Published : 29 Nov 2017 10:51 AM
Last Updated : 29 Nov 2017 10:51 AM
சா
ளுக்கிய மன்னர்கள் கி.பி. 6-ம் நூற்றாண்டிலிருந்து 12-ம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவையும் மத்திய இந்தியாவையும் ஆண்டுவந்தனர். சாளுக்கிய மன்னர்களில் தலை சிறந்த அரசராக இரண்டாம் புலிகேசி விளங்கினார். இவர் வாதாபிக்கு அருகில் உள்ள அய்கோல் நகரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்துவந்தார். பல நாட்டு மன்னர்களுடன் போரிட்டு, தனது ஆட்சி எல்லையை விரிவுபடுத்தினார். கட்டிடக் கலை மீது அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார்.
சாளுக்கிய மன்னர்கள் அய்ஹோல், வாதாபி போன்ற நகரங்களைத் தலைநகராகக் கொண்டு ஆண்டாலும், அருகில் உள்ள பட்டடக்கல் நகரை மிகப் புனிதமாகக் கருதினர். மன்னர்கள் முடி சூட்டிக்கொள்வதற்காகவே இந்த நகரம் உண்டாக்கப்பட்டிருந்தது.
வட கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள இந்த நகரம் மிகச் சிறந்த கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. திராவிடக் கட்டிடக் கலையையும், வட இந்தியக் கட்டிடக் கலையையும் சேர்த்து இங்கு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.
பட்டடக்கல் யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வளாகத்தில் 8 கோயில்களும் ஊருக்கு வெளியே 2 கோயில்களும் உள்ளன. இதில் ஒன்று மட்டும் ஜைனக் கோயில். மற்ற ஒன்பதும் சிவன் கோயில்கள். மன்னர்கள் பட்டம் சூட்டிக்கொள்வதற்காக இந்த நகரம் அமைக்கப்பட்டதால் செல்வச் செழிப்பு மிக்க தலைநகராகக் கட்டப்பட்டது.
கோயில்களின் வெளித் தோற்றம் மிக அழகாகக் கட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கல்லும் முப்பரிமாணத் தோற்றத்தில், மிக நுட்பமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. கோயில் தூண்களில் உள்ள சிற்பங்களும் சுற்றுச் சுவர்களில் உள்ள சிற்பங்களும் கலைநயம் மிக்கவையாகக் காட்சியளிக்கின்றன.
மலப்பிரபா ஆற்றங்கரையில் அமைந்துள்ள பட்டடக்கல்லில் இருந்து 10 கி.மீ. தொலைவில் ஐஹோல் என்ற இன்னொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் இருக்கிறது. இது சாளுக்கிய மன்னர்களின் முதல் தலைநகரமாக இருந்தது. இங்கு ஏராளமான கல்வெட்டுகள் இருக்கின்றன. இவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளும் பல்லவர்களுடன் இருந்த மோதல்களும் ஆட்சி முறையும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஐஹோலில் பலவிதமான கட்டிடக் கலைகளும் பரிசோதனை முயற்சியில் செய்து பார்க்கப்பட்டன. இங்குள்ள சிவன், துர்கை சிலைகள் மிக அழகாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.
பட்டடக்கல்லில் இருந்து 22 கி.மீ. தூரத்தில் இருக்கிறது வாதாபி. இதுவும் சில காலம் சாளுக்கியர்களின் தலைநகரமாக இருந்தது. குடைவரைக் கோயில்களுக்கு வாதாபி புகழ்பெற்றது. அகத்தியர் ஏரியைச் சுற்றியுள்ள குன்றுகளில் கி.பி. 6-ம் நூற்றாண்டுக்கும் 8-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிவனுக்காக உருவாக்கப்பட்ட முதல் குடைவரை கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே விஷ்ணு, புத்தர், கணபதி சிலைகளும் வடிக்கப்பட்டிருக்கின்றன. வாதாபி குன்றிலிருந்து பார்க்கும்போது பச்சை நிற ஏரியும் சுற்றியுள்ள கிராமமும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். முதலாம் நரசிம்மவர்ம பல்லவர் இரண்டாம் புலிகேசியை வாதாபியில் அழித்ததால், வாதாபிகொண்டான் என்ற பெயரைப் பெற்றார்.
சாளுக்கிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் மராட்டியர்களும் இஸ்லாமியர்களும் ஆங்கிலேயர்களும் படையெடுத்த காரணத்தால் பல சிலைகள் சேதமடைந்திருக்கின்றன. ஆனாலும் சாளுக்கியர்களின் கட்டிடக்கலையின் சிறப்பை அவை எந்தவிதத்திலும் குறைத்துவிடவில்லை. அய்ஹோலும் வாதாபியும் கட்டிடக் கலையில் சிறந்து விளங்கினாலும் பட்டடக்கல் நகர் இவை இரண்டை விடவும் பலவிதங்களில் சிறப்புப் பெற்று விளங்குகிறது.
தொடர்புக்கு: mangai.teach@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT