Published : 06 Oct 2017 10:30 AM
Last Updated : 06 Oct 2017 10:30 AM
“எனக்கு நீதி வேண்டும்’’. கோபமும் வருத்தமுமாகக் கூறினார் சரவணன்.
காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் விக்ரம் இதைக் கேட்டுக்கொண்டிருந்தபோது அருகில் துப்பறியும் ராம்சேகரும் அமர்ந்திருந்தார்.
சரவணனின் கன்னம் இன்னமும்கூடச் சிவந்திருந்தது. அடிக்கடி அந்தப் பகுதியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார் அவர். வலி அதிகமாகவே இருந்தது என்பதை அவர் முகத்தின் வேதனையே காட்டிக்கொடுத்தது.
முன்தினம் இரவு தனது வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது முகமூடி அணிந்த ஒருவர் தனக்கெதிரே வந்ததாகவும் தன்னை வேகமாக அறைந்து அருகிலிருந்த கற்களின் மீது தள்ளிவிட்டதாகவும் விவரித்தார் சரவணன்.
“இரவு 11 மணிக்கு வீட்டிலிருந்து எங்கே கிளம்பினீங்க?’’ என்று கேட்டார் விக்ரம்.
“வீட்டிலே மின்வெட்டு. தெருவிலும் விளக்கு இல்லே. அதனாலே சித்தப்பா வீட்டுக்குப் போய்த் தூங்கலாம்னு கிளம்பினேன். அப்போதுதான் இந்தச் சம்பவம் நடந்தது. அந்த மூணு பேரிலே யார் இதைச் செய்ததுன்னு நீங்கதான் கண்டுபிடிக்கணும்’’.
“எந்த மூணு பேர்?’’ என்று கேட்டார் விக்ரம்.
“எதிர் வீட்டிலே இருக்கும் மூணு பேர்தான். சங்கரன், சிவராமன், இவங்க தங்கை சிநேகா’’.
“இவங்களிலே ஒருத்தர் உங்களை ஏன் அறையணும், உங்களோட அவங்களுக்கு முன்விரோதம் இருக்கா?’’ என்ற ராம்சேகரின் கேள்விக்கு, அதற்கு முந்தைய வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சியை விளக்கினார் சரவணன்.
அதைக் கூறி முடித்ததும், “அவங்களிலே ஒருத்தர்தான் என்னை அடிச்சாங்கன்றதுக்கு இன்னொரு ஆதாரமும் இருக்கு. என்னை வேகமாக அறைந்து தள்ளியபோது அந்த நபரின் கைவிரல் மோதிரம் கீழே விழுந்தது. அதை நான் எடுத்துட்டு வந்திருக்கேன்’’ என்றபடி அந்த மோதிரத்தை எடுத்துக்காட்டினார். அதில் ‘S’ என்ற எழுத்து பிரதானமாகக் காணப்பட்டது.
‘உங்களை அறைந்தது ஆணா பெண்ணான்றது கூடவா தெரியலே?’’ என்ற இன்ஸ்பெக்டரின் கேள்விக்கு “தெரியலே சார். ஒரே இருட்டு. எனக்குக் கண் பார்வையும் சரியில்லே’’ என்றார் சரவணன்.
“அந்த மூணு பேரிலே யாருக்குக் கோபமும் வஞ்ச உணர்ச்சியும் அதிகம் இருக்கும்னு நினைக்கிறீங்க?’’ என்று கேட்டார் விக்ரம்.
“மூணு பேருமே மிகவும் கோபப்பட்டு பார்த்திருக்கேன். இப்ப நான் சொல்லப்போறது சமீபத்தில் நடந்த சம்பவம்தான். தன் வீட்டு வாசலிலே பக்கத்து வீட்டுக்காரர் குப்பையைப் போட்டுட்டாருன்னு அவரை அடிக்கப் போனான் சங்கரன். ஆன்லைனிலே ஆர்டர் செய்த ஒரு நாற்காலி தன் வீட்டுக்கு வந்ததும் வாசலிலேயே அதைப் பார்த்துட்டு கத்தினான் சிவராமன். “முட்டாள் மாதிரி இந்த நாற்காலியை அனுப்பிச்சிருக்காங்களே. நான் ஆர்டர் செய்தது வேறு மாதிரி நாற்காலி’’ என்று சத்தம்போட்டான்.
பக்கத்து வீட்டிலே இருக்கும் ஒரு சின்னப் பெண் சிநேகாவைப் பார்த்து “ரித்விகா சிங் மாதிரி நீங்களும் சினிமாவில் நடிக்கப் போவீங்களா?’’ என்று கேட்க, அந்த சிநேகாவின் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது. “இன்னொரு தடவை என்னைப் பார்த்து நடிப்பியான்னு கேட்ட, அவ்ளோதான்” என்று கத்தினாள்.
“நாம ரெண்டு பேரும் அந்த வீட்டுக்கு நேரடியாகப் போய்ப் பார்க்கலாமா?’’ என்று விக்ரம் கேட்க, யோசனையுடன் தலையசைத்தார் ராம்சேகர்.
அந்த வீட்டுக்குச் சென்றபோது சிவராமன் தன் பேண்ட்டின்மீது கொஞ்சம் சிரமப்பட்டு பெல்ட்டை அணிய முயன்றுகொண்டிருந்தார். வாசலில் இரண்டு ஜோடிக் காலணிகள் இருந்தன. இரண்டுமே ஆண்களுக்கானவை.
கூடத்தில் மாட்டப்பட்டிருந்த புகைப்படம் ஒன்றில் சிநேகா குத்துச்சண்டைப் பயிற்சியில் ஈடுபடும் காட்சி தெரிந்தது. ‘இதனால்தான் அந்தச் சிறுமி சிநேகாவிடம் அப்படிக் கேட்டிருக்கிறாள்’.
“மீதி ரெண்டு பேரும் எங்கே?’’ என்று கேட்டபோது “அவங்க ரெண்டு பேரும் வெளியே போயிருக்காங்க’’ என்றான் சிவராமன். சமையல் அறையிலிருந்து ஏதோ சத்தம் கேட்டது.
“உங்க மூணு பேரையும் நான் தனித்தனியா விசாரிக்கணும்’’ என்று விக்ரம் கூறியபோது ராம்சேகரின் முகத்தில் ஒரு புன்னகையைக் கவனித்தார். அந்தப் புன்னகைக்கு அர்த்தம் ‘நான் குற்றவாளியைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பதுதான்.
ராம்சேகர் யாரைக் குற்றவாளியாகக் கருதுகிறார், அதற்குக் காரணம் என்ன?
கடந்த வார விடை
சென்ற வருட மகாமகத்தின்போது திவாகருக்குப் பதினைந்தாவது பிறந்த நாள் என்கிறாள் சுகந்தி. ஆக, அவன் வயது இப்போது நிச்சயம் பதினெட்டைத் தாண்டியிருக்க வாய்ப்பே இல்லை. ஆனால், இறந்தவன் பதினெட்டு வயதைத் தாண்டியவன் என்பதை ஓவியத்திலுள்ள அவனது விரலிலுள்ள தேர்தல் அடையாள மை தெரிவிக்கிறது. எனவே, இறந்தவன் திவாகர் அல்ல என்கிற முடிவுக்கு வருகிறார் ராம்சேகர்.
(துப்பறியலாம்)
ஓவியம்: முத்து
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT