Published : 31 Jul 2024 06:05 AM
Last Updated : 31 Jul 2024 06:05 AM
புயல் உருவாவதற்கான காரணங்கள் என்ன டிங்கு? - சு.அ. யாழினி, 12-ம் வகுப்பு, ஸ்ரீவிக்னேஷ் வித்யாலயா பள்ளி, திருச்சி.
புயல் உருவாவதற்குக் காற்றும் வெப்பமும் அவசியம். எங்கும் நிறைந்திருக்கும் காற்றின் மீது சூரிய வெப்பம் படும்போது காற்று மூலக்கூறுகள் அடர்த்தியை இழக்கின்றன. அடர்த்தி இழந்த காற்று மூலக்கூறுகள் மேல் நோக்கி நகர்கின்றன. அப்போது அங்கே குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது.
அந்தக் குறைந்த காற்றழுத்தத்தை நோக்கி அழுத்தம் அதிகமாக உள்ள காற்றின் மூலக்கூறுகள் தானாக நகர்கின்றன. பூமியின் சுழற்சியால் இந்தக் காற்று சுழல ஆரம்பிக்கிறது. கடலின் மேல் இருக்கும் வெப்பம் அதிகமாகும்போது, காற்று வெப்பமடைந்து மேலே செல்கிறது.
குறிப்பிட்ட உயரத்தை அடைந்த பிறகு குளிர்ந்து, நீர்த்திவலைகள் உறைந்து மேகங்களாக மாறுகின்றன. இப்படித் தொடர்ந்து நீராவி மேலே செல்லும்போது, அங்கே குறைந்த காற்றழுத்தம் உண்டாகிறது. அந்தக் குறைந்த காற்றழுத்தப் பகுதியை நோக்கி அழுத்தம் அதிகமான காற்று மூலக்கூறுகள் நகர்கின்றன. ஒருகட்டத்தில் காற்றின் வலிமை அதிகரிக்க அதிகரிக்க அது புயலாக உருவாகிவிடுகிறது, யாழினி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT