Last Updated : 25 Oct, 2017 10:55 AM

 

Published : 25 Oct 2017 10:55 AM
Last Updated : 25 Oct 2017 10:55 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: காட்டு மனிதர்

 

கா

டு என்றால் நமக்கு என்னவெல்லாம் நினைவுக்குவரும்? எங்கும் பரவியிருக்கும் இருள். கரடி, சிங்கம், சிறுத்தை போன்ற ஆபத்தான விலங்குகள். அடர்ந்த புதர்கள், செடிகொடிகள், மரங்கள். அச்சுறுத்தும் விநோதமான ஒலிகள். உலர்ந்த இலைகளின் மேல் ஊர்ந்து செல்லும் பாம்புகள். மொத்தத்தில் காடு என்றால் ஆபத்து. இப்படித்தானே நாம் நினைப்போம்?

அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி டேவிட் தொரோ வேறு மாதிரி நினைத்தார். அவருக்கு அமெரிக்க நகரம்தான் ஆபத்தானதாகத் தோன்றியது. பெரிய கட்டிடங்களும் பளபளப்பான சாலைகளும் அவருக்குப் பிடிக்கவில்லை. கோட், சூட், தொப்பி அணிந்த நாகரிக மனிதர்களைக் காண அவருக்கு அலுப்பாக இருந்தது. காலையில் எழுந்து, பரபரப்பாக வேலைகளைத் தொடங்கி, மதியம் எதையோ சாப்பிட்டுவிட்டு, மீண்டும் பரபரப்பாக என்னவோ செய்துவிட்டு, தொப்பென்று படுக்கையில் விழுவது அவருக்குப் பிடிக்கவில்லை. இப்படியே ஒவ்வொரு நாளையும் கழிக்க அவர் தயாராக இல்லை. எனவே காட்டுக்குப் போக அவர் முடிவு செய்தார்.

கையில் ஒரே ஒரு சிறிய மூட்டை. கான்கர்ட் நகரில் உள்ள வால்டன் என்னும் அழகிய குளத்துக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றார். சிறிது தூரம் நடந்து சென்று ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தார். அப்படியே கீழே புல்லின் மீது படுத்துக்கொண்டார். திறந்த வானம். அழகாக மின்னும் நட்சத்திரங்கள். கண்கள் இயல்பாகவே மூடிக்கொண்டன. நல்ல குளிர். எப்போது தூக்கம் வந்தது என்றே நினைவில்லை.

கண் விழித்தபோது நன்றாக விடிந்திருந்தது. ஏதோ வித்தியாசமாக இருந்தது. கீச் கீச் என்று சத்தம். எங்கிருந்து வருகிறது என்று பார்க்கவேண்டிய அவசியமே இருக்கவில்லை. ஒரு சிறிய குருவி. தொரோவின் மூக்கின் மீது ஒரு காலை வைத்தபடி உட்கார்ந்திருந்தது. இன்னொரு கால் கன்னத்தில் இருந்தது. இன்னொரு குருவி, அநேகமாக அதன் தம்பியாக இருக்கவேண்டும், வயிற்றின் மீது தாவித் தாவி குதித்துக்கொண்டிருந்தது. கீச் கீச்! அவர் எழுந்துகொள்வதற்குள் இரண்டும் பறந்துவிட்டன.

புல் படுக்கையில் இருந்து எழுந்த தொரோ சிறிது நேரம் காட்டில் உலாவினார். கையைக் கொஞ்சம் உயர்த்தி கிளைகளில் இருந்து பழங்கள் பறித்துக்கொண்டார். ஒரு பாறை இருந்தது. அதன் மீது தாவி ஏறி அமர்ந்து, ஒவ்வொரு பழமாக எடுத்து மெல்ல மெல்ல ரசித்துச் சாப்பிட ஆரம்பித்தார். அரை மணி நேரம் ஆகியிருக்குமா சாப்பிடுவதற்கு? இல்லை, ஒரு மணி நேரம்கூட ஆகியிருக்கலாம். அதனால் என்ன? நகரத்தில்தான் நேரத்தைக் கண்டு அஞ்சவேண்டும். காடு சுதந்திரமானது.

குளத்தில் இறங்கி உல்லாசமாகக் குளித்தார். மீண்டும் பழங்கள் சாப்பிட்டார். மதியம் குளிர் அதிகமாக இருந்தது. சிறிது நடந்தார். ஏதாவது வேலை செய்யவேண்டும்போலிருந்தது. குளத்தில் மீன் பிடித்தார்.

பிறகு கட்டைகள், மரக் கிளைகள் ஆகியவற்றைச் சேகரித்தார். கையோடு சில கருவிகளை அவர் எடுத்துவந்திருந்தார். அவற்றைக் கொண்டு மெதுவாகத் தன் வீட்டை அவர் கட்ட ஆரம்பித்தார். சுகமாக இருந்தது. களைப்பு வந்தால் அப்படியே படுத்து உறங்கிவிடவேண்டியதுதான்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் அனுபவம். ஒரு நாள் முழுக்க ஒரு குருவிக்காக. அது தன் மூக்கை எப்படியெல்லாம் அசைக்கிறது என்று பார்த்துக்கொண்டே இருந்தார். சின்னச் சின்னப் பூச்சிகளைப் பிடித்து அது கொத்தித் தின்பதை அருகிலிருந்து பார்த்தார். அது தூங்குமா? ராத்திரி குளிர் அதிகரித்தால் என்ன செய்யும்? தான் கவனித்த விஷயங்களைச் சின்னச் சின்ன குறிப்புகளாக எழுதிக் கொண்டார்.

பிறகு பூக்கள். ஒரு செடியில் எப்போது மொட்டுகள் அரும்ப ஆரம்பிக்கின்றன? அந்த மொட்டு மலர்வதற்கு எவ்வளவு காலம் பிடிக்கிறது? எத்தனை எத்தனை வண்ணங்களில் பூக்கள் பூக்கின்றன? பூவுக்கும் வானிலைக்கும் என்ன தொடர்பு? மழையில் பூக்கள் எப்படி நனைகின்றன? அருகிலிருந்து கவனித்து எழுதினார். ஐயோ பாம்பு என்று அலறி ஓடாமல் தொலைவிலிருந்தே கவனித்தார். பாம்பு உரித்துப் போட்ட சட்டையை எடுத்துப் பத்திரப்படுத்திக்கொண்டார். வண்ணத்துப் பூச்சிகளின் வகைகளைத் தெரிந்துகொண்டார்.

ஒரு நாள் வரிசையாகச் செல்லும் எறும்புகளைக் கண்டார். இனி ஒரு வாரம் எறும்புகளுடன் என்று முடிவு செய்து நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டார். உணவு தேடும் எறும்பு, சண்டை போடும் எறும்பு, கால் உடைந்த எறும்பு, ராணி எறும்பு என்று எதையும் அவர் விட்டு வைக்கவில்லை. மீன், பறவை, மான், எறும்பு, மண் புழு அனைத்தும் இப்போது அவருக்குப் பழகிவிட்டன. குளிர், வெயில், மழை, அடர்ந்த இருள் அனைத்தும் பிடித்துவிட்டன. வால்டன் குளத்துக்கு அருகே தொரோ எத்தனை காலம் வசித்தார் தெரியுமா? இரண்டு ஆண்டுகள், இரண்டு மாதங்கள், இரண்டு நாட்கள்.

அவர் கற்றுக்கொண்டது என்ன தெரியுமா? காடு அழகானது. விலங்குகள் அற்புதமானவை. பூ, புழு, மான், மீன், குருவி எல்லாமே என் ஆசிரியர்கள். எப்படி வாழவேண்டும் என்பதைக் காடுதான் எனக்குக் கற்றுத்தந்தது. தன் அனுபவங்களை ஒரு புத்தகமாகவும் எழுதி அவர் வெளியிட்டார். தான் வசித்த குளத்தின் பெயரையே தலைப்பாகவும் வைத்தார். வால்டன்!

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x