Published : 15 Nov 2017 11:00 AM
Last Updated : 15 Nov 2017 11:00 AM

வியப்பூட்டும் இந்தியா: மிகப் பெரிய கொல்கத்தா ஆலமரம்!

ஆலமரம்தான் இந்தியாவின் தேசிய மரம். நம் நாட்டில் உள்ள ஆலமரங்களில் மிகப் பெரியது கொல்கத்தா ஆச்சார்ய ஜகதீஷ் சந்திரபோஸ் இந்தியத் தாவரவியல் தோட்டத்தில் இருக்கிறது. 270 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்தத் தோட்டம், கி.பி 1786-ல் கிழக்கிந்திய கம்பெனியில் வேலை செய்த கர்னல் அலெக்சாண்டர் கிட் என்பவரால் உருவாக்கப்பட்டது. சுதந்திரம் அடையும்வரை ‘கம்பெனி தோட்டம்’ என்றே அழைத்துவந்தனர். சுதந்திரத்துக்குப் பிறகே இந்தியத் தாவரவியல் பூங்காவாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

12,000 வகை தாவரங்கள் இங்கே உள்ளன. ஐந்து கண்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய தாவரங்களும் இருக்கின்றன. விதவிதமான மூங்கில் மரங்கள், பனை மரங்கள், ஆர்கிட் பூ வகைகள், மிகப் பெரிய இலைகளைக் கொண்ட விக்டோரியா அமேசோனிகா அல்லி போன்றவற்றை இங்கே மட்டும்தான் பார்க்கமுடியும். இவ்வளவு தாவரங்கள் இங்கே இருந்தாலும் மக்களைப் பெரிதாக ஈர்ப்பது பெரிய ஆலமரம்தான்!

இந்த ஆலமரம் 18,918 ச.மீ. பரப்பளவுக்குப் பரந்து விரிந்துள்ளது! மிக உயரமான கிளை 25 மீட்டர் நீளமானது. ஆசியாவிலேயே இது மிகப் பெரிய மரம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 3800க்கும் மேற்பட்ட விழுதுகள் இந்த மரத்தைத் தாங்கி நிற்கின்றன. இந்த மரம் சூரிய வெளிச்சம் கிடைக்கும் கிழக்கு திசையிலேயே வளர்ந்துகொண்டு செல்கிறது. தூரத்திலிருந்து பார்க்கும்போது அடர்ந்த காடுபோல் தோற்றம் அளிக்கிறது. அருகே சென்று பார்க்கும் போதுதான் இது ஒரே ஒரு மரமாக இருப்பது தெரிகிறது. இந்த மரத்தை பார்ப்பதற்காகவே உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகின்றனர்.

ஆலமரத்தின் வயது சுமார் 250 வருடங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பயணிகள் தங்களுடைய பயணக் குறிப்புகளில் இந்த மரத்தை பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

1864, 1867-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்களால் இந்த மரத்தின் நடுப் பகுதி சேதமடைந்தது. 51 அடி சுற்றளவில் இருந்த இந்த மரத்தின் அடிப் பகுதியை 1925-ம் ஆண்டு எடுத்துவிட்டார்கள். நடுமரம் இல்லாமல் விழுதுகளால்தான் இந்த மரம் நிற்கிறது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் தனது விழுதுகளை இன்னும் பெருக்கிக்கொண்டே இருக்கிறது. அதனால் இதன் சுற்றளவும் பரப்பளவும் அதிகமாகிக்கொண்டே போகிறது. மரத்தைச் சுற்றி பார்ப்பதற்காக 330 மீட்டர் சுற்றளவில் பாதை போடப்பட்டுள்ளது. மரம் வளர்ந்து கொண்டே இருப்பதால் இதை ‘நடமாடும் மரம்’ என்று அழைக்கிறார்கள். பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இதன் நிழலில் அமர்ந்து இளைப்பாறலாம் என்றால் அதன் பரப்பளவை உங்களால் ஊகிக்க முடிகிறதா!

ஆலமரத்தைப் பராமரிப்பதற்கென்று தாவரவியல் ஆராய்ச்சியாளர்களும் ஊழியர்களும் உள்ளனர். மரத்தில் பூஞ்சையோ, கரையானோ வராமல் உன்னிப்பாகப் பாதுகாக்கின்றனர். மரத்திலிருந்து விழுதுகள் கீழ்நோக்கி இறங்கும்போது, நீண்ட உலோகக் குழாய்களுக்குள் விடுகிறார்கள். அந்தக் குழாய்கள் பூமிவரை செல்கின்றன. பூமியில் இந்த விழுதுகள் ஊன்றியவுடன் உலோகக் குழாய்களை அகற்றி விடுகின்றனர். மிகக் குறுகிய காலத்தில் விழுதுகள் பூமியில் ஊன்றி, வலுவாக மாறிவிடுகின்றன.

உலகிலேயே மிக அகண்ட மரம் என்ற புகழ் இந்த ஆலமரத்துக்கு உண்டு. 2005-ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்திலும் இந்த மரம் இடம் பெற்றுவிட்டது.

தொடர்புக்கு: mangai.teach@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x