Published : 22 Nov 2017 11:54 AM
Last Updated : 22 Nov 2017 11:54 AM
நா
ம் எல்லோருமே வேற்றுகிரகவாசியைப் பார்த்திருக்கிறோம். கோழி முட்டைபோல் வெள்ளை நிறத்தில் வழுவழுப்பான தலை. சில நேரம், அதில் ஆன்டெனாபோல் இரண்டு கம்பிகள் முளைத்திருக்கும். கண்கள் கறுப்பாக, பெரிதாக இருக்கும். நீளமான கை விரல்கள். புரியாத மொழியில் கிய்யா முய்யா என்று ஏதோ பேசும். கிட்டத்தட்ட நம்மைப்போலதான் இருக்கும். ஆனால் நாமல்ல. சரி, இந்த உருவம் எந்த கிரகத்தில் வாழ்கிறது? யார் அங்கே பறந்துபோய் இந்தப் படத்தை எடுத்துவந்தது? அதை நேரில் பார்த்தவர்கள் யாராவது இருக்கிறார்களா?
ஓ, நான் பார்த்தேன். எங்கள் வீட்டுக்கு அருகில் ஒருநாள் பறந்துவந்தது என்று சிலர் சொல்கிறார்கள். ஆமாம், பறக்கும் தட்டுமீது ஜாலியாக உட்கார்ந்து அது என்னைக் கடந்து போனது, என்னைப் பார்த்து ஹாய் சொன்னது என்கிறார்கள் வேறு சிலர். பாவம், எதுவும் சாப்பிடவில்லையோ என்னவோ, ஒல்லியாக இருந்தது என்று ரொம்ப நாள் பழகியதுபோல் சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஒருநாள் நான் கார் ஓட்டிக்கொண்டிருந்தேன். முட்டைபோல் ஓர் உருவம் எங்கள் அருகில் வந்தது. சட்டென்று கார் நின்றுவிட்டது. என்ன முயன்றும் ஓடவில்லை. அந்த உருவம் கடந்துபோன பிறகு சட்டென்று கார் ஓட ஆரம்பித்துவிட்டது. நிச்சயம் நான் பார்த்தது வேற்றுகிரகவாசிதான் என்கிறார் அமெரிக்காவில் ஒருவர்.
இன்னும் சிலர் அந்தப் பெயரைச் சொன்னாலே அலறுகிறார்கள். ஐயோ வேற்றுகிரகவாசியா, அதைப் பார்க்காமல் இருக்கும்வரை நமக்கு நல்லது. பார்த்தால் தீர்ந்தது கதை. என் நோட்டுப் புத்தகத்தை, பேனாவை, கலர் பென்சிலை அது எடுத்துக்கொண்டுவிடும். என்னையும் வீட்டில் இருப்பவர்களையும் துரத்திவிட்டு, இது என் வீடு என்று சொல்லும். வீடு என்ன வீடு, நாட்டையே அது எடுத்துக்கொள்ளும். இல்லை இல்லை, இந்தப் பூமியை அது அப்படியே எடுத்துச் சாப்பிட்டுவிடும். வேற்றுகிரகவாசி ரொம்பக் கெட்டது. யாரும் அதனுடன் சேரவேண்டாம்.
பார்க்கவில்லை, படமே எடுத்து வைத்திருக்கிறேன் இதோ பாருங்கள் என்று சிலர் ஆதாரத்தைக் காட்டுகிறார்கள். படம் என்ன படம், வீடியோவே இருக்கிறது போடட்டுமா என்கிறார்கள் வேறு சிலர். எகிப்தில் உள்ள பிரமிடுகளை யார் கட்டியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? மனிதர்களால் அப்படி ஓர் அற்புதத்தை யோசிக்கக்கூட முடியாது. நிச்சயம் வேற்றுகிரகவாசிகளின் வேலைதான் அது. இப்படிச் சொல்வதற்கும் சிலர் இருக்கிறார்கள்.
சரி, இவர்களை எல்லாம் விட்டுவிடுவோம். விண்வெளி, செவ்வாய் கிரகம், நிலா, நட்சத்திரம் என்று ஆராய்ச்சி செய்யும் பெரிய விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? வேற்றுகிரகவாசிகள் உண்மையில் இருக்கிறார்களா, இல்லையா? ஆம், இல்லை என்று பதில் சொல்வதற்குப் பதில் அவர்கள் ஒரு கதையைச் சொல்கிறார்கள்.
நீங்கள் பரிட்சை அறையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். என்ன கேள்வி வருமோ என்று பயத்துடன் காத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆசிரியர் உள்ளே வருகிறார். வரிசையாக எல்லோருக்கும் கேள்வித்தாளைக் கொடுக்கிறார். உங்கள் முறைவருகிறது. பதற்றத்துடன் கேள்வித்தாளை வாங்கி அவசர அவசரமாகப் பார்க்கிறீர்கள். ஐயோ! நீங்கள் பயந்ததுதான் நடந்திருக்கிறது. ஏகப்பட்ட கஷ்டமான கேள்விகள். படிக்காத பாடங்களில் இருந்தும் புரியாத பாடங்களில் இருந்தும் மட்டுமே பெரும்பாலான கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். என்ன செய்வது? வேகமாக அடுத்த பக்கத்தைப் புரட்டிப் பார்க்கிறீர்கள். ஆச்சரியம்! அதிசயம்!
கேள்வித்தாளோடு சேர்த்து விடைத்தாளையும் கொடுத்துவிட்டார்கள். ஆஹா, அற்புதம்! ஒன்றுவிடாமல் எல்லாக் கேள்விகளுக்கும் விடை இருக்கிறது. கடகடவென்று எழுத ஆரம்பிக்கிறீர்கள். முதல் கேள்வி, இரண்டாவது கேள்வி, மூன்றாவது கேள்வி. எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். திடீரென்று எழுதுவதை நிறுத்திவிட்டு சுற்றிலும் உள்ளவர்களைப் பார்க்கிறீர்கள். எல்லோரும் தலையைக் கவிழ்த்தியபடி மும்முரமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் என்னைப் போலவே வினாத்தாள் கிடைத்துவிட்டதா?
கேட்டுப் பார்க்கலாம். அதெப்படி வினாத்தாள் தருவார்கள், உனக்கு அப்படியா கொடுத்திருக்கிறார்கள் என்று பதிலுக்குக் கேட்டால் என்ன செய்வது? ஆம், கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் ஆசிரியரிடம் என்னை அவர்கள் மாட்டிவிடலாம் அல்லவா? எதற்கு வம்பு? அமைதியாக என் விடைகளை எழுதி முடிப்பதுதான் எனக்கு நல்லது. அநேகமாக, எனக்கு மட்டும்தான் இந்த அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அதை ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்?
வேற்றுகிரகவாசி இருக்கிறதா என்னும் கேள்விக்கான விடையும் இதுதான். நான் மனிதன். நான் வாழ்வதற்குப் பூமி என்னும் அற்புதமான இடம் கிடைத்திருக்கிறது. விலங்கு, பறவை, பூச்சி, மீன், செடி, மரம் என்று பலவிதமான உயிர்கள் என்னுடன் இணைந்து பூமியில் வாழ்கின்றன. இந்த வாய்ப்பு மற்ற கிரகங்களில் உள்ள வேறு உயிர்களுக்குக் கிடைத்திருக்குமா என்று எனக்குத் தெரியாது. கிடைத்திருக்கலாம், கிடைக்காமலும் இருக்கலாம். அவர்களே வந்து சொன்னால்தான் தெரியும்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்த விஞ்ஞானிகளும் நம்மைப் போன்றவர்கள்தாம். ஒரு கேள்வி கேட்டால், அதற்குப் பதில் தெரியவில்லை என்றால் எனக்குத் தெரியாது என்று சொல்லவேண்டியதுதானே? எதற்காக ஏதேதோ கதை சொல்லவேண்டும்? இப்படி யோசித்துப் பாருங்கள். பாவம் அந்த மாணவன் என்று விடைத்தாளைக் கொடுத்து உதவிய அந்த நல்ல உள்ளம் ஏன் ஒரு வேற்றுகிரகவாசியாக இருக்கக் கூடாது?
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT