Published : 16 May 2018 10:59 AM
Last Updated : 16 May 2018 10:59 AM
கேக், பிஸ்கெட் போன்றவற்றை வேக வைக்கவும் உணவுப் பொருட்களைச் சமைக்கவும்சமைத்த பொருட்களைச் சூடாக்கவும் ‘மைக்ரோவேவ் அவன்’ எனும் நுண்ணலை அடுப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மின்சாரத்தில் இயங்கும் இந்த நுண்ணலை அடுப்பிலிருந்து மின்காந்த அலைகள் (நுண்ணலைகள்) வெளிப்பட்டு, உணவை வேகவைக்கின்றன. வீடுகள், உணவகங்களிலிருந்து விமானம்வரை மைக்ரோவேவ் அவன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலகட்டம். எதிரியின் விமானங்களையும் கப்பல்களையும் கண்டறிவதற்காக ரேடார் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. மேக்னெட்ரான் கருவி மூலம் மைக்ரோவேவ் ரேடியோ சமிக்ஞைகளை உருவாக்கி, ரேடாருக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர்.
மேக்னெட்ரான் கருவி அருகே நின்றால் மிதமான வெப்பம் வெளியேறும். இது குளிருக்கு இதமாக இருக்கும் என்பதால், விஞ்ஞானி பெர்சி ஸ்பென்சர் அடிக்கடி அதன் அருகில் போய் நிற்பார். ஒரு நாள் அப்படி அவர் குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது, சட்டைப் பையில் இருந்த சாக்லேட் உருகிவிட்டது. முதலில் அதை அவர் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. பிறகு சாக்லேட் உருகும் காரணத்தை யோசித்தார். ஆராய்ச்சியில் இறங்கினார்.
உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றையும் மேக்னெட்ரானில் வைத்துப் பரிசோதனை மேற்கொண்டார். உணவுப் பொருட்கள் சூடாகி, சாப்பிடுவதற்கு வசதியாக மாறியதைக் கண்டார். உணவுப் பொருள் சூடாக்கும் கருவியை உருவாக்கும் எண்ணம் அவருக்குத் தோன்றியது. உலகப் போர் முடிவதற்குள்ளேயே நுண்ணலைகளை வைத்துப் பெரிய அளவில் ஒரு கருவியை உருவாக்கும்படி, ஸ்பென்சரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஸ்பென்சரும் அவரது உதவியாளர்களும் ஆராய்ச்சியில் இறங்கினர். உணவைச் சூடாக்குவதோடு, சமைக்கவும் உதவும் கருவியைக் கண்டுபிடிக்கும் திட்டத்தில் இறங்கினார்கள். உணவுப் பொருட்களை வைத்துப் பரிசோதனை செய்தபோது சோளம், பாப்கார்னாக மாற்றம் அடைந்தது.
முதல் மைக்ரோவேவ் பாப்கார்ன் இப்படித்தான் உருவானது. அடுத்தது முட்டையை வேக வைக்கும் முயற்சியில் இறங்கினார் ஸ்பென்சர். தேநீர் போடும் கெட்டிலில் முட்டையை வைத்து, மேக்னெட்ரானின் மீது நேரடியாக வைத்துவிட்டார். வெப்பம் அதிகரித்துக்கொண்டு சென்றது.
ஒருகட்டத்தில் வெப்பம் தாங்காமல் முட்டை வெடித்து, ஸ்பென்சரின் உதவியாளர் முகத்தில் தெறித்துவிட்டது. பிறகு முட்டையைத் துளையிட்டு அடுப்பில் வைத்தபோது, அது வெடிக்காமல் வெந்திருந்தது. இதைத் தொடர்ந்து பன்றி இறைச்சியை வைத்து சமைத்துப் பார்த்தனர். உணவுப் பொருட்கள் அனைத்தும் நன்றாக வெந்தன. இந்தக் கருவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
1945-ம் ஆண்டு மைக்ரோவேவ் அவன் ‘ரேடார்ரேஞ்ச்’ என்ற பெயரில் வெளியானது. 1947-ம் ஆண்டு மைக்ரோவேவ் அவன் விற்பனைக்கு வந்தது. அப்போது இதன் உயரம் 6 அடி, 340 கிலோ எடை, 3.5 லட்சம் ரூபாய் விலை. 1967-ம் ஆண்டு விலையும் அளவும் குறைந்த நுண்ணலை அடுப்புகள் விற்பனைக்கு வந்தன. இன்று எடை குறைந்த, அளவு குறைந்த, விலை குறைந்த நுண்ணலை அடுப்புகள் கிடைக்கின்றன.
(கண்டுபிடிப்போம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT