Published : 20 Oct 2017 11:22 AM
Last Updated : 20 Oct 2017 11:22 AM
அத்தனை தொலைக்காட்சி சேனல்களின் பிரதிநிதிகளும் தொழிலதிபர் சண்முகராஜனின் வீட்டுக்கு வெளியே கூடியிருந்தார்கள்.
அவர்களில் எவரும் உள்ளே போக முயலவில்லை. அப்படிப்போனால், அது சட்டமீறலும்கூட. உள்ளே வருமானவரித் துறையினர் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர்.
தொலைக்காட்சி சேனலின் ஒளிப்பதிவாளர்கள் அந்த வீட்டின் வெளிப்புறத்தையும் வெளியே கூடியிருந்த மக்களையும் மாறி மாறித் தங்கள் கேமராவால் சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தனர்.
முக்கியமாக அவர்கள் அதிகக் கவனம் செலுத்தியது அந்த வீட்டின் வெளிப்புறம் நின்றிருந்த ரங்கநாதன், வடிவேலு, கந்தசாமி, ருக்மணி ஆகியோர் மீதுதான். இவர்கள் நால்வரும் கோடீஸ்வரர்கள்தான். சண்முகராஜனின் நண்பர்கள். இந்த நால்வரையும் சண்முகராஜனையும் ஊடகங்கள் ‘ஐவர் குழு’ என்றே அழைத்தன. காரணம், இவர்கள் ