Published : 21 Oct 2024 03:41 PM
Last Updated : 21 Oct 2024 03:41 PM

நிகோலா டெஸ்லா | விஞ்ஞானிகள் - 5

மனிதகுல வரலாற்றின் வழித் தடத்தை அறிவியல் வழி திசை திருப்பியதில் டெஸ்லாவின் பங்கு முக்கியமானது. ஆயிரம் ஆண்டுகளில் தோன்றிய பிரபலமான 100 நபர்களில் டெஸ்லாவும் ஒருவர்.

டெஸ்லாவின் தந்தை தேவாலயத்தில் மதகுரு. வீட்டிற்குத் தேவையான உபகரணங்களை சொந்தமாக உருவாக்குவார் தாய். தந்தையோ, டெஸ்லா தன்னைப்போல் மதகுருவாகவாக வேண்டும். இல்லையேல் ராணுவத்தில் சேர வேண்டும் என விரும்பினார். ஆனால் அவர் தாயைப்போல் கண்டுபிடிப்பாளரானார்.

ஒன்பது மாதங்கள் காலராவில் அவதிப்பட்டு மீண்டதால் டெஸ்லாவின் விருப்பப்படி பாலிடெக்னிக்கில் சேர அனுமதித்தார் தந்தை. இயற்பியலிலும் கணிதத்திலும் ஆர்வம் உள்ளவர் மின்சாரத்தின் பக்கம் ஈரக்கப்பட்டார். டிசி ஜெனரேட்டரைப் பயன்படுத்தி மின்சாரம் எடுப்பது குறித்து ஆசிரியர் பாடம் நடத்தினார். அதைக் கவனித்த டெஸ்லா ஏசி ஜெனரேட்டர் பயன்படுத்தி மின்சாரம் எடுக்கலாம் என நினைத்தார்.

எந்த வேலை செய்தாலும் இந்தச் சிந்தனை தனியாக ஓடிக்கொண்டிருக்கும். பூங்காவில் நடைப்பயிற்சி செய்தபோது சுழலும் காந்தப்புலத்தின் தீர்வு பளிச்சிட்டது. உடனே அதை மணலில் வரைந்து பார்த்தார்.

’உங்களைப்போல்தான் இவரும்’ என்கிற அறிமுகக் கடிதத்தோடு எடிசன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு டைனமோக்களை மேம்படுத்திக் கொடுத்தார். ஆனால் நேரடி மின்னோட்டத்தைவிட (டிசி) மாற்று மின்னோட்டம் (ஏசி) சிறந்தது என்றார். மின்விளக்கை ஒளிரச் செய்வதில் எடிசனின் முதலீடுகள் அனைத்தும் நேரடி மின்னோட்டத்தில் இருந்தன. எனவே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேறினார் டெஸ்லா.

நேரடி மின்னோட்டத்தை இரண்டு மைல்களுக்கு மேல் கொண்டு செல்ல முடியாது. ஒவ்வோர் இரண்டு மைலுக்கும் இணைப்பு போட்டுக் கொண்டு சென்றதால் மின்னிழப்பு ஏற்பட்டது. ஒரே திசையில் மட்டுமே பாய்ந்தது. ஆனால் மாற்று மின்னோட்டம் வினாடிக்கு 50, 60 முறை திசையை மாற்றும். உயர் மின்னழுத்த அளவுகளை மாற்றியமைக்கும். அதிக தூரம் எடுத்துச் சென்றாலும் மின் இழப்பு ஏற்படாது என்பதால் மாற்று மின்னோட்டம்தான் எதிர்காலம் என நம்பினார்.

ஜெனரேட்டர்கள், மோட்டார்கள், மின்மாற்றிகளின் பாலிஃபேஸ் மாற்று மின்னோட்ட அமைப்பை உருவாக்கினார். இதன் அடிப்படையில் பல காப்புரிமைகளைப் பெற்றார். ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் இவற்றை உலகெல்லாம் கொண்டு சேர்க்க டெஸ்லாவோடு கைகோத்தார். எடிசன் தனது டிசி சாம்ராஜியத்தை இழக்க விரும்பாததால் இருவருக்கும் இடையே மின்போர் ஏற்பட்டது. ஏசி மின்னோட்டம் தன் திறத்தால் டெஸ்லா -வெஸ்டிங்ஹவுஸை வெற்றியாளராக்கியது.

அட்லாண்டிக் கடற்பரப்பில் கட்டமைக்கப்பட்ட நேரடி மின்னோட்ட மின் நிலையத்தின் திறனற்ற தன்மையை டெஸ்லா சுட்டிக்காட்டினார். நயாகரா நீர்வீழ்ச்சியில் மாற்று மின்னோட்டத்தில் மின்சாரம் எடுக்கும் அமைப்பை வடிவமைத்தார். உலகப் புகழ்பெற்றார்.

அவர் கண்டுபிடித்த டெஸ்லா சுருள்தான் வானொலி, தொலைக்காட்சி இன்னபிற மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஃப்ளோரசன்ட் லைட், லேசர் பீம், கம்பியில்லாத் தொடர்பு, கம்பியில்லாப் பரவும்முறை, ரிமோட் கட்டுப்பாடு, தானியங்கி இயந்திரம் (ரோபாட்டிக்ஸ்), விசையாழிகள் போன்றவை அவரது கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கன. சூரிய ஆற்றல், கடல் சக்தி போன்ற ஆய்வுகளும் அதில் அடங்கும். 700க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்றார்.

கம்பியில்லாத முறையைக் கோள்களுக்கிடையேயான தகவல்தொடர்புக்குப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்தார் டெஸ்லா. கம்பியில்லாமல் மின்சாரம் வழங்க மோர்கன் என்பவருடன் இணைந்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மோர்கன் தன் நிதியைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

ராண்ட்ஜனுக்கு முன்பாக எக்ஸ் கதிர்களை டெஸ்லா கண்டுபிடித்தாலும் முதலில் வெளியிட்டவர் ராண்ட்ஜன் என்பதால் அவரைக் கைகுலுக்கி வரவேற்றார். 1896இல் வானொலியின் அடிப்படை அமைப்புக்குக் காப்புரிமை பெற்றார். ரேடியோ டிரான்ஸ்மிட்டரின் அடிப்படைக் கூறுகளை விவரிக்கும் அவருடைய திட்ட வரைபடங்கள் பயன்படுத்தப்பட்டு ரேடியோ உருவாக்கப்பட்டதால் வழக்கானது. ரேடியோ தொழில்நுட்பத்தில் டெஸ்லாவின் பங்களிப்பை அங்கீகரித்து, மார்கோனியின் காப்புரிமை செல்லாது எனத் தீர்ப்பளித்தனர்.

உலகத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவர உதவிய டெஸ்லாவை என்றென்றும் உலகம் நினைவில் வைத்திருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x