Last Updated : 09 May, 2018 10:41 AM

 

Published : 09 May 2018 10:41 AM
Last Updated : 09 May 2018 10:41 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: அவர்களை எப்படி அழைப்பது?

 

ன்று விடாமல் எல்லாப் பத்திரிகைகளையும் புரட்டிப் பார்த்தார். எல்லாவற்றிலும் திருடர்கள் என்றே குறிப்பிட்டிருந்தார்கள். தெரிந்தவர்களிடம் பேசினார். ‘‘ஐயோ, அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள், மார்க்ஸ். உங்கள் பத்திரிகையிலும் அவர்களைக் கண்டித்து எழுதுங்கள்” என்று அறிவுறுத்தினார்கள்.

நிச்சயம் எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு, மார்க்ஸ் நேராக நூலகத்துக்குச் சென்றார். சிறிது நேரத்தில் அவர் மேஜை முழுக்கப் புத்தகங்கள் நிரம்பிவிட்டன. ஒரு பக்கம் வரலாறு. பக்கத்தில் இடித்துக்கொண்டு பொருளாதாரம். ஒரு மூலையில் குண்டு குண்டாகச் சட்டப் புத்தகங்கள். இன்னொரு மூலையில் சமூகவியல். நடுவில் குன்றுபோல் அரசியல். பிறகு தத்துவம். எல்லாவற்றுக்கும் நடுவில் மங்கிய, பழைய செய்தித்தாள்கள். கை வலிக்க வலிக்க, குறிப்புகள் எடுத்துக்கொண்டார்.

மறுநாள் மார்க்ஸின் கட்டுரை செய்தித்தாளில் வெளிவந்தது. அவ்வளவுதான், ஒரு வழக்கறிஞர் அலுவலகத்துக்கு நேரடியாக வந்து கத்த ஆரம்பித்துவிட்டார். ‘‘மார்க்ஸ், இது உங்களுக்கே நியாயமா? ஒரு பெரிய பத்திரிகையின் ஆசிரியராக இருந்துகொண்டு திருடர்களுக்கு ஆதரவாக இப்படி எழுதலாமா?”

‘‘படித்த வழக்கறிஞரான நீங்கள் அவர்களைத் திருடர்கள் என்று அழைக்கலாமா?”

‘‘பிறகு வேறு எப்படி அழைப்பதாம்? இன்னொருவருக்குச் சொந்தமான மரத்திலிருந்து விறகுகளைத் திருடியிருக்கிறார்கள். இது திருட்டுதானே?”

மார்க்ஸ் மறுத்தார். ‘‘ நிதானமாக யோசித்துப் பாருங்கள் தோழர். அவர்கள் யார்? காலம் காலமாகக் காட்டை நம்பி வாழ்ந்துவரும் ஏழைகள். அடுப்பு எரிப்பதற்கும் குளிர் காய்வதற்கும் அவர்கள் விறகுகளைச் சேகரிக்கிறார்கள். காட்டில் கிடைக்கும் காய், கிழங்குகளைப் பறித்துச் சமைக்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகள் காட்டுப் பகுதியில்தான் விளையாடுகிறார்கள், அங்கிருக்கும் பழங்களைப் பறித்துச் சாப்பிடுகிறார்கள். காடு இல்லாவிட்டால் அந்த ஏழைகள் வாழ முடியாது. அந்தக் காடும் அவர்களை நம்பித்தான் இருக்கிறது.

சட்டம் படித்த நீங்களும் பத்திரிகை ஆசிரியருமான நானுமா தினமும் போய் காட்டைப் பராமரிக்கிறோம்? அங்குள்ள செடிகள் அவர்கள் நட்டவை. பழம் தரும் மரங்களை வளர்த்தவர்கள் அவர்கள். அந்தப் பழங்களைப் பறித்துச் சாப்பிட அவர்களுக்குத்தான் உரிமை இருக்கிறது. அங்கிருந்து விறகு எடுக்க அவர்களுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. அதுதான் நியாயமும்கூட.”

‘‘பழைய வரலாறு எல்லாம் இப்போது எதுக்கு மார்க்ஸ்?”

மார்க்ஸ் புன்னகை செய்தார். ‘‘வரலாறு தெரியாததால்தான் பல நூற்றாண்டுகளாகக் காட்டில் வாழ்ந்துவரும் மக்களை நாம் மதிக்காமல் இருக்கிறோம்.”

