Last Updated : 02 Oct, 2024 06:27 AM

1  

Published : 02 Oct 2024 06:27 AM
Last Updated : 02 Oct 2024 06:27 AM

பறவைகள் எப்படித் தகவமைத்துக் கொள்கின்றன? - பறப்பதுவே 02

பறக்கும் அனைத்தையும் பறவைகள் என்று நாம் கூறிவிட்டாலும் ஒவ்வொரு பறவையும் மற்றவற்றில் இருந்து வேறுபடுகிறது. மனிதர்கள் என்றால், அனைவரும் ஒரே மாதிரிதானே இருக்கிறோம். உடல் அமைப்பு, நடக்கும் முறை என்று உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் ஒரே இனம் என்று வகைப்படுத்திவிடலாம். நாடோடியாக வாழ்ந்த மனிதன், தான் வாழ்ந்த இடத்திற்குத் தக்கவாறு பல கலைகளைக் கற்றிருந்தான். உடலமைப்பிலும் சிறிய மாற்றங்கள் இருந்தன. ஆனால், இன்று ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வதற்குப் போக்குவரத்து வசதிகள் போதுமான அளவில் இருக்கின்றன. அதனால், அனைவரும் ஒன்றுபோல இருக்கிறோம்.

ஆனால், பறவைகளுக்கு அது சாத்தியம் இல்லை. தனக்குத் தேவையான உணவைப் பெறவும்சூழ்நிலைக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளவும் பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு பறவையும் தன்னை மெதுவாக மாற்றிக்கொண்டது. அதனால்தான் பறவைகள் பலவிதமாக இருக்கின்றன. ஒவ்வோர் இனமும் குறிப்பிட்ட சூழல், வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு உருவான தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளது.

பறப்பதற்குத் தேவையான இறக்கைகள் இருந்தபோதும் சூழ்நிலைக்குத் தக்கவாறு அவற்றைப் பயன்படுத்தியும் மாற்றியும் அமைத்துக்கொண்ட உயிரினங்கள் இருக்கின்றன. நெருப்புக்கோழி தனது இறக்கையைப் பறவைபோல் பறக்கப் பயன்படுத்தாமல் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் ஓடக்கூடிய பறவை இனமாக மாறிவிட்டது. அதிவேகமாக ஓடும்போது தடையை ஏற்படுத்தி நிறுத்துவதற்கு அதன் இறக்கையை எளிதாகப் பயன்படுத்துகிறது. பெங்குவின் ஒரு காலத்தில் பறவையாக இருந்தது.

ஆனால், அதற்கு நீரில் இருக்கும் இரையைச் சாப்பிட வேண்டும். அதனால், இறக்கையைப் பறப்பதற்குப் பயன்படுத்த வேண்டுமா அல்லது நீந்துவதற்குப் பயன்படுத்த வேண்டுமா என்கிற குழப்பம் உருவானது. காலம் செல்லச் செல்ல பறப்பதைவிட வேகமாக நீந்தினால்தான் மீனைப் பிடிக்க முடியும் என்கிற முடிவுக்கு வந்து, பறப்பதை நிறுத்திவிட்டு நீரில் மிக வேகமாக நீந்துவதற்கு உதவக்கூடிய இறக்கையாக மாற்றிக்கொண்டது. எப்படி இறக்கைகள் காற்றைத் தள்ளிப் பயணிக்க உதவுகின்றனவோ அதேபோல் தண்ணீரைத் தள்ளும் துடுப்புபோல் பயன்பட்டு, தண்ணீரில் நீந்திச் செல்ல உதவுகின்றன.

நீந்துவதற்குப் பயன்படும் இறக்கையைக் கொண்டு பறக்கும் ஒரு வகை மீன் (Sailfin flying fish) கடலில் காணப்படுகிறது. அது தனது இறக்கையைக் கொண்டு குறைந்த தூரம் பறக்கும் திறன் கொண்டது.

காடுகளில் வாழும் குயில்கள், கதிர்க்குருவி போன்ற பறவைகள் மரங்களுக்கு இடையே வளைந்து நெளிந்து செல்லக்கூடிய குறுகிய இறக்கைகளைக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் திறந்தவெளியில் பறக்க வேண்டிய அல்பட்ராஸ் போன்ற பறவைகள் நீண்ட இறக்கைகளைக் கொண்டிருக்கும். அதனால்தான் அவை எளிதாகவும் நீண்ட தொலைவும் பறக்க முடிகிறது. குளிர்ந்த காலநிலையில் உள்ள ஆர்க்டிக் ஆலா போன்ற பறவைகள், உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் தடிமனான இறக்கைகளைக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் வெப்பமான பகுதியில் வாழும் வல்லூறு (Falcon) போன்ற பறவைகள் எளிதான இறக்கைகளைக் கொண்டிருக்கும்.

பறவைகள் எந்தவிதமான உணவை உண்ணுகின்றன என்பதைப் பொறுத்து, அவற்றின் முக அமைப்பு வேறுபடுகிறது. மீன் கொத்தி, நாரை போன்ற பறவைகள், மீனை அப்படியே பிடித்து வாய்க்குள் போட்டுக் கொள்ளத் திறந்த தாடையை உடைய அமைப்பைக் கொண்டிருக்கின்றன. ஓசனிச் சிட்டுகள் பூக்களில் இருக்கும் தேனைப் பெற நீண்ட அலகைக் கொண்டிருக்கும். இறந்துபோன விலங்குகளின் சடலங்களைக் கிழித்து எடுக்க பாறுக் கழுகுகள் வலுவான தாடையைக் கொண்டிருக்கின்றன.

வாழும் இடத்திலேயே எப்போதும் உணவு கிடைத்ததால் தொலைதூரம் செல்ல வேண்டிய தேவை இல்லாத கிளிகள், காகங்கள் போன்ற பறவை களும் இருக்கின்றன. சுமார் 30 சதவீதப் பறவைகள் (நாரைகள் போன்றவை) பருவங்கள் மாறுவதால் உணவைத் தேடி வலசை மேற்கொள்கின்றன.

வாழ்விடத்தை அமைத்துக்கொள்வதில் பறவைகள் வேறுபடுகின்றன. தூக்கணாங்குருவி போன்ற பறவைகள் தானே கூட்டை அமைத்துக்கொள்ளும். அதே நேரத்தில் குயில்கள் மற்ற பறவைக் கூடுகளில் முட்டை இடும். மரங்கொத்தி மரப்பொந்தை வீடாக மாற்றும். புறாக்கள் மனிதர்கள் கட்டும் உயரமான கட்டிடங்களில் குடியிருக்கின்றன.

சிறிய ஓசனிச் சிட்டுகள் முதல் 100 கிலோ எடை வரை இருக்கும் நெருப்புக்கோழிகள் வரை பறவைகள் வேறுபடுகின்றன. பறக்கும் பறவைகளில் கழுகு போன்றவை 10 கிலோ எடை வரை இருக்கின்றன. அவற்றால் தனது எடையில் பாதிக்கு மேல் உள்ள இறக்கையை எளிதாகத் தூக்கிக்கொண்டு பறக்க இயலும். பொதுவாக, நீண்ட தொலைவு பறக்கக்கூடிய ஆர்க்டிக் ஆலா போன்ற பறவைகள் எடை குறைவாக இருக்கும். சிறிய பறவைகள் சுறுசுறுப்பாகப் பறக்கக்கூடியவையாக இருக்கும், அதேநேரம் சில பெரிய பறவைகளால் அதிக உயரமாகவும் பறக்க முடியும்.

பறவையின் இறகுகளின் நிறம், வடிவம், உருவமைப்பு ஆகியவை பல்வேறு காரணங்களுக்காக வேறுபடுகின்றன. மயில் போன்ற பறவைகள் பிரகாசமான, வண்ணமயமான இறகுகளைக் கொண்டிருக்கும். இது அதன் இணையை ஈர்ப்பதற்கும் மற்றபறவைகளுக்குச் சமிக்ஞை செய்வதற்கும் உதவும். குயில் போன்ற பறவைகள் சுற்றுப்புறங்களில் வேறுபட்டுத் தெரியாமல் இருப்பதற்காக மங்கலான நிறங்களைக் கொண்டுள்ளன.

உலகம் முழுவதும் அதிகமான நிலப்பரப்புகளில் வாழும் ஒரே உயிரினமாக இவை இருக்கின்றன. ஒரு பறவை வசிக்கும் பகுதிக்கு ஏற்ப அதன் உடலமைப்பு, நடத்தை, பண்புகள் வேறுபடுகின்றன. இது பறவை இனங்கள் இடையே பன்முகத்தன்மைக்கு வழிவகை செய்கிறது. இந்த வேறுபாடுகளால்தான் பாலைவனங்கள் முதல் மழைக்காடுகள் வரை நகர்ப்புறங்களையும் சேர்த்து, பரந்த அளவிலான வாழிடங்களில் பறவைகளால் வாழ முடிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x