Published : 24 Jul 2024 06:05 AM
Last Updated : 24 Jul 2024 06:05 AM
“அம்மா, நேத்திக்கு ஆஷிகாவுக்குப் பல் விழுந்துடுச்சாம். அதை டப்பாவுல போட்டு வச்சிட்டு, தூங்கினாளாம். மறுநாள் காலையில பல் டப்பா காணாம போயிடுச்சாம்!”
“ஆ, எப்படி?”
“பல் தேவதை வந்து அதைத் தூக்கிட்டுப் போயிருமாம். அதுக்குக் குழந்தைங்களோட பல்லுன்னா ரொம்பப் பிடிக்குமாம். அதுக்குப் பரிசா கலர் பென்சில்கள் கொடுத்திருக்காம்!”
“நாங்க எல்லாம் பல் விழுந்தா கொல்லையில புதைச்சுதான் வைப்போம். அங்கே அழகா ஒரு செடி முளைக்கும்” என்றார் பாட்டி.
“நான் பல் தேவதைக்குதான் என் பல்லைக் கொடுப்பேன். இங்கே பாருங்க, ஒரு பல் ஆடிட்டு இருக்கு” என்று காட்டினாள் வினிதா.
“தானா விழுந்தால் வலிக்காது, நீயா விழ வச்சா வலிக்கும்” என்றார் அம்மா.
பத்தாவது நாள் பல் தேய்க்கும்போது வினிதாவின் பல் விழுந்துவிட்டது. அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு டப்பாவில் பல்லைப் பத்திரமாகப் போட்டு வைத்துவிட்டுத் தூங்கினாள்.
ஒற்றைக் கொம்புடன் இளஞ்சிவப்பு நிறச் சிறகுகளை அசைத்துக்கொண்டே பறந்து வந்தது ஒரு குதிரை. அதன் மேல் வண்ண மலர்களைச் சூடிய தேவதை ஒன்று அமர்ந்திருந்தது. அதன் பற்களில் இருந்து பளீரிடும் ஒளி வெளிப்பட்டது.
வினிதாவின் பல் டப்பாவை எடுத்துக் கொண்டு, ஒரு புது டப்பாவை வைத்துவிட்டுச் சென்றது. வினிதா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்.
காலையில் எழுந்ததும் பல் டப்பா வைத்த இடத்துக்குச் சென்றாள். ஆனால், அங்கே டப்பா இல்லை. அங்கும் இங்கும் தேடினாள். அம்மாவிடம் ஓடினாள்.
“அம்மா, பல் தேவதை கொடுத்த பரிசு எங்கே?”
“கனவு கண்டியா? பல் தேய்ச்சுட்டு வா” என்றார் அம்மா.
உடனே வினிதாவுக்கு அழுகை வந்துவிட்டது.
“சும்மா சொன்னேன். நான்கூட அந்தப் பல் தேவதையைப் பார்த்தேன். உன்னோட பல் டப்பாவை எடுத்துக்கிட்டுத் தோட்டத்துப் பக்கம் போனது” என்றார் அம்மா.
‘அப்படியா?’ என்று ஆச்சரியப்பட்ட வினிதா, அம்மாவுடன் தோட்டத்துக்குப் போனாள். அங்கு ஒரு செடி புதிதாக நட்டு வைக்கப்பட்டிருந்தது.
“அந்தப் பல் தேவதை பாட்டியோட தோழியா இருக்கும்னு நினைக்கறேன். உன் பல்லை இந்த இடத்துல புதைச்சு வச்சிருக்கு. அதுக்குப் பதிலா ஒரு கற்பூரவல்லி செடியைப் பரிசா நட்டு வச்சிருக்கு.”
நம்பிக்கை இல்லாமல் அந்தச் செடியைப் பார்த்த வினிதா, “அடியில என் பல் இருக்கான்னு தோண்டிப் பார்க்கட்டுமா?” என்று கேட்டாள்.
“செடியை எடுத்தால் மறுபடியும் முளைக்கிறது கஷ்டம்” என்றார் அம்மா.
“ஆஷிகாவுக்குக் கொடுத்த மாதிரி கலர் பென்சில், நோட்டுன்னு எதிர்பார்த்தேன். எனக்கு இந்தப் பரிசே பிடிக்கல” என்றாள் வினிதா.
“பரிசுன்னா எதுவா இருந்தாலும் ஏத்துக்கணும். பொருள் முக்கியமில்ல, அன்புதான் முக்கியம்” என்றார் அம்மா.
“இங்க பாரு வினிதா, பென்சில், நோட்டு எல்லாம் உனக்கு மட்டும்தானே பயன்படும்? இந்தச் செடி வளர்ந்தா நம்ம வீட்டுல எல்லாருக்கும் உபயோகமா இருக்கும். யாருக்காவது சளித் தொல்லை இருந்தா, கற்பூரவல்லி இலைகளைப் பறிச்சிட்டுப் போய் கொடுக்கலாம். சீக்கிரம் குணமாயிரும்” என்றார் பாட்டி.
வினிதாவின் மனம் சமாதானம் அடையவில்லைஎன்றாலும் செடிக்குத் தண்ணீர் ஊற்றி, கவனித்துக் கொண்டாள். சில மாதங்களில் செடி நன்றாக வளர்ந்துவிட்டது.
அன்று பள்ளியிலிருந்து வந்த வினிதாவுக்கு ஜலதோஷம் பிடித்து விட்டது. தொண்டை வலித்தது. கற்பூரவல்லி இலைகளைப் பறித்து, கஷாயம் போட்டு, தேன் விட்டுக் கொடுத்தார் பாட்டி.
மறுநாள் ஜலதோஷம், தொண்டைவலி எல்லாம் மாயமாக மறைந்துவிட்டன. அம்மாவிடம் தகவலைச் சொன்னாள் வினிதா.
“பல் தேவதை கொடுத்த பரிசு உனக்கு எப்படி வேலை செஞ்சிருக்கு பார்த்தீயா?” என்று சிரித்தார் அம்மா.
பல் தேவதைக்கு நன்றி சொல்லிவிட்டு, பள்ளிக்குப் புறப்பட்டான் வினிதா.
“பல் தேவதையே, சாப்பிட வாங்க” என்று பாட்டியை அழைத்தார் வினிதாவின் அம்மா!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT