Published : 01 Nov 2017 10:57 AM
Last Updated : 01 Nov 2017 10:57 AM
ஒ
ரு காலத்தில்அமெரிக்காவில் ஓநாயை வெறுப்பவர்கள் அதிகம் பேர் இருந்தனர். தினமும் எழுந்து பல் துலக்குவதைப்போல் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கண்ணில் படும் ஓநாய்களை எல்லாம் சுட்டுத் தள்ளுவார்கள். கண்ணில் எதுவும் படவில்லை என்றால் தேடிப் பிடித்து வேட்டையாடுவார்கள். இன்று நீ எத்தனை ஓநாயைக் கொன்றாய், நான் முப்பது என்று கதை பேசிக்கொண்டே தேநீர் அருந்துவார்கள். கொன்ற ஓநாய்களை வரிசையாகப் படுக்க வைத்து அருகில் நின்று படம் எடுத்துக்கொள்வதில் அவர்களுக்கு அத்தனை பெருமிதம்.
அதற்கொரு காரணத்தையும் சொன்னார்கள் இந்த வேட்டைக்காரர்கள். ஓநாய் நம்முடைய முதன்மையான எதிரி. அது நாம் வளர்க்கும் ஆடு, பன்றி எல்லாவற்றையும் திருட்டுத்தனமாக வந்து சாப்பிட்டுவிடுகிறது. இந்தப் பொல்லாத ஓநாய்க் கூட்டம் இருக்கும்வரை நமக்கு உணவு கிடைக்கப் போவதில்லை. அவ்வளவு ஏன், நம் குதிரைகளைக்கூட ஓநாய்கள் கொன்றுவிடுகின்றன. மொத்தத்தில் நாம் வாழ்வையே ஓநாய்கள் அழித்துவிடுகின்றன. ஒன்று நாம் இருக்கவேண்டும் அல்லது ஓநாய்கள். இப்போது சொல்லுங்கள், ஓநாய்களை வேட்டையாடுவது தவறா?
சேச்சே, இல்லை. இவ்வளவு கஷ்டப்படுத்தும் ஓநாய்களை வேட்டையாடுவது தப்பேயில்லை என்றது அமெரிக்கா. பாவம் வேட்டைக்காரர்கள் நமக்காகத்தான் ஓநாய்களுடன் போராடுகிறார்கள். அவர்கள் இல்லாவிட்டால் நாம் எல்லோரும் பட்டினி கிடக்கவேண்டியதுதான். ஒநாய்கள் இருந்தால் என்ன, ஒழிந்தால்தான் என்ன. அதன் பல்லும் முழியும் பார்க்கும்போதே உடல் நடுங்குகிறது. வாயைத் திறந்தால்? அப்பப்பா! ஒநாயின் ஊளைச்சத்ததைக் கேட்டுப் பயப்படாதவர்கள் யாராவது இருக்க முடியுமா? அதனால் ஆரவாரத்துடன் வேட்டைக்காரர்களை ஆதரித்தது அமெரிக்கா.
எத்தனை காலத்துக்குத் தெரியுமா? கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு. 1950-ம் ஆண்டு வாக்கில் ஓநாய்கள் கிட்டத்தட்ட முழுவதுமாக அழியும் நிலைக்கு வந்துவிட்டன. இன்று மொத்தம் இரண்டு வகைகள்தான் எஞ்சி இருக்கின்றன. வெள்ளையும் கறுப்பும் கலந்த வெண் ஓநாய், சிவப்பு நிறச் செந்நாய். இத்தனை பெரிய அழிவை ஏற்படுத்திய பிறகுதான் ஒரு முக்கியமான உண்மை தெரியவந்தது. வேட்டைக்காரர்கள் சொன்னது தவறு.
ஓநாய்கள் மனிதர்கள் வாழும் இடத்துக்கு வந்து ஒருவரையும் தொந்தரவு செய்யவில்லை. மாறாக, வைரம் தேடுகிறேன், வெள்ளைப்பூண்டு தேடுகிறேன், எண்ணெய் தோண்டுகிறேன் என்று சொல்லி காடு, மலை என்று ஓரிடம் கூடப் பாக்கியில்லாமல் மனிதர்கள் எல்லா இடங்களிலும் நுழைந்து அழிக்க ஆரம்பித்தார்கள். ஓநாய் மனிதர்களிடம் இருந்து ஒதுங்கி தன் பாட்டுக்குச் சமர்த்தாகக் காட்டில் ஓர் ஓரத்தில் வசித்துக்கொண்டிருந்தது.
எல்லா விலங்குகளையும்போல் அதுவும் உணவுக்காக வேட்டையாடியது. பல நேரங்களில் காட்டெருமை போன்ற பெரிய விலங்குகள் அகப்படும். தனியாகச் சமாளிக்க முடியாது என்பதால் கூட்டமாக வேட்டையாடும். இரவு நேரங்களில் தலையை உயர்த்தி நிலவைப் பார்த்து ஊஊ என்று ஊளையிடும். பிறகு தூங்கிவிடும். அவ்வளவுதான். வேறு எதுவும் அதற்குத் தேவைப்படவில்லை.
இதுதான் ஓநாயின் உலகம். மனிதர்களுக்கும் இப்படியோர் உலகம் இருக்கவேண்டும் என்று ஓநாய் நினைத்துக்கொண்டது. எப்போதாவது வழியில் மனிதர்களைப் பார்க்க வேண்டியிருந்தால்கூட தலையைக் குனிந்துகொண்டு அது பாட்டுக்குப் போய்விடும். திடீரென்று கால்நடைகளை ஓட்டிக்கொண்டு மனிதர்கள் காட்டுக்குள் வந்தபோது ஓநாய் திகைத்துவிட்டது. இவர்கள் ஏன் என் இடத்துக்கு வருகிறார்கள்? ஏன் என் இருப்பிடத்தில் அவர்கள் தங்கள் வீடுகளைக் கட்டிக்கொள்கிறார்கள்? இவர்கள் ஏன் ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள்? நான் வேட்டையாடவேண்டிய மிருகங்களை ஏன் இவர்கள் வேட்டையாடுகிறார்கள்? இந்த மனிதர்களுக்கு என்னதான் வேண்டும்? முழுக் காட்டையும் அவர்கள் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்களா? எனில், நான் இனி எதைச் சாப்பிடுவேன்?
ஒரே வழிதான் இருந்தது. தன் பார்வையில் அகப்படும் ஆடுகளையும் பன்றிகளையும் ஓநாய் பிடித்துச் சாப்பிட ஆரம்பித்தது. இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. மனிதர்களின் உணவை ஓநாய் பறிக்கவில்லை. ஓநாயின் உணவைத்தான் மனிதர்கள் பறித்துக்கொண்டார்கள். பறித்ததோடு நின்றார்களா? நீ யார் என் கால்நடைகளைச் சாப்பிட என்று கோபம் கொண்டு துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்கள். ஓநாய்க்குப் புரியவேயில்லை. உங்கள் உணவை நான் வேட்டையாடியது தவறு என்றால் என் உணவையும் என்னையும் சேர்த்து நீங்கள் வேட்டையாடுவது எப்படிச் சரியாகும்?
வேட்டைக்காரர்கள் வாழ்ந்த அதே அமெரிக்காவில்தான் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஜேக் லண்டனும் வாழ்ந்தார். அவருக்கு ஓநாயின் நியாயம் புரிந்தது. மனிதர்களின் தவறும் புரிந்தது. எனவே, ஓநாயை அவர் நேசிக்க ஆரம்பித்தார். அவர் எழுதிய கதைகளில் ஓநாய்களின் உலகத்தை விரிவாகப் பதிவு செய்தார். நீங்கள் நினைப்பதுபோல் அது பயங்கரமான மிருகம் அல்ல. நாய் மட்டுமல்ல, நாய் குடும்பத்தைச் சேர்ந்த ஓநாயுடனும் மனிதன் ஒற்றுமையாக வாழமுடியும் என்று உலகுக்குப் புரிய வைத்தார். என் பெயர் ஜேக் ‘உல்ஃப்’ லண்டன் என்றுகூட அவர் பெருமையாகச் சொல்லிக்கொண்டார்.
யார் கண்டது? ஜேக் லண்டனின் நட்பைக் கண்டு நெகிழ்ந்துபோய் ஏதாவதொரு ஓநாய் தன்னுடைய குழந்தைக்கு அவர் பெயரை வைத்திருக்கலாம். ஒரு நடை காட்டுக்குச் சென்று விசாரித்தால் தெரியும்!
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT