Last Updated : 07 Aug, 2024 06:30 AM

 

Published : 07 Aug 2024 06:30 AM
Last Updated : 07 Aug 2024 06:30 AM

கதை: நான் யார்?

வித்தைக்காரரிடமிருந்து ஒரு கரடி தப்பித்து, காட்டுக்குள் வந்துவிட்டது. குட்டியிலிருந்தே அது அவரிடம்தான் இருந்தது. சைக்கிள் ஓட்டும். கயிற்றில் நடக்கும். குட்டிக்கரணம் அடிக்கும். வணக்கம் சொல்லும். வேடிக்கை பார்ப்பவர்களிடம் அலுமினியத் தட்டைக் கையில் பிடித்துக்கொண்டு யாசகம் கேட்கும். எப்போதும் சங்கிலியில் கட்டி வைத்திருப்பார் அந்த வித்தைக்காரர்.

அன்று சங்கிலி கழன்றுவிட்டது. ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று கரடி உலா போனது. இரவு நேரம். அதனால் ஆள்கள் யாரும் தெருக்களில் இல்லை. கீழே கிடந்த பாப்கார்னை எடுத்து வாயில் போட்டது. ஒரு பிஸ்கெட் துண்டை எடுத்து முகர்ந்து பார்த்துவிட்டுச் சாப்பிட்டது.

திடீரென, தெருவில் ஒரு நாய் குரைக்க ஆரம்பித்தது. அது என்ன சொன்னதோ தெரியவில்லை. மற்ற தெருக்களிலிருந்து நான்கைந்து நாய்கள் குரைத்துக்கொண்டே பாய்ந்து வந்தன. அவ்வளவுதான்.

கரடி கண்மண் தெரியாமல் ஓடியது. பின்னால் நாய்கள் துரத்தி வந்தன. ஓட்டம் என்றால் ஓட்டம் அப்படி ஓர் ஓட்டம். இந்தக் காட்டுக்குள் வந்துதான் நின்றது.

ஓடிவந்த களைப்பில் அப்படியே ஒரு மரத்தடியில் படுத்து உறங்கிவிட்டது. காலையில் கண் விழித்தபோது பசித்தது. கரடி இதுவரை காட்டைப் பார்த்தது கிடையாது. அதனால் அதுக்கு வேடிக்கையாக இருந்தது. சுற்றிலும் பெரிய பெரிய மரங்கள், விதம் விதமான செடிகள், கொடிகள், பறவைகளின் பாடல், விலங்குகளின் உறுமல், செருமல் என்று வித்தியாசமாக இருந்தது.

நகரத்தில் கார், பைக்குகளின் டூர்ர்ர் புர்ர் சத்தம், வியாபாரிகளின் கூக்குரல், குழந்தைகளின் கூச்சல் கேட்கும். மனிதர்கள் எங்கே போகிறார்கள்? எங்கே வருகிறார்கள்? எதற்காக இப்படி மேலும் கீழும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று கரடி யோசிக்கும்.

இங்கே சத்தங்களே இனிமையாக இருந்தன. ஆனால், பசிக்குதே. என்ன சாப்பிடக் கிடைக்கும் என்று தெரியவில்லை. கரடியை வைத்திருந்த வித்தைக்காரர் காலையில் இரண்டு பன் ரொட்டிகளையும் வாழைப்பழங்களையும் கடையில் வாங்கிக் கொடுப்பார். இங்கே கடைகள் இல்லை. அப்படியே இருந்தாலும் யார் வாங்கிக் கொடுப்பார்கள்?

‘ச்சே, நகரத்திலிருந்து இந்தக் காட்டுக்கு வந்திருக்கக் கூடாது’ என்று நினைத்தது. அப்படியே நடந்து போய்க் கொண்டிருந்தபோது ஒரு சிறிய அருவியும் குளமும் தெரிந்தன. அவற்றைச் சுற்றி நிறைய விலங்குகளும் பறவைகளும் தண்ணீர் குடித்துக்கொண்டும் குளித்துக்கொண்டும் இருந்தன.

கரடியைப் பார்த்தவுடன் ஒரு நொடி எல்லாம் நிமிர்ந்து பார்த்தன. பிறகு மறுபடியும் தங்களுடைய வேலையைப் பார்த்தன. திடீரென்று கரடிக்கு ஒரு யோசனை தோன்றியது.

இந்த விலங்குகள் முன்னால் வித்தை காட்டினால் என்ன? அவை உணவு கொடுக்காதா?

உடனே உற்சாகமாகக் கரடி அந்த விலங்குகளுக்கு முன்னால் குட்டிக்கரணம் போட்டது. தாவிக்குதித்தது.கைகளைக் குவித்து வணக்கம் சொன்னது. நடனம் ஆடியது. கயிற்றில் நடப்பது போல ஒரே நேர்கோட்டில் நடந்து காண்பித்தது.

பிறகு சுற்றிச் சுற்றிப் பார்த்தது. அலுமினியத் தட்டு ஞாபகம் வந்துவிட்டது. எதுவும் இல்லை என்றதும் அப்படியே இரண்டு கைகளையும் விரித்து ஏந்தியபடி அந்தக் குளத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது.

ஒன்றும் புரியாமல் எல்லா விலங்குகளும் கரடியைப் பார்த்தன. கரடி பரிதாபமாகப் பார்த்தது. பசித்தது.

அப்போது குரங்கு ஒன்று மரத்திலிருந்து மாம்பழத்தைக் கீழே போட்டது. கரடி தயக்கத்துடன் அந்த மாம்பழத்தை எடுத்து ஒரு கடி கடித்தது. அந்த ருசி அபாரமாக இருந்தது. உடனே நிமிர்ந்து குரங்கைப் பார்த்தது.

குரங்கு தாவித் தாவிச் சென்றது. கீழே தரையில் அதன் பின்னாலேயே போன கரடிக்கு ஒரு பாறையின் பொந்தில் பெரிய தேன்கூடு தெரிந்தது. தேன்கூட்டைப் பார்த்ததும் அதற்குத் தன்னுடைய இயற்கையான குணங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தன.

பாய்ந்து சென்று தேன்கூட்டைப் பிய்த்து, கைகளிலும் வாயிலும் வடிய வடியக் குடித்தது. அப்போதுதான் அதற்குத் தெரிந்தது, தான் ஒரு கரடி என்று. தான் இந்தக் காட்டில் உள்ளவன் என்று உணர்ந்தது. உடனே மகிழ்ச்சியில் காடே அதிரும்படி கரடி குரல் எழுப்பியது. காடும் மகிழ்ச்சியில் அதிர்ந்து எதிரொலித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x