Last Updated : 09 May, 2018 10:34 AM

 

Published : 09 May 2018 10:34 AM
Last Updated : 09 May 2018 10:34 AM

கதை: வல்லவனுக்கு வல்லவன்

 

தே

னோடை ஏரிக் கரையில் நண்டு, பொன்வண்டு, எறும்பு, நத்தை நான்கும் வசித்துவந்தன. நத்தை, நண்டு, பொன்வண்டு மூன்றும் அன்பாக நடந்துகொண்டன. ஆனால் எறும்பு எப்போதும் தற்பெருமை பேசிவந்தது.

அன்று நத்தை நடந்து செல்வதைப் பார்த்து, "என்ன நத்தையே, ஏன் இப்படி மெதுவாக நடக்கிறாய்? தூங்கிக் கொண்டே நடப்பாயோ? எங்கள் எறும்பு இனத்தில் இரவில் கூட நாங்கள் உறங்குவதில்லை. எப்போதும் ஏதேனும் வேலை செய்து கொண்டே இருக்கிறோம். சந்தேகம் இருந்தால் இரவில் விழித்துப் பார்.

மரத்தில் ஏறும்போது கவனமாக ஏறு. கீழே விழுந்தால் சுக்கு நூறாக உடைந்து விடுவாய். ஆனால் நான் எந்த உயரத்திலிருந்து விழுந்தாலும் காற்றில் மிதந்து அடிபடாமல் தரையில் இறங்கிவிடுவேன்" என்று கர்வத்தோடு சொன்னது எறும்பு.

நத்தையோ எறும்புக்குப் பதில் சொல்லாமல் வருத்தத்தோடு போய்விட்டது.

அரைமணி நேரத்தில் நண்டு அந்தப் பக்கமாக வந்தது. அதைப் பார்த்தவுடன் எறும்புக்கு உற்சாகமாகிவிட்டது.

"ஏன் உனக்கு நேராகவே நடக்கத் தெரியாதா? இரண்டு கால்கள் கொண்ட மனிதர்கள் நேராக நடக்கிறார்கள். நான்கு கால்கள் கொண்ட நாயும் நரியும்கூட நேராக நடக்கின்றன. ஆறு கால்கள் இருந்தும் ஏன் இப்படிக் கோணல் மாணலாக நடக்கிறாய்? உனக்கு ஒன்று தெரியுமா? எங்கள் எறும்பினம் கூட்டம் கூட்டமாகச் சென்றால்கூட ஒரே வரிசையில் நடந்து செல்வோம். நீ ஒரேயொருவன் ஏன் இப்படி இடமும் வலமுமாக நடக்கிறாய்?" என்று கேட்டது எறும்பு.

நண்டும் அமைதியாக நகர்ந்துவிட்டது.

சிறிது நேரத்தில் பொன்வண்டு வந்து சேர்ந்தது.

"பொன்வண்டே, உன்னால் எவ்வளவு எடையைத் தூக்க முடியும்? எந்தப் பொருள் கிடைத்தாலும் உருட்டிக் கெரண்டே செல்கிறாயே… நாங்கள் எங்கள் உடல் எடையைப்போல் ஐம்பது மடங்கு எடை கொண்ட பொருளைத் தூக்கிச் செல்வோம் தெரியுமா? அத்தனை பலசாலிகள்!" என்று தன் தோளைத் தட்டிப் பெருமையாகச் சொன்னது எறும்பு.

எறும்பு சொல்வது உண்மைதானே! வண்டால் எப்படி அதை மறுத்துச் சொல்ல முடியும்? பேசாமல் சென்றுவிட்டது பொன்வண்டு.

மறுநாள் மாலை நண்பர்கள் நால்வரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது எறும்பு, "நண்பர்களே, இந்த உலகில் மிகப் பெரிய விலங்கு யானைதான். ஆனால் அந்த யானைக்கே எங்கள் இனத்தவர்கள் பயப்பட மாட்டார்கள். யானை எங்களைக் கண்டால் பயப்படும். எங்களில் ஒருவன் யானையின் காதுக்குள் நழைந்து கடித்தால், யானையின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். அதனாலேயே யானை காதுக்குள் நாங்கள் நுழையாமல் இருப்பதற்காகவே காதை ஆட்டிக் கொண்டே இருக்கிறது" என்று சொன்னது எறும்பு.

எறும்பு பேசுவதைக் கேட்டு நண்டும் நத்தையும் பொன்வண்டும் ஆச்சரியத்தில் அமர்ந்திருந்தன.

அப்போது மூக்கு நீண்ட உடும்பு போன்ற பிராணி ஒன்று தூரத்தில் நடந்து வந்தது. அதைப் பார்த்த எறும்பு, "நண்பர்களே, சற்று நேரம் நான் இந்த மரப்பொந்தில் ஒளிந்துகொள்கிறேன். யாராவது என்னையோ எங்கள் புற்றையோ கேட்டால் தெரியாது என்று சொல்லிவிடுங்கள்" என்று சொல்லி விட்டு, ஒளிந்து கொண்டது.

எறும்புத்தின்னி அருகில் வந்து, "இங்கே எறும்பு ஏதேனும் இருக்கிறதா? எனக்கு எறும்புகளை உண்ணப் பிடிக்கும்" என்றது.

"அப்படி யாரும் இங்கே இல்லையே" என்று நத்தை சொல்ல, எறும்புத்தின்னி சென்றுவிட்டது.

சிறிது நேரத்துக்குப் பிறகு எறும்பு மெதுவாக மரப்பொந்தைவிட்டு இறங்கிவந்தது.

நத்தை எறும்பிடம், "என்ன வீராதி வீரனே, எதற்காக மரப்பொந்துக்குள் போய் ஒளிந்து கொண்டாய்?" என்று கேட்டது.

"காரணம் ஒன்றுமில்லை. இப்போது வந்தானே மூக்கு நீண்டவன். அவன் என்னிடம் அடிக்கடி கடன் கேட்பான். எவ்வளவுதான் நானும் கொடுப்பேன்? அதான் ஒளிந்துகொண்டேன்” என்றது எறும்பு.

எறும்பு சொன்னதைக் கேட்டு நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். பிறகு நத்தை, "ஏன் பொய் சொல்கிறாய்? அந்த மூக்கு நீண்டவன் உன்னைத் தின்பதற்காகத்தான் இங்கு வந்தான். இத்தனை நாட்களும் எங்களைக் கேலி செய்து கொண்டிருந்தாய். வீரன் மாதிரி பேசிக் கொண்டிருந்தாய். வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு. உன்னை வெல்வதற்கும் இந்த உலகில் எறும்புத்தின்னி என்ற ஒருவன் இருக்கத்தான் செய்கிறான். அதனால் இனியாவது உன் தற்பெருமையை நிறுத்திக்கொள். ஆணவப் பேச்சை அடக்கிக்கொள்" என்றது. பொன்வண்டும் நண்டும் அதை ஆமோதித்தன.

இனியும் தற்பெருமை பேச முடியாது என்று உணர்ந்த எறும்பு, "நண்பர்களே என்னை மன்னித்துவிடுங்கள். இனி இப்படிப் பேசமாட்டேன்" என்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x