Last Updated : 09 May, 2018 10:40 AM

 

Published : 09 May 2018 10:40 AM
Last Updated : 09 May 2018 10:40 AM

கண்டுபிடிப்புகளின் கதை: ஜீன்ஸ்

 

கு

ழந்தை முதல் பெரியவர் வரை உலகம் முழுவதும் விரும்பி அணியப்படும் உடை ஜீன்ஸ். இன்று நவநாகரிக உடையாகக் கருதப்படும் இந்த ஜீன்ஸ் உருவாகி, 145 ஆண்டுகள் ஆகிவிட்டன! டெனிம் அல்லது டங்கரீ என்ற முரட்டுத் துணியால் ஜீன்ஸ் உருவாக்கப்படுகிறது.

17-ம் நூற்றாண்டில் இந்தியாவிலும் இத்தாலியிலும் முரட்டுத் துணிகள் தயாரிக்கப்பட்டுவந்தன. இந்தியாவில் தயாரித்த முரட்டுத் துணியை டங்கரீ என்று அழைத்தனர். இந்த டங்கரீயும் நீலச்சாயமும் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டன.

Jacob_W._Davis.jpgஜேகப் டேவிஸ்

இப்படி நீலச் சாயத்தில் நனைக்கப்பட்ட முரட்டுத் துணிகளில் உருவான கால்சட்டைகளைப் பெரும்பாலும் தொழிலாளர்களே பயன்படுத்தி வந்தனர். இதே காலகட்டத்தில் இத்தாலியின் ஜெனோவா நகரில் விற்பனை செய்யப்பட்டு வந்த முரட்டுத் துணிகளை, அந்த நகரின் பெயரிலேயே ‘ஜீன்ஸ்’ என்று அழைக்க ஆரம்பித்தனர்.

ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற லெவி ஸ்ட்ராஸ், தனது சகோதரருடன் சேர்ந்து வியாபாரம் செய்தார். அப்போது சுரங்கத்தில் தங்கம் தேடும் பணி பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. சுரங்கத் தொழிலாளர்களின் கால்சட்டைகள் வெகு சீக்கிரமே கிழிந்து விடுவதை அவர் கவனித்தார். உறுதியான முரட்டுத் துணியில் கால்சட்டை தைத்துக் கொடுத்தால்தான் இவர்களுக்குச் சரிப்படும் என்று கருதினார். கூடாரம் அமைக்கப் பயன்படும் கேன்வாஸ் துணியை வைத்து ஒரு கால்சட்டை தைத்தார். சுரங்கத் தொழிலாளர்களுக்கு அது பிடித்துப் போய்விட்டது.

வரவேற்பு அதிகம் இருந்ததால் பிரான்ஸிலிருந்து நீம் என்றழைக்கப்பட்ட முரட்டுத் துணியை வாங்கித் தைத்தார். அதுவே ‘டெனிம்’ என்று பின்னர் புகழ்பெற்றது. 1873-ம் ஆண்டு தையல் கலைஞர் ஜேகப் டேவிஸ், லெவி ஸ்ட்ராஸ் இருவரும் இணைந்து ’லெவி ஸ்ட்ராஸ் அண்ட் கோ’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, நீலக் கால்சட்டைகளை அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்தனர். இப்படித்தான் ஜீன்ஸ் உருவானது. 1896 வரை புளூ ஜீன்ஸ் என்றழைக்கப்பட்டாலும், அவை நீலம் மற்றும் பழுப்பு வண்ணங்களிலேயே தயாராயின.
 

Levi_Strauss.jpgrightகடையாணி நீலக் கால்சட்டை (Reveted Jeans)

அல்கலி என்ற சுரங்கத் தொழிலாளி, சுரங்கத் தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை எல்லாம் ஜீன்ஸ் பாக்கெட்டிலேயே வைத்துவிடுவார். இதனால் ஜீன்ஸ் பாக்கெட்கள் அடிக்கடி கிழிந்து போகும். கிழிந்த பாக்கெட்களை தைத்துத் தைத்து சலிப்படைந்த தையர் கடைக்காரர், அல்கலியை ஒரு கொல்லரிடம் அழைத்துப் போனார். பாக்கெட்களில் கடையாணி அடித்துவிடும்படி வேடிக்கையாகச் சொன்னார். இதையறிந்த லெவி ஸ்ட்ராஸ் ஜீன்ஸ் பாக்கெட்களில் கடையாணி அடிக்கும்படி கூறினார். இப்படித்தான் கடையாணி ஜீன்ஸ் உருவானது.

தொழிலாளர்கள் பயன்படுத்திய ஜீன்ஸ், பின்னர் ராணுவ வீரர்களும் பயன்படுத்தும் உடையாக மாறியது. 1950-களுக்குப் பின்னர் அனைவருக்குமான உடையாக உலகம் முழுவதும் மாற்றம் அடைந்தது. இன்று நவநாகரிக உடையாக வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

(கண்டுபிடிப்போம்!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x