Last Updated : 11 Apr, 2018 10:48 AM

 

Published : 11 Apr 2018 10:48 AM
Last Updated : 11 Apr 2018 10:48 AM

பொம்மை தேவதைகள்!

 

லு

க் தெப் என்றால் குழந்தைத் தேவதைகள் என்று அர்த்தம். தாய்லாந்து வீடுகளில் இந்தப் பொம்மைகளை வைத்திருந்தால் அதிர்ஷ்டத்தையும் வளத்தையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. ஒரு நிஜ குழந்தையின் அளவிலேயே செய்யப்படும் இந்தப் பொம்மைகளுக்கு உணவு படைக்கிறார்கள்; புத்தாடை அணிவிக்கிறார்கள்; நகைகளால் அலங்கரிக்கிறார்கள். தொட்டிலில் இட்டு, தூங்க வைக்கிறார்கள். இவை பிளாஸ்டிக் பொம்மைகள் என்றாலும் உயிருள்ளவை என்று நம்பப்படுகிறது.

11chsuj_luk_thep.jpg

2016-ம் ஆண்டில் தாய் ஸ்மைல் விமான நிறுவனம் ‘லுக் தெப்’ பொம்மைகளுக்குத் தங்கள் வாடிக்கையாளர்கள் உணவும் இருக்கையும் தரலாம் என்று விளம்பரம் செய்தது. அப்போதுதான் ‘லுக் தெப்’ பொம்மைகள் உலகம் முழுவதும் புகழ்பெற்றன. விமானப் பணியாளர்கள் ‘லுக் தெப்’ பொம்மைகளை மனிதர்களைப் போலவே நடத்த வேண்டும் என்று அறிவிக்கையும் அனுப்பப்பட்டது. தாய்லாந்தில் பிரத்யேகமான ’லுக் தெப்’ மெனு அட்டைகளைக்கொண்டு உணவு தரும் உணவகங்களும் உள்ளன.

லுக் தெப் பொம்மைகளை நன்கு பார்த்துக்கொண்டால், அவை அவர்களையும் நன்கு பார்த்துக்கொள்ளும் என்பது நம்பிக்கை. சிலர் லுக் தெப் பொம்மைகளைத் தங்கள் நிறுவனங்கள், கடைகளிலும் வைத்திருக்கிறார்கள். ’லுக் தெப்’ பொம்மைகளைப் பராமரிப்பதற்காக ஆட்களையும் நியமிக்கின்றனர்.

குழந்தைகளுக்காக ஏங்கும் அம்மாக்களுக்கு லுக் தெப் பொம்மைகள் ஆறுதலைத் தருவதாக உள்ளன. பொம்மைகளை வாங்கிப் பராமரிக்கும் தாய்மார்களிடம் பொம்மை எவ்வளவு விலை என்று கேட்டால் அவர்கள் கோபப்பட்டு விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது ஓர் உயிர்.

லுக் தெப் பொம்மைகள், சிறிய அளவிலிருந்து ஒரு குழந்தையின் அளவுவரை சந்தையில் கிடைக்கின்றன. உயர் ரக பிளாஸ்டிக்கில், அசலான தலைமுடியுடன் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களுடன் கிடைக்கின்றன.

ஒரு குழந்தை நம்மைப் பார்ப்பது போலவே அச்சு அசலாக இருப்பதுதான் லுக் தெப் பொம்மைகளின் தனிச் சிறப்பு. லுக் தெப் பொம்மைகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாகத்தான் தாய்லாந்திலும் உலக அளவிலும் புழக்கத்தில் உள்ளன.

தொடர்புக்கு: sankararamasubramanian.p @thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x