

முல்லைக் காடு முழுவதையும் சிங்கராஜாவால் மட்டுமே கவனிக்க முடியவில்லை. எனவே, தனக்குத் துணையாக அமைச்சர் ஒருவரை நியமிக்கலாம் என்று சிங்கராஜா எண்ணியது.
‘தகுதியான அமைச்சரை எப்படித் தேர்ந்தெடுப்பது?’ என்று யோசித்தது சிங்கராஜா. ஓர் அமைச்சருக்கு முக்கியமான தகுதி நேர்மையும் அறிவும்தாம்.
முல்லைக் காட்டை நிர்வகிக்க அமைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கப் போவதாகவும், அமைச்சர் பதவிக்கு யார் வேண்டுமென்றாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் சிங்கராஜா அறிவித்தது.
அதிகாரம் மிக்க அமைச்சர் பதவியின் மீது யாருக்குத்தான் ஆசை வராது? எனவே முல்லைக் காட்டிலுள்ள பல விலங்குகளும் தங்கள் விண்ணப்பத்தை சிங்கராஜாவின் குகைக்குக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுச் சென்றன.
தன்னிடம் வந்த விண்ணப்பம் ஒவ்வொன்றையும் சிங்கராஜா சரிபார்த்தது.
புலி, சிறுத்தை, கரடி போன்ற பெரிய விலங்குகள் முதல், குரங்கு, நரி, முயல் போன்ற சிறிய விலங்குகள் வரை விண்ணப்பத்தைக் கொடுத்திருந்தன. ‘யாரை எப்படித் தேர்ந்தெடுப்பது?’ என்று சிங்கராஜா யோசனை செய்வதை, சிங்கராணியும் கவனித்துக்கொண்டிருந்தது.
“அரசே, அமைச்சர் பதவிக்கான விண்ணப்பங்கள் நிறைய வந்திருப்பது போலத் தெரிகின்றதே. அமைச்சராக யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டது சிங்கராணி.
“அரசியே, அறிவைப் பொறுத்தவரை பலர் தகுதியுடையவராகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை எப்படித் தேர்ந்தெடுப்பது என்று குழப்பமாக இருக்கிறது” என்றது சிங்கராஜா.
சிறிது நேரம் யோசித்த சிங்கராணி, “அரசே, எந்தக் குழப்பமும் வேண்டாம். அமைச்சர் பதவிக்கு விண்ணப்பித்த அனைவரையும் நாளை காலையில் நம் குகை வாசலுக்கு வரச் சொல்லுங்கள். அவர்களிடம் ‘இன்று நான் எப்படி இருக்கிறேன்?’ என்று மட்டும் கேளுங்கள். அமைச்சரை எளிதாகத் தேர்ந்தெடுத்து விடலாம்” என்றது சிங்கராணி.
சிங்கராஜாவுக்குப் புரியவில்லை. இருந்தாலும் சிங்கராணி சொன்னபடி விண்ணப்பித்த விலங்குகளைக் காலையில் தன் குகைக்கு வர உத்தரவிட்டது.
அமைச்சர் பதவிக்காக விண்ணப்பித்த விலங்குகள் மறுநாள் அதிகாலையிலேயே சிங்கராஜாவின் குகை வாசலில் வரிசையாக நின்றிருந்தன.
குகைக்குள்ளிருந்து வெளியே வந்த சிங்கராஜா, “இன்று நான் எப்படி இருக்கிறேன்?” என்று ஒவ்வொரு விலங்கிடமும் கேட்டது.
சிங்கராஜாவின் முகத்தைப் பார்த்த புலி, “அரசே, இன்று மிக மிக அழகாக இருக்கிறீர்கள்” என்றது.
அடுத்து வந்த சிறுத்தை, “அரசே, இன்று நீங்கள் மிகவும் கம்பீரமாக இருக்கிறீர்கள்” என்றது.
அடுத்து வந்த கரடி, “அரசே, உங்கள் அழகைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? அனைவரையும் வசீகரிக்கும்படி இருக்கிறீர்கள்” என்றது.
இவ்வாறு வரிசையாக வந்த ஒவ்வொரு விலங்கும் சிங்கராஜாவைப் புகழ்ந்து சென்றது.
அடுத்து நரி, சிங்கராஜாவின் முன்னே வந்து நின்றது. அது சிங்கராஜாவின் முகத்தைப் பார்த்துச் சிரித்துவிட்டு, “அரசே, உங்களுக்கு என்ன ஆயிற்று? இன்று ஏன் கோமாளி வேஷம் போட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டது.
நரி சொன்னதைக் கேட்டு சிங்கராஜாவுக்கு ஒருபுறம் கோபம் வந்தது. மறுபுறம் குழப்பம் வந்தது.
“நரியாரே, என்ன சொல்கிறீர்? திடீரென்று உமக்கு எப்படி இந்தத் துணிச்சல் வந்தது? நேற்று எப்படி இருந்தேனோ, அப்படித்தான் இன்றும் இருக்கிறேன். கோமாளி வேஷம் போட்டிருப்பதாக ஏன் சொல்கிறீர்?” என்று கோபத்தோடு கேட்டது சிங்கராஜா.
“அரசே, கோபம் கொள்ள வேண்டாம். நான் உண்மையைத்தான் சொல்கிறேன். நேற்று மாலையில் எவ்வளவு கம்பீரமாக இருந்தீர்கள். இன்று ஏன் உங்கள் மூக்கின் மீது கரி இருக்கிறது?” என்று கேட்டது நரி.
“என் மூக்கின் மீது கரியாக இருக்கிறதா? என்ன நரியாரே உளறுகிறீர்? உமக்கு முன்னால் எத்தனை பேர் வந்து போனார்கள். யாரும் என் மூக்கின் மீது கரி படிந்து இருப்பதைச் சொல்லவில்லையே. நீர் எப்படிச் சொல்கிறீர்?” என்று கடுமையான கோபத்துடன் சிங்கராஜா கேட்டது.
“அரசே, நான் பொய் சொல்லவில்லை. வேண்டுமானால் இதோ தங்கள் அருகில் அமர்ந்திருக்கிறாரே சிங்கராணி. அவரிடமே கேட்டுப் பாருங்கள்” என்று பணிவாகச் சொன்னது நரி.
நரி சொன்னதைக் கேட்ட சிங்கராஜா, சிங்கராணியைத் திரும்பிப் பார்த்தது.
“நரி சொல்வது உண்மைதான் அரசே. இதோ இந்தப் பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் உங்கள் முகத்தைப் பாருங்கள்” என்று நீர் நிரம்பிய ஒரு மண் பாத்திரத்தை எடுத்து வந்து காட்டியது சிங்கராணி.
பாத்திரத்தினுள் தெரிந்த தன்பிம்பத்தை உற்றுப் பார்த்த சிங்கராஜா, தன் மூக்கின் மீதுகரியாக இருப்பதை அறிந்து கொண்டது.
அது சிங்கராணியைக் கோபத்துடன் பார்த்து, “என் மூக்கில் எப்படிக் கரி வந்தது?” என்று கேட்டது.
“அரசே, என்னை மன்னித்துவிடுங்கள். நான்தான் நீங்கள் தூங்கி விழிக்கும் முன்பே இப்படிச் செய்தேன். உங்கள் மூக்கில் கரி இருப்பதைப் பார்த்த பிறகும் மற்ற விலங்குகள் எல்லாம் உங்களுக்குப் பயந்து நீங்கள் அழகாக இருப்பதாகப் பொய் கூறின. ஆனால், நரி மட்டும்தான் பயமின்றி நேர்மையாக உண்மையைச் சொன்னது.
ஒரு அமைச்சருக்கு உண்மையும் நேர்மையும் துணிவும்தான் முக்கியம் என்று நீங்கள்தானே சொன்னீர்கள்! இப்போது யாரை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கலாம் என்று நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்” என்றது சிங்கராணி.
சிங்கராணி சொன்னதைக் கேட்ட மற்ற விலங்குகள் எல்லாம் வெட்கத்தில் தலையைத் தாழ்த்திக்கொண்டன. சிங்கராணி சொன்னதில் இருந்த நியாயத்தை சிங்கராஜாவும் உணர்ந்துகொண்டது.
“அன்பர்களே, இன்று முதல் நரியை நம் முல்லைக்காட்டின் அமைச்சராக அறிவிக்கிறேன்” என்றது சிங்கராஜா.