Last Updated : 06 Aug, 2014 12:09 PM

 

Published : 06 Aug 2014 12:09 PM
Last Updated : 06 Aug 2014 12:09 PM

அமைதிப் புறா சடாகோ

சடாகோ சசாகிங்கிற பேரை கேள்விப்பட்டு இருக்கீங்களா? தெரியாட்டா பரவாயில்ல. ஹிரோஷிமாங்கிற ஊரைப் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. அது ஜப்பான்ல இருக்கிற, முக்கியமான ஊர்கள்ல ஒண்ணு. அந்த ஊர்லதான் உலகத்துலயே முதன்முதலா 1945-ல அமெரிக்கா அணுகுண்டை வீசுச்சு. அப்போ சடாகோ ரெண்டு வயசு குட்டிப் பொண்ணா இருந்தா. அதுல அவளும் அவளோட அப்பா, அம்மாவும் உயிர் தப்பிச்சாங்க.

லுகேமியா

சடாகோவுக்கு 11 வயசு ஆனபோது, ஒரு நாள் திடீரென மயங்கி விழுந்திட்டா. அவளுக்கு லுகேமியாங்கிற ரத்தப் புற்றுநோய் தாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நோய் வந்ததுக்கு, அணுகுண்டிலிருந்து வெளியான கதிர்வீச்சுதான் காரணம்.

ஹிரோஷிமால இருந்த செஞ்சிலுவைச் சங்க மருத்துவமனைல சடாகோ சேர்க்கப்பட்டா. தான் சீக்கிரமா இறந்து போவோம்னு சடாகோவுக்குத் தெரிஞ்சிருச்சு. எல்லா மனுஷங்களையும் போலவே சடாகோவும் வாழ ஆசைப்பட்டா.

காகிதக் கொக்கு

சடாகோவின் தோழி சிசுகோ, சடாகோவைப் பார்க்க ஒரு நாள் மருத்துவமனைக்கு வந்தா. ஆரிகாமின்னு சொல்லப்படும் ஜப்பானிய காகித மடிப்புக் கலை மூலம் காகிதத்துல ஒரு கொக்கைச் செய்து, சடாகோவோட கையில கொடுத்தா.

கொக்கு, ஜப்பான்ல வணங்கப்படுற பறவை. அந்தக் காகிதக் கொக்கைப் போல ஆயிரம் கொக்குகளைச் செஞ்சா நோய் குணமாகுங்கிறது அந்நாட்டு நம்பிக்கை. "நீயும் ஆயிரம் கொக்குகள் செய், உன் நோய் குணமாகும்"ன்னு சடாகோகிட்ட சிசுகோ சொன்னாள்.

கடைசியா எட்டு மாசம் நோயால கஷ்டப்பட்டபோது, தினந்தோறும் சடாகோ காகிதக் கொக்குகளைச் செய்ய ஆரம்பிச்சா. முதல்ல ஒரு நாளைக்கு 20 கொக்குகளுக்கு மேல அவளால செய்ய முடிஞ்சது. போகப் போக அவளால எதுவுமே செய்ய முடியலை. உடம்பு மோசமாகிக்கிட்டே வந்துச்சு. ஆனாலும், காகிதக் கொக்கு செய்றதுல சடாகோ முழு கவனம் செலுத்தினா.

தோழிகள்

ஆனா, 1955-ம் வருஷம் அக்டோபர் 25-ம் தேதி சடகோ இறந்துட்டா. அப்போ அவளுக்கு வயசு 12 தான். அதுவரை சடாகோவால 644 கொக்குகளையே செய்ய முடிஞ்சது. சடாகோவோட தோழிகள் சேர்ந்து எஞ்சிய 356 கொக்குகளைச் செஞ்சு, அவளோட விருப்பதைப் பூர்த்தி செஞ்சாங்க.

அதுக்குப் பின்னாடி அவளோட தோழிகள் நிதி திரட்டி, ஹிரோஷிமா நகரத்தோட மையத்துல சடாகோவுக்கு நினைவாலயம் ஒன்றைக் கட்டினாங்க. அங்கே அவளுக்குச் சிலையும் வைச்சாங்க. அந்த நினைவாலயத்துக்கு ‘குழந்தைகள் அமைதி நினைவாலயம்'னு பேரு.

இப்பவும், நாள்தோறும் நூற்றுக்கணக்கான குழந்தைங்க இந்த நினைவாலயத்துக்கு வந்து, காகிதக் கொக்கு செஞ்சு சடாகோவுக்கு அஞ்சலி செலுத்தி வர்றாங்க.

கடைசிவரை நம்பிக்கை யோட வாழ்ந்த சடாகோ சசாகி, ‘உலக அமைதி தூதுவரா' கருதப்படுகிறாள்.

நன்றி: Ten Little Fingers, Arvind Gutpa

சடாகோவின் நினைவுச் சின்னத்தில் ஆண்டுதோறும் சுமார் ஒரு கோடி காகிதக் கொக்குகள் வைக்கப்படுகின்றன. அந்த நினைவிடத்துக்குச் சென்றுதான் காகிதக் கொக்குகளை வைக்க வேண்டுமென்பதில்லை. உலக அமைதியை விரும்பும் அனைவரும் கீழ்க்கண்ட முகவரிக்குக் காகிதக் கொக்குகளை அனுப்பலாம். நீங்கள் விரும்பினால், காகிதக் கொக்கைச் செய்து அனுப்பலாம். முகவரி:

Peace Promotion Division, The City of Hiroshima, 1-5 Nakajima-cho Naka-ku, Hiroshima 730-0811 Japan

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x