Published : 04 Oct 2017 10:39 AM
Last Updated : 04 Oct 2017 10:39 AM
உ
க்காந்து படி! அப்டின்னா படிக்க முடியாது அப்டிங்கிறதுதான் பதில். ஆனால் அதைச் சொல்ல முடியாது. அதை வேற வேற மாதிரி செஞ்சு காமிக்க முடியும். புஸ்தகத்துக்கு முன்னாடி உக்காந்து கனவு காண்றது, படிக்காம வரையிறது இப்படி படிக்காம செய்றதுக்கு ஆயிரம் வேலை இருக்கும். ஆனால் அதை எதையும் சத்தமா சொல்ல முடியாது. இப்படிச் செயலா இருந்த இந்தப் பழக்கம் பேச்சா மாறுனதைப் பத்தி அம்மா சொல்றது நல்லா இருக்கும்.
“கொஞ்சம் பெருசா வளர்ந்தப்ப நினைக்கிறதை எல்லாம் பேசிடணும்னு ஒரு வேகம் வந்தது. அப்ப நான் எதைப் பேசுனாலும் எகனைக்கு மொகனயா, ஏறுக்கு மாறா இருக்கும். எல்லார்கூடயும் நான் சண்டை போடுற மாதிரியே இருக்கும். வளர்ந்து டாக்டர் ஆகுறாங்களோ என்னவோ, டாக்டர் ஆவேன் அப்படின்னு சொல்லணும். அதாவது நிஜத்தைப் பேசக் கூடாது. தோன்றதைப் பேசக் கூடாது. அவங்க என்ன எதிர் பார்க்குறாங்களோ அதைப் பேசணும்.
நல்ல புள்ளைன்னா மீறி பேசாதது மட்டுமல்ல, நல்லாருக்கீங்களா, நல்லா இருக்கிறேன் மாதிரி பேசணும். உண்மையைச் சொல்லிட்டா போச்சு. நாகரிகம் இல்லாத பட்டிக்காட்டானா ஆயிடணும். இதைப் பத்தியெல்லாம் யோசிச்ச நேரம் அது. எங்கம்மா எதைச் சொன்னாலும் மாறா சொல்லுறேன் பாருன்னு ஆரம்பிச்சேன். வீட்டுக்குள்ள இரு அப்படிம்பாங்க. முடியாது வெளியேதான் போவேன். ஆண்களுடன் பேசாத அப்படிம்பாங்க. பேசுவேன். தடிப்பய மாதிரி நிமிர்ந்து நடக்காதம்பாங்க. நடப்பேன் அப்படின்னு தலைய நிமிர்த்தி நடப்பேன். நிமிர்ந்து நட அப்படின்னு பாடத்துல சொல்லியிருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்ணாசொன்னா என்ன பண்றது?
வீட்டுக்குள்ள எங்கள மாதிரி அடைஞ்சி கிடக்காம படிச்சி பெரிய வேலைக்குப் போ; அங்க பாரு பி.டிஉஷாவ, சரோஜினி நாயுடுவ… அப்படின்னு சில நேரம் சொல்றீங்க. மேடையில பேச வர்றவங்க பாரதி கண்ட புதுமைப் பெண்ணா, எட்டுத் திக்கும் சுத்தி வரணும்னு சொல்றாங்க… இப்படி ஆரம்பிசுதுதான் கேள்வி கேட்பேன். என் கேள்வி வீட்டையே டென்ஷனுக்குள்ள தள்ளும். வாய் வாய்ன்னு திட்டுவாங்க. எதை எதோட முடிச்சுப் போடுறா பார்னு சொல்வாங்க. பாடப் புத்தகத்துல எதிர்ச்சொல்ங்குறது அழகா இருக்கு. இங்க அங்க, இது அது, நல்லது கெட்டது, இருக்கு இல்ல…ஆனா செயலை எதிர்க்கிறது அல்லது ஒருத்தர் தவறா சொல்றதை எதிர்க்கிறது அவ்வளவு சுலபமில்ல. அவங்க மானம் மரியாதை என் நடையில் இல்லைனு சொல்றது அவ்வளவு ஈஸியா என்ன? என் அறிவுக்குச் சரியா பட்டுது. அது அவங்களுக்கும் புரியும். ஏனோ ஏத்துக்கவே மாட்டாங்க. அவங்களுக்குத் துணையா ஊரையே வேற கூப்டுக்குவாங்க. இந்திரா காந்திய புகழ்வாங்க. ஆனா அது நமக்குச் சரிவராதுன்னுவாங்க. ஏன்னு கேட்டா பதில் சொல்லத் தெரியாது. கேள்வி கேக்காதன்னுவாங்க. அது கிடக்கு போன்னு விட்டுட்டுப் போக முடியாது…”
