Published : 14 Jun 2023 06:07 AM
Last Updated : 14 Jun 2023 06:07 AM
மண்ணில் வீசும் பெரும்பாலான பொருள்களை மண் சிதைத்துவிடுகிறது. ஆனால், விதைகளை மட்டும் மண் ஏன் சிதைப்பதில்லை, டிங்கு?
- வெ. சித்ரா, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, கரூர்.
மண்ணில் விழுந்த உடனே சிதைந்து போகாமல் இருக்கும் விதத்தில் இயற்கை விதைகளுக்குப் பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. விதைகளின் மேலே இருக்கும் ஓடு கடினமாக இருக்கும். அதனால் ஈரம் பட்டாலும் நுண்ணுயிரிகள் தாக்கினாலும் விதைகள் எளிதில் பாதிப்படையாது.
முளைப்பதற்கு ஏற்ற வகையில் விதைகள் ஆரோக்கியமானவையாக இருந்தால், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு விதைகள் முளைத்துவிடும். சத்து இல்லாத விதைகளாக இருந்தால், மண்ணில் சிதைந்து அழிந்துவிடும், சித்ரா.
என் நகத்தில் உள்ள வெள்ளைப் புள்ளியைப் பார்த்து, என் பாட்டி உனக்குப் புதுத் துணி கிடைக்கப் போகிறது என்கிறார். என் அம்மாவோ கால்சியம் சத்துக் குறைபாடு, பாலைக் குடி என்கிறார். இவற்றில் எது சரியானது, டிங்கு?
- ஜெ. மதுமிதா, 6-ம் வகுப்பு, செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்.
உங்கள் பாட்டி சொல்வதுபோல் நகத்தில் காணப்படும் வெள்ளைப் புள்ளியால் புதுத் துணி கிடைக்காது. உங்கள் அம்மா சொல்வதுபோல இது கால்சியம் குறைபாடும் அல்ல. எப்போதாவது உங்கள் விரலில் காயம் ஏற்பட்டிருக்கலாம். அந்தக் காயத்தின் விளைவாக இதுபோன்ற வெள்ளைப் புள்ளிகள் நகங்களில் தோன்றலாம். காயம் ஏற்பட்டுச் சில காலத்துக்குப் பிறகு இந்த வெள்ளைப் புள்ளி தோன்றுவதால், உங்களுக்கு காயம் ஏற்பட்ட நிகழ்வு மறந்து போயிருக்கலாம்.
இதுதவிர, ஒவ்வாமை, ஏதாவது சத்துக்குறைபாடு காரணமாகவும் வெள்ளைப் புள்ளிகள் அரிதாகத் தோன்றலாம். ஒன்று அல்லது இரண்டு வெள்ளைப் புள்ளிகள் நகங்களில் இருந்தால் பயமில்லை. அதிகமாக இருந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும், மதுமிதா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT