Published : 07 Feb 2018 12:14 PM
Last Updated : 07 Feb 2018 12:14 PM
அடர்த்தியான காடு. கும்மிருட்டு. என்னென்னவோ விநோத சத்தங்கள் எல்லாம் கேட்கின்றன. காலுக்குக் கீழே சரக்கென்று ஏதோ ஒன்று நழுவி ஓடுகிறது. தலைக்கு மேலே விருட்டென்று ஏதோ பறந்து சென்றது போல் இல்லை? தூரத்தில் ஏதோ அசைவது போல் இல்லை? சட்டென்று இருளைக் கிழித்துக்கொண்டு ஒரு பெரிய புலி முன்னால் வந்து நிற்கிறது. அதன் இரண்டு கண்களும் மின்னுகின்றன. ஆ என்று நான் அலறுவதற்குள் அதுவும் ஆ என்று வாயைத் திறக்கிறது.
நான் ஓடத் தொடங்குகிறேன். புலி உருமியபடி என்னைத் துரத்துகிறது. மூச்சிறைக்க ஓடுகிறேன். சட்டென்று பாதை முடிவடைகிறது. ஒரு பக்கம் புலி, இன்னொரு பக்கம் பாதாளம். அப்போது புலி திடீரென்று என்மீது பாய்கிறது. ஆஆஆ...
பயத்தில் வீறிட்டு அலறியபடி படுக்கையிலிருந்து எழுந்துகொள்கிறேன். முகம் முழுக்க வியர்வை. கைகள் இன்னமும் நடுங்கிக்கொண்டிருக்கின்றன. சுற்றிலும் திரும்பிப் பார்க்கிறேன். எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் நான் இதுவரை கண்டது கனவா?
அநேகமாக நம் எல்லோருக்கும் இப்படிப்பட்ட கனவுகள் வந்திருக்கும். புலிக்குப் பதில் சிங்கம் துரத்தலாம். அல்லது சிறுத்தை அல்லது பாம்பு. திடீரென்று காட்டில் அல்லது பாலைவனத்தில் அல்லது கடலுக்குள் சிக்கித் தவிப்போம். உதவிக்கு யாரும் இருக்க மாட்டார்கள். பயந்து அலறுவோம்.
எல்லாக் கனவுகளும் பயங்கரமானவை அல்ல. வகுப்பிலேயே நீதான் முதல் என்று ஆசிரியர் நம்மைப் பாராட்டுவார், வகுப்பறையே கைதட்டும். கணக்கில் நீங்கள் நூற்றுக்கு நூறு வாங்குவீர்கள். உங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர் உங்கள் வீட்டுக்கே வந்து உங்களுக்குக் கை கொடுப்பார். தோட்டம் முழுக்க அழகாக ஆப்பிள்கள் தொங்கிக்கொண்டிருக்கும். திடீரென்று நீங்கள் பறக்க ஆரம்பிப்பீர்கள். ஆஹா பிரமாதம் என்று இரண்டு கைகளையும் விரித்தபடி நீங்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொன்றுக்குப் பறந்துகொண்டிருக்கும்போது சட்டென்று கனவு முடிந்துவிடும்.
நல்ல கனவு, கெட்ட கனவு. பயங்கர கனவு, பிரமாதமான கனவு. பிடித்த கனவு, பிடிக்காத கனவு. மீண்டும் எப்போது வரும் என்று ஏங்க வைக்கும் கனவு, இனி வரவே கூடாது என்று கண்களைப் பொத்திக்கொள்ள வைக்கும் கனவு. இப்படிப் பல கனவுகள் நமக்கு தோன்றிகொண்டே இருக்கின்றன. காணும்போது எல்லாமே நிஜம் போலவே இருக்கின்றன.
நிச்சயம் என்னால் ஒரு பறவையைப் போல் பறக்க முடியாது. அதனால் அது கனவுதான் என்று உறுதியாகச் சொல்லிவிடமுடியும். ஆனால் காட்டில் நான் மாட்டிக்கொள்வதற்கு வழி இருக்கிறதே. அப்படி ஒருவேளை மாட்டிக்கொண்டால் புலி துரத்தத்தானே செய்யும்? அப்போது நான் ஓடத்தானே செய்வேன்? என்னைத் துரத்தியது நிஜமான புலியாகவும் இருக்கமுடியும் அல்லவா? அதே போல் ஆசிரியர் என்னைப் பாராட்டுவதும் வகுப்பறை கை தட்டுவதும்கூட நடக்கக்கூடியதுதான் இல்லையா? நடக்க முடியாததைக் கண்டால் கனவு என்று சொல்லிவிடலாம். அன்றாடம் நடக்கும் விஷயங்களும் கனவில் வந்தால் குழப்பம் ஏற்படுவது இயல்புதான், இல்லையா? நான் சற்றுமுன் கண்டது கனவா, நிஜமா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
நம்மைக் குழப்பும் திறன் கனவுகளுக்கு உண்டு என்பதை நாம் முதலில் ஒப்புக்கொள்ளவேண்டும். குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும்கூடப் பல நேரங்களில் நாம் கண்டது கனவா, நிஜமா என்று ஒரு கணம் திகைத்துவிடுகிறார்கள். காணும்வரை எல்லாமே நிஜம்போலதான் இருக்கிறது. புலி நிஜம். அதன் கண்கள் நிஜம். இருட்டு நிஜம். நான் ஓடியது நிஜம். ஆ என்று நான் அலறியதுகூட நிஜம்தான். பிறகு எப்படி இதெல்லாம் கனவாகும்?
எது கனவு என்பதைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது. என்ன நடந்தது என்று நிதானமாக யோசித்துப் பாருங்கள். புலி, இருள், கண்கள் எல்லாவற்றையும் ஒரு நிமிடம் மறந்துவிடுங்கள். நீங்கள் காட்டுக்கு எப்படிப் போனீர்கள்? உங்களுடன் யாருமே வரவில்லையா? எங்கே இருக்கும் காடு அது?
எத்தனை மணி நேரம் அல்லது எத்தனை நாட்கள் பயணம் செய்து அந்தக் காட்டுக்குப் போனீர்கள்? ரயில் பிடித்துப் போனீர்களா? பேருந்திலா? பள்ளி விடுமுறையின்போது போனீர்களா அல்லது விடுப்பு எடுத்துக்கொண்டு போனீர்களா? ஊருக்குப் போனால் கையில் பை எல்லாம் கொண்டு போகவேண்டும் அல்லவா? உங்களிடம் பை இருந்ததா? அதில் என்னென்ன எடுத்துப் போனீர்கள் என்று சொல்ல முடியுமா?
எத்தனை யோசித்தும் காட்டுக்கு எப்படிப் போனோம் என்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. ஆசிரியர் உங்களை ஏன் பாராட்டினார்? பழங்கள் நிறைந்த தோட்டத்துக்கு எப்படிப் போனீர்கள்? அந்த விளையாட்டு வீரருக்கு உங்கள் வீடு எப்படித் தெரியும்? யார் முகவரி கொடுத்தார்கள்? எதற்குமே உங்களால் விடை சொல்ல முடியாது. இப்படி எத்தனை யோசித்தும் ஒரு விஷயம் ஏன் நடந்தது, எப்படி நடந்தது என்பதை உங்களால் சொல்ல முடியவில்லை என்றால் அது கனவு. அடுத்தமுறை புலி துரத்தும்போது இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT