Last Updated : 20 Oct, 2017 03:08 PM

 

Published : 20 Oct 2017 03:08 PM
Last Updated : 20 Oct 2017 03:08 PM

இடம் பொருள் மனிதர் விலங்கு: வெடிக்கும் மருந்து

 

வருடைய பெயர் என்னவென்று தெரியாது. எப்படி இருப்பார் என்று தெரியாது. சீனாவைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தெரியும். உலகத்திலேயே அவருக்குப் பிடித்தமான விஷயம் ஆராய்ச்சி செய்வதுதான். தன் அறை முழுக்கப் பல வண்ணங்களில் பல விதமான ரசாயனங்களை அவர் சேமித்து வைத்திருந்தார். இன்னொரு பக்கம் மரப் பட்டைகள், இரும்புத் துண்டுகள், அடுப்புக் கரி என்று என்னென்னவோ குவித்து வைத்திருப்பார்.

என்ன செய்வார் தெரியுமா? ஒரு புட்டியிலிருந்து சிறிதளவு ரசாயனத்தை எடுத்து இன்னொன்றோடு கலப்பார். ஓர் ஓரமாக எரிந்துகொண்டிருக்கும் விளக்கில் காட்டி சூடாக்குவார். புகை கிளம்புகிறதா? நெடி வருகிறதா? பச்சையும் மஞ்சளும் கலந்தால் என்ன நிறம் கிடைக்கிறது? எல்லாவற்றையும் குறித்து வைத்துக்கொள்வார். கொஞ்ச நேரம் கழித்து ஓர் இரும்புத் துண்டை எடுத்து அதே ரசாயனத்தில் போட்டுக் கொதிக்க வைப்பார். இரும்பால் ரசாயனத்தை மாற்ற முடிகிறதா என்று பார்ப்பார். அல்லது, ரசாயனத்தால் இரும்பு மாறுகிறதா என்று கவனிப்பார்.

அவருடைய முழு நேர வேலையே இதுதான். சில ரசாயனங்களை எடுத்து வேறு சில ரசாயனங்களோடு சேர்த்து கலக்கவேண்டும். பிறகு சூடாக்கவேண்டும். பிறகு ஆற வைக்கவேண்டும். எடுத்து ஆராயவேண்டும். பிறகு எல்லாவற்றையும் கொட்டி சுத்தமாக்கிவிட்டு, மீண்டும் முதலில் இருந்தே ஆரம்பிக்கவேண்டும். அந்த அறையில் இருக்கும் எல்லா ரசாயனங்களையும் எல்லாவற்றோடும் அவர் கலந்துமுடித்துவிட்டார். ஆனால் எந்தவித அற்புதமும் இதுவரை நடக்கவில்லை.

ஒரு நாள் பொட்டாசியம் நைட்ரேட், கந்தகம், கரித்துண்டு மூன்றையும் ஒன்று சேர்த்து ஆராய்ந்துகொண்டிருந்தார். முதலில் புகை வந்தது. வழக்கமாக வருவதுதான் என்பதால் அவர் அலட்டிக்கொள்ளவில்லை. மெல்ல மெல்ல வளர்ந்து அந்த அறை முழுக்கப் புகை நிரம்பியபோது ’ஹச்சு ஹச்சு’ என்று சீன மொழியில் இருமியபடி, கொஞ்சம் ஆச்சரியப்பட்டுப் போனார். இதற்கு முன்பு இத்தனை புகை வந்ததில்லையே! அவர் யோசித்துக்கொண்டிருந்தபோதே உஸ் என்று ஒரு நெருப்புப் பொறி பறந்தது. அட என்று வியந்து பார்ப்பதற்குள் நெருப்புப் பற்றி எரிய ஆரம்பித்துவிட்டது. அதற்குப் பிறகு ஆச்சரியமாவது, ஆராய்ச்சியாவது? ஆளை விட்டால் போதும் என்று அறையைவிட்டு வெளியில் ஓடிவிட்டார்.

நல்ல வேளையாக அவர் பிழைத்துவிட்டார் என்றாலும் அவருடைய அறை மட்டுமல்ல மொத்த வீடும் எரிந்து சாம்பலாகிவிட்டது. வெடிமருந்து என்று இன்று நாம் அழைக்கும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது இப்படித்தான். இது நடந்தது சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னால். கைப்பிடி அளவு கொண்ட ஒரு விநோதக் கலவையால் ஒரு வீட்டையே அழிக்க முடியுமா, அது எப்படி என்று எல்லோரும் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்கள். வெடிமருந்தின் புகழ் சீனா முழுக்கப் பரவ ஆரம்பித்தது.

எதிர்பார்த்ததைப் போலவே வெடிமருந்தை முதலில் பயன்படுத்த ஆரம்பித்தது சீன ராணுவம்தான். எதிரி நாடான மங்கோலியா மீது போர் தொடுத்து வெல்ல ஓர் அற்புதமான ஆயுதம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ந்து போனார்கள் அவர்கள். ஆனால் வெடிமருந்தை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியவில்லை. எதிரி நாட்டுக்குள் நுழைந்து நிதானமாக வெடிமருந்தைத் தூவிவிட்டு வர முடியாது அல்லவா?

ஒரு வழி கிடைத்தது. அம்பு முனையில் வெடிமருந்தை வைத்துக் கட்டினார்கள். பிறகு நெருப்பில் காட்டினார்கள். அம்பு எரிய ஆரம்பிக்கும்போது அதை எடுத்து வில்லில் பூட்டி, சர்ரென்று எதிரி நாட்டின்மீது செலுத்தினார்கள். கபகபவென்று பற்றி எரிந்தபடி பறந்து சென்ற அந்த அம்பு டமால் என்று வெடித்தபடியே கீழே சாய்ந்தது. ஆஹா, பிரமாதம் என்று உற்சாகமடைந்தார்கள் சீனர்கள். சர் சர் என்று நெருப்பு அம்புகள் பாயத் தொடங்கின. ஃபேய் ஹூவோ என்று இந்த ஆயுதத்துக்குப் பெயர் வைத்தார்கள். அப்படியென்றால் பறக்கும் நெருப்பு என்று பொருள்.

சரி, நாம் முதலில் சந்தித்த அந்த ஆராய்ச்சியாளர் எதற்காகக் கையில் கிடைத்ததை எல்லாம் போட்டுக் கலக்கி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார் தெரியுமா? மனிதர்கள் நீண்ட காலத்துக்கு ஆரோக்கியமாகவும் நல்ல வலுவோடும் இருக்க ஒரு மருந்து கண்டுபிடிக்கவேண்டும் என்பதற்காகத்தான். இரவு, பகல் பாராமல் அவர் உழைத்தது இந்த நல்ல நோக்கத்துக்காகத்தான். அவர் மட்டுமல்ல, உலகம் முழுக்கப் பலரும் அவரைப் போலவே பலவிதமான ரசாயன ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்தனர். இவர்கள் ரசவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். எல்லோருக்கும் பயன் தரும் நல்ல விஷயங்களை உருவாக்கவேண்டும் என்பதே இவர்கள் கனவு. ஆனால் என்ன நடந்தது பாருங்கள். மருந்து கண்டுபிடிக்கப் போய், கடைசியில் அது வெடியாக மாறிவிட்டது.

அதற்குப் பிறகு இன்னொரு மாற்றம் நடந்தது. எந்த அழிவையும் ஏற்படுத்தாமல் வெடிமருந்தைப் பயன்படுத்த முடியுமா என்று சிலர் முயன்று பார்த்தார்கள். வாண வேடிக்கைகளும் பல வகை பட்டாசுகளும் உருவாக ஆரம்பித்தன. அதில் ஒன்றான ராக்கெட்டைப் பற்ற வைத்தால் அது சர்ரென்று சீன அம்புகளைப் போலவே பறந்துசென்று வெடிப்பதைப் பார்க்கலாம்.

வெடிமருந்தைக் கண்டுபிடித்த பெயர் தெரியாத அந்தச் சீனர் இன்று நாம் வெடிக்கும் விதவிதமான பட்டாசுகளைப் பார்த்தால் என்ன சொல்வார் தெரியுமா? “யாருக்கும் தொந்தரவு தராத கண்டுபிடிப்புதான் இருப்பதிலேயே நல்லது. நீங்கள் மருந்தைக் கண்டுபிடிக்கப் போகிறீர்களா அல்லது வெடியையா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது!”

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x