ஒருநாள் அம்மாவைக் கிண்டல் பண்ணணும்னு நினைச்சேன். “அம்மா இன்னைக்கு ஒண்ணு சொல்லுவேன். நீங்க அதுக்கு ஏறுக்கு மாறா செய்யணும். சரியா? நீங்க இன்னைக்குச் சமைக்க வேணாம்” அப்படின்னேன். அம்மாவின் பதிலும் செயலும் நான் நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது. “எனக்கு எதுல ஏறுக்கு மாறா செய்யணும்னு தோணுதோ அதுலதான் செய்வேன். இன்னைக்கு நல்ல புள்ளையா சொல்றதைக் கேக்கணும்னு இருக்கு. அதுமட்டுமில்ல நான் எப்பயுமே எகனைக்கு மொகனையா இருக்கிறதில்ல. நல்ல புள்ளையாவும் சொல்றதைக் கேப்பேன். இன்னைக்கு நீ சொன்னதை அப்படியே செய்யணும் மாதிரி இருக்குன்னு சொல்லிட்டு அன்னைக்குச் சமைக்கவே இல்ல. அம்மா அப்படிச் செய்வாங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல. அம்மா இப்படிதான்னு ஒரு முடிவுக்கே வர முடியாது. இந்த மாதிரி பேச்சுலதான் அதெல்லாம் எனக்குப் புரியும்.
யாராவது கஷ்டம்னு பேசுனா அம்மா அவங்களுக்குக் குடுக்குற ஐடியாவும் வித்தியாசமா இருக்கும். எதுக்கு அழுவுறன்னு கேப்பாங்க. அழுவுறவுங்க, அழுவுறதுக்கான காரணத்தைக் கதையா 20 நிமிஷம் சொல்லியிருப்பாங்க. அம்மா அமைதியா கேப்பாங்க. முடிச்சதும் அதுக்குதான் அழுவுறியா? அழு அழு. அழுதா சரியாயிடும்னுதான அழுவுற. அப்டின்னா சொல்லு நானும் கொஞ்ச நேரம் சேந்துக்குறேன் அப்படிம்பாங்க. பாவம்னு சொல்லணும், ஐயோன்னு சொல்லணும், ஒரு நாள் எல்லாம் சரியாவும் கவலைப்படாதன்னு சொல்லணும். சொல்லும்போது அவங்க அழுகை அதிகரிச்சி கண்ணைப் புழிஞ்சி புழிஞ்சி அழுவணும். இதெல்லாம் உட்டுட்டு அழுவுன்னு சொன்னா அது எகனைக்கு மொகனதான். அம்மாவின் பேச்சில் / எதிர்ப்பில் எவ்வளவு கேள்விகள் பதுங்கியிருக்கின்றன! அழுவுறதவுட்டுட்டு ஆகறத யோசி அப்படின்னு கேள்வி கேட்க ஆரம்பிப்பாங்க. அம்மாவோட இந்தப் பழக்கம் எனக்கும் உதவியா இருந்தது. மத்தவங்களவிட வித்தியாசமா நான் இருக்கிற மாதிரி இருக்கு. அம்மா எல்லார் மாதிரியும் நான் இருக்கிறதில்லன்னு அப்பப்ப யாராவது சொல்றங்க. எனக்குமேகூட தெரியுது. நானும் கேள்வி கேக்குறேன். எனக்கும் எல்லார் சொல்றதையும் செய்ய முடியல.
ஒண்ணு மட்டும் தெரியுது. நான் அம்மா மாதிரி இருக்கிறேன். அச்சு அசலா அப்டியேதான் யோசிக்கிறேன். செய்றேன். கேள்வி கேட்கிறேன். ஊரைச் சுற்றி வருகிறேன். ஆடுகிறேன். பாடுகிறேன். வா என்றால் போகிறேன். அம்மாவுக்கு இதெல்லாம் தெரிகிறதா என்று தெரியவில்லை. தெரியும்தான். தெரியாமல்கூட இருக்கும். ஆனால் நான் வேற மாதிரியும் இருக்கிறேன்.
(சேட்டைகள் நிறைந்தன)
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT