Last Updated : 27 Jun, 2018 09:47 AM

 

Published : 27 Jun 2018 09:47 AM
Last Updated : 27 Jun 2018 09:47 AM

கண்டுபிடிப்புகளின் கதை: பற்பசை

ப ற்கள், ஈறுகளின் ஆரோக்கியத்துக்காகத் தினமும் காலை, இரவு இரு வேளை பல் துலக்குகிறீர்கள்தானே? பற்பசை அல்லது பற்பொடி கொண்டு பல் துலக்குவீர்கள். ஆனால் உங்கள் தாத்தா, பாட்டியிடம் கேட்டுப் பார்த்தால், அவர்கள் சாம்பல், கரித்தூள், வேப்பங்குச்சி, ஆலங்குச்சி போன்றவற்றை வைத்துப் பல் துலக்கியதாகச் சொல்வார்கள். இந்தச் சாம்பலையும் கரித்தூளையும் வைத்துப் பல் துலக்கும் வழக்கம் சுமார் எழு ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவருகிறது. சமீபக் காலத்தில்தான் சாம்பலும் கரித்தூளும் தங்கள் செல்வாக்கை இழந்து, அந்த இடத்தைப் பற்பொடியும் பற்பசையும் பிடித்துக்கொண்டன.

சாப்பிடும் உணவுப் பொருட்களால் கிருமிகள் வளர்ந்து, பற்களைச் சேதப்படுத்துவதை கி.மு. 5 ஆயிரம் ஆண்டிலேயே எகிப்தியர்கள் அறிந்திருந்தனர். அதனால் பற்களைச் சுத்தம் செய்வதற்குப் பல விதத்தில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். பாரோ மன்னர்கள் சாணத்தின் சாம்பல், பொடித்த முட்டை ஓடுகள், பால் வடியும் குச்சிகள், மாவுக் கல் போன்றவற்றைப் பல் துலக்கப் பயன்படுத்தினர். ரோமானியார்களும் பொடித்த சிப்பி ஓடுகள், கரித்தூள், மரப்பட்டைகள் போன்றவற்றை வைத்துப் பல் துலக்கினார்கள். அந்தக் கால ரோம மருத்துவர்கள் மனிதர்களின் சிறுநீரில் பற்களைச் சுத்தம் செய்யும் உப்பும் அமிலமும் இருப்பதாகச் சொல்லி, அதையும் பயன்பாட்டில் வைத்திருந்தனர்.

கி.மு. 5-ம் நூற்றாண்டில் இந்தியாவிலும் சீனாவிலும் கரித்தூள், சாம்பல், வேப்பங்குச்சி, ஆலங்குச்சி போன்றவற்றை வைத்துப் பல் துலக்க ஆரம்பித்தனர். கி.பி. 4-ம் நூற்றாண்டில் சாம்பலும் கரித்தூளும் பற்களுக்கு உகந்தது அல்ல என்ற முடிவுக்கு வந்தார்கள் எகிப்தியர்கள். அதனால் புதினா, உப்பு, மிளகு உட்பட ஏராளமான பொருட்களை இடித்து, முதல் பற்பொடியை உருவாக்கினார்கள். அதன் செய்முறையையும் எழுதி வைத்தனர். ஆனால் இந்தப் பற்பொடியை அரசர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்ததால், தயாரிப்பு முறை ரகசியமாக வைக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் சீனாவில் உப்பு, மூலிகைகள், மூலிகை வேர் போன்றவற்றைப் பயன்படுத்தி பற்பொடி தயாரிக்கப்பட்டது.

27chsuj_Sheffield.png வாஷிங்டன் வென்ட்வொர்த் ஷெஃப்பீல்ட்

கி.பி. 9-ம் நூற்றாண்டில் பாரசீகத்தைச் சேர்ந்த அறிஞரும் கலைஞருமான ஸிர்யாப், எகிப்தியர்களின் பற்பொடி தயாரிக்கும் முறையை வைத்து, ஐரோப்பாவில் முதல் பற்பொடியைத் தயாரித்தார். நறுமணம் மிக்க இந்தப் பற்பொடியில் பல் துலக்கிய பிறகு புத்துணர்ச்சியும் கிடைத்தது. ஸிர்யாப் பற்பொடிதான் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் பற்பொடி. இவரும் தனது தயாரிப்பு முறையை ரகசியமாகவே வைத்திருந்ததால் அவருக்குப் பிறகு அந்தப் பற்பொடி காணாமல் போனது.

கி.பி. 18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் படிகாரம், லவங்கப்பட்டை, பாக்குத்தூள் போன்றவற்றைச் சேர்த்துப் பற்பொடிகள் தயாரிக்கப்பட்டன. இந்தப் பற்பொடியில் தண்ணீர் சேர்த்து மக்கள் பயன்படுத்த ஆரம்பித்தபோது, 1850-ம் ஆண்டில் பற்பசை உருவானது. இது ஜாடிகளில் அடைத்து விற்கப்பட்டது. 1873-ம் ஆண்டு நியூயார்க்கைச் சேர்ந்த கோல்கேட் நிறுவனம், பெரிய அளவில் பற்பசை தயாரிக்கும் தொழிலில் இறங்கியது.

இங்கிலாந்தைச் சேர்ந்த வாஷிங்டன் வென்ட்வொர்த் ஷெஃபீல்ட் என்ற பல் மருத்துவர் கால்ஷியம் புளோரைடு வைத்து பற்பசையைத் தயாரித்தார். இவரே 1892-ம் ஆண்டு குழாய்க்குள் பற்பசையை அடைத்து விற்கும் முறையையும் உருவாக்கினார். ஆனால் ஷெஃப்பீல்ட் தன்னுடைய பற்பசைக்கும் குழாய்க்கும் காப்புரிமை பெறுவதற்குள் கோல்கேட் நிறுவனம் குழாய் பற்பசைகளைப் பெருமளவில் விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டது. இன்றுவரை ஷெஃபீல்டின் பற்பசைத் தயாரிப்பு முறையே பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

shutterstock_133159673 [Converted]right

குடிசைத் தொழிலாக இருந்த பற்பொடி, பற்பசைத் தயாரிப்பு, இன்று சர்வதேச வியாபாரமாக உருவெடுத்திருக்கிறது. நிறுவனங்களுக்கு ஏற்றவாறு 3 வகை ஃபுளோரைடுகளால் பற்பசைகள் தயாரிக்கப்படுகின்றன.

பிரஷ் முழுவதும் பற்பசையை வைத்துத் தேய்க்க வேண்டிய அவசியமில்லை. ஒரு பட்டாணி அளவு வைத்தாலே போதுமானது. பற்பசையை விழுங்கக் கூடாது, சிறிது விழுங்கினாலும் ஆபத்து ஒன்றும் இல்லை. குழந்தைகளுக்கும் விண்வெளி வீரர்களுக்கும் விழுங்கக்கூடிய பற்பசைகள் இருக்கின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கரியால் பல் துலக்கி வந்ததை ஆரோக்கியம் குறைவு என்று பற்பொடிகளும் பற்பசைகளும் வந்தன. இன்று கரியும் உப்பும் நல்லது என்று பற்பசைகளில் சேர்த்துவிட்டனர்.

(கண்டுபிடிப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x