‘‘நீங்கள் ஆயிரம் சொன்னாலும், இன்று சட்டப்படி அந்தக் காடு பணக்காரர்களுக்குச் சொந்தமாகிவிட்டது. எங்கள் நிலத்தில் உள்ள மரத்திலிருந்து விறகையும் பழங்களையும் திருடுகிறார்கள் என்று அவர்கள் வழக்கு போட்டிருக்கிறார்கள்.”

‘‘ஆம், அவர்கள் வழக்கு போட்டவுடன், ‘இது அநியாயம் உடனடியாகத் திருடர்களைக் கைது செய்யுங்கள்’ என்று அரசு சொல்கிறது. உடனே காவல்துறை ஓடிச் சென்று ஏழைகளைத் துரத்துகிறது. அவர்களைக் கைது செய்கிறது. வழக்கறிஞர்கள் பணக்காரர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடுகிறார்கள். உடனே பத்திரிகைகள் எல்லாம் பரபரப்பாகச் செய்திகளை வெளியிடுகின்றன. வந்து என் மேஜையில் பாருங்கள். ’மரம் கடத்தும் மகா பாதகர்கள்!’, ’திருடர்கள் ஜாக்கிரதை!’, ‘அடங்க மறுக்கும் அடாவடிகள்!’, ‘திருடர்களின் துணிகரக் கொள்ளை’ என்ற தலைப்புகளில் செய்திகளைப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தெரிகிறது?”

அந்த வழக்கறிஞர் அமைதியாக இருக்க, மார்க்ஸ் தொடர்ந்தார்:

‘‘செல்வாக்கு மிக்கப் பணக்காரர்கள் புகார் கொடுத்தால் உடனே அரசு கவனிக்கிறது. அரசு சொல்வதைக் காவல்துறை கேட்கிறது. நீதிமன்றம் என்ன செய்கிறது? யார் பக்கம் நியாயம், யார் செய்வது அநியாயம் என்று பார்க்கிறதா? இல்லை. சட்டப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு அதில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே தீர்ப்பாக அளிக்கிறது. இவர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்களோ அதை மட்டும் பத்திரிகைகள் வெளியிடுகின்றன.

என் நிலத்திலிருந்து திருடிவிட்டார்கள் என்று ஒருவர் புகார் கொடுத்தவுடன், அரசு அவர்களைத் திருடர்கள் என்கிறது. நீதிமான்களும் காவலாளிகளும் திருடர்கள் என்று அழைக்கிறார்கள். பத்திரிகைகளும் திருடர்கள் என்றே அழைக்கின்றன. ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர்கள் அப்பாவிகள். அவர்கள் ஏழைகள். அவர்கள்தான் காட்டின் உண்மையான உரிமையாளர்கள்.”

மார்க்ஸ் நெருங்கிச் சென்று அவர் தோள்மீது கைபோட்டுக்கொண்டார். ‘‘தோழர், நாளையே இவர்கள் காற்றை விலை பேசி வாங்கிவிடலாம். தண்ணீரை வாங்கிவிடலாம். சாலையைக்கூட என்னுடையது என்று சொல்லிவிடலாம். அப்படி ஆகிவிட்டால் நீங்கள், நான், இந்தக் கூட்டத்திலிருப்பவர்கள் என்று யாருமே சுவாசிக்க முடியாது. யாரும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூடக் குடிக்க முடியாது. வெளியில் நடமாட முடியாது. என் காற்றை எப்படி நீ காசு கொடுக்காமல் சுவாசிக்கலாம்? நீ ஒரு திருடன் என்று உங்களையே அவர்கள் சொல்லிவிடுவார்கள். இந்த நிலை நமக்கு ஏற்படக் கூடாது என்றால் நாம் சரியானவர்களின் பக்கம் நிற்க வேண்டும். உலகமே எதிர்த்தாலும் நியாயமாகக் குரல் கொடுக்கவேண்டும்.”

சண்டை போட வந்த வழக்கறிஞர் மார்க்ஸின் கையை அழுத்தமாகப் பிடித்துக் குலுக்கினார். ‘‘நன்றி மார்க்ஸ். அந்த அப்பாவிகளைத் திட்டியதற்காக வருந்துகிறேன். இனி அவர்களைத் தோழர்கள் என்றுதான் அழைப்பேன்.”

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x