பணம் இல்லை. அதனால் ஜிக்சா புதிரை வாங்கி, வீட்டிலேயே பொழுதுபோக்க ஆரம்பித்தனர். மரவேலை செய்த கலைஞர்கள் ஜிக்சா புதிரை உருவாக்கி, வாடகைக்கு விட்டுச் சம்பாதித்தனர். 500 துண்டுகளுக்கு அதிக வாடகையும் 200 துண்டுகளுக்குக் குறைவான வாடகையும் வசூலித்தனர்.
தடிமனான அட்டையில் ஜிக்சா உருவாக்க ஆரம்பித்த பிறகு, மரத்தால் செய்த ஜிக்சா புதிர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போயின. புதிய தொழில்நுட்பங்கள் உருவாக, ஜிக்சா புதிர்களிலும் மாற்றங்கள் வந்தன. காகிதம், பிளாஸ்டிக், ரப்பர், உலோகம் போன்ற பலவற்றிலும் வெளிவந்தன.
பெரியவர்களுக்கான புதிராக இருந்துவந்த ஜிக்சா, குழந்தைகளுக்கான புதிராகவும் மாறியது. பாடங்களை எளிதாகச் சொல்லித் தருவதற்கு ஜிக்சாவை ஒரு கருவியாக மாற்றிக்கொண்டது கல்வித் துறை. 10 துண்டுகளில் இருந்து சில நூறு துண்டுகள்வரை மாணவர்களுக்கான ஜிக்சா புதிர்கள் வந்துகொண்டிருக்கின்றன.
பெரியவர்களுக்கான ஜிக்சா புதிர்களில் அளவைப் பொறுத்து துண்டுகளின் எண்ணிக்கையும் அமைகின்றன. 300 துண்டுகளில் இருந்து 48 ஆயிரம் துண்டுகள் வரையுள்ள ஜிக்சா புதிர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 48 ஆயிரம் துண்டுகளை ஒன்று சேர்ப்பதற்குள் நமக்கு வயதாகிவிடும்! 2018-ம் ஆண்டு கிராஃபிகா நிறுவனம் உருவாக்கிய ஜிக்சா புதிர்தான் உலகிலேயே மிகப் பெரியது. இதில் உலகின் 208 முக்கியமான அடையாளங்கள் வரையப்பட்டிருந்தன.
ஜிக்சா புதிர் பொழுதுபோக்குவதற்கானது மட்டுமல்ல, மூளைக்கு வேலையும் கொடுக்கிறது. சிந்தனையை ஒருமுகப்படுத்துகிறது. உற்சாகத்தைத் தூண்டுகிறது. வயதானவர்கள் ஜிக்சா புதிரைத் தொடர்ந்து விளையாடினால் மறதி நோயின் பாதிப்புகளில் இருந்து ஓரளவு தப்பிக்க முடியும் என்கிறார்கள். ஆட்டிசம் குறைபாடு உடையவர்களுக்கும் ஜிக்சா புதிர் சிறந்த பலனை அளிப்பதாகச் சொல்கிறார்கள். அதனால்தான் ஆட்டிசத்தின் சின்னமாக ஜிக்சா 1963-ம் ஆண்டிலிருந்து இருந்துவருகிறது.
(கண்டுபிடிப்போம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT