Published : 23 Oct 2024 06:06 AM
Last Updated : 23 Oct 2024 06:06 AM

விதையில்லாப் பழங்களைச் சாப்பிடலாமா? - டிங்குவிடம் கேளுங்கள்

ஆட்டோ ஒன்றில் CNG என்று எழுதியிருப்பதைக் கண்டேன். அப்படி என்றால் என்ன, டிங்கு? - ஜி. இனியா, 8-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலை பள்ளி, கிருஷ்ணகிரி.

அந்த ஆட்டோவில் பயன்படுத்தப்படும் எரிபொருள் என்ன என்பதைத்தான் CNG என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதாவது Compressed Natural Gas மூலம் இந்த ஆட்டோ இயங்குகிறது என்று அர்த்தம் இனியா.

விதையில்லாப் பழங்களைச் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா, டிங்கு? - எம். வேதசுகன், 10-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, சமயபுரம், திருச்சி.

கொய்யா, தக்காளி, வெண்டை, வெள்ளரி, மாதுளை போன்றவற்றை எல்லாம் விதைகளுடன்தான் சாப்பிடுகிறோம். தர்பூசணி, பூசணி, திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள், நாவல், சீதா போன்ற விதைகளை நாம் சாப்பிடுவதில்லை. கலப்பினத்தில் (ஹைபிரிட்) உருவாக்கப்பட்ட திராட்சை, தர்பூசணி போன்ற பழங்களில் விதைகள் இல்லை. இவை நமக்குச் சாப்பிடுவதற்கு வசதியாக இருக்கின்றன.

அதனால் நாம் விதையில்லாப் பழங்களைச் சாப்பிட விரும்புகிறோம். இனக்கலப்புச் செய்யப்பட்ட தாவரங்களில் விளைவது எல்லாம் தீங்கானது என்கிற எண்ணம் நம்மிடையே பரவியிருக்கிறது. ஆனால், விதையில்லாப் பழங்களால் உடல்நலத்துக்குக் கேடு என்று இதுவரை நிரூபிக்கப்படவில்லை, வேதசுகன்.

டயர்கள் ஏன் கறுப்பு வண்ணத்தில் இருக்கின்றன, டிங்கு? - ஆர். நிவேதா, 6-ம் வகுப்பு, ஆர்கா கிரீன் பள்ளி, அண்டூர், கன்னியாகுமரி.

டயர்கள் ரப்பரால் உருவாக்கப்படுகின்றன. ரப்பர் வெள்ளையாக இருக்கும். இந்தக் கலவையில் ஆரம்பத்தில் உறுதிக்காக கார்பன் சேர்மம் (Soot) சேர்க்கப்பட்டதால் டயர் கறுப்பு வண்ணமாக மாறியது. காலப்போக்கில் கார்பன் பிளாக் (Carbon black) எனும் பொருளை வலிமைக்காகவும் நீண்ட காலம் உழைப்பதற்காகவும் சேர்த்தனர். இதுவும் கறுப்பாக இருந்ததால் டயரின் வண்ணமும் கறுப்பாக இருக்கிறது. இந்த கார்பன் பிளாக் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது.

வாகனம் ஓட்டும் போது காரின் பாகங்களில் உண்டாகும் வெப்பத்தை இழுக்கிறது. டயர்களை நீடித்து நிலைக்கச் செய்கிறது. கார்பன் பிளாக்கின் உயர் வெப்பக் கடத்துத்திறன் டயர் செயல்பாட்டின்போது உருவாகும் வெப்பத்தை வெளியேற்ற உதவுகிறது. டயரில் அதிக அளவில் கார்பன் தொடர்பான பொருள்கள் சேர்க்கப்படுவதால், டயர் கறுப்பாக இருக்கிறது, நிவேதா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x