Published : 28 Aug 2024 06:35 AM
Last Updated : 28 Aug 2024 06:35 AM

டிங்குவிடம் கேளுங்கள்: பூக்களில் இருந்து நறுமணம் எப்படி வருகிறது?

பூமியின் காற்று மண்டலம் எவ்வளவு உயரம் வரை இருக்கும், டிங்கு? - சி. அகிலேஷ், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாரூர்.

பூமியின் கடல்மட்டத்திலிருந்து சுமார் 100 கி.மீ. உயரம்வரை காற்று மண்டலம் இருப்பதாக ஹங்கேரியைச் சேர்ந்த இயற்பியலாளர் தியடோர் வான் கார்மன் கூறினார். அதனால் காற்று மண்டலம் முடிவடைந்து விண்வெளி ஆரம்பிக்கும் எல்லையை, ‘கார்மன் கோடு’ என்று அழைக்கிறார்கள். ஆனால், காற்று மண்டலம் சட்டென்று முடிவடைந்துவிடுவதில்லை. அதற்கு மேலும் சில மெல்லிய அடுக்குகளாகக் காற்று மண்டலம் குறிப்பிட்ட உயரத்துக்கு இருந்துகொண்டுதான் இருக்கிறது, அகிலேஷ்.

பூக்களில் இருந்து நறுமணம் எப்படி வருகிறது, டிங்கு? - ஆர். நிவேதா, 6-ம் வகுப்பு, ஆர்கா கிரீன் பள்ளி, அண்டூர், குமரி.

தாவரங்கள் மகரந்தச் சேர்க்கைக்குப் பெரும்பாலும் பிற உயிரினங்களை நம்பி இருக்கின்றன. அதாவது காற்று, நீர், பூச்சிகள், பறவைகள், வெளவால் போன்றவற்றை நம்பி இருக்கின்றன. எனவே பூச்சிகள், பறவைகள், விலங்குகளைக் கவர்வதற்காக வேதிப்பொருளை உற்பத்தி செய்கின்றன. அந்த வேதிப்பொருள் பூக்களின் வழியாகவே அதிகம் வெளியிடப்படுகிறது. வெப்பத்தால் இந்த வேதிப்பொருள் வேகமாக ஆவியாகிறது.

அப்போது பூக்களின் நறுமணம், பூக்களின் வண்ணம் ஆகியவற்றால் ஈர்க்கப்படும் பூச்சிகள், பறவைகள் பூக்களில் அமர்ந்து பூந்தேனை உறிஞ்சிவிட்டு, அடுத்த பூவுக்குச் செல்லும்போது மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. பகலில் பூக்கும் பூக்கள் கண்கவர் வண்ணங்களுடன் காணப்படும். மாலையில் மலரும் பூக்கள் இருளிலும் பளிச்சென்று தெரியும் வண்ணம் வெள்ளையாகப் பூக்கின்றன. பகலில் மலரும் பூக்களைவிட மாலையில் பூக்கும் பூக்களுக்கு நறுமணமும் அதிகமாக இருக்கும், நிவேதா.

ஒரு நாள் தாமதமாக எழுந்தேன். வெயில் வந்துவிட்டதால் கோலம் போடவில்லை. கோலம் போடாவிட்டால் வீடு உருப்படாது என்று திட்டிவிட்டார் அம்மா. எனக்குக் குற்றவுணர்வாக இருக்கிறது. ஏதாவது கெட்டது நடக்குமா, டிங்கு? - எம். ரேகா, 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரை.

வீட்டு வாசலைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்குத் தினமும் பெருக்குகிறோம். வாசலை அழகாக வைத்துக்கொள்வதற்குக் கோலம் போடுகிறோம். ஒரு நாள் கோலம் போடாவிட்டால், வாசல் வெறுமையாக இருக்குமே தவிர, வேறு ஒன்றும் நடக்காது. அதுவும் வீடோ வீட்டில் உள்ளவர்களோ உருப்படாமல் எல்லாம் போக மாட்டார்கள்.

நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தினமும் கோலம் போடுவதில்லை. அவர்கள் எல்லாம் நன்றாகத்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதனால் கவலையை விடுங்கள், ரேகா. வேலை செய்யாத கோபத்தில் அம்மா இப்படிச் சொல்லியிருப்பார். மற்றபடி அவருக்கும் தெரியும், கோலம் போடாவிட்டால் ஒன்றும் ஆகாது என்று.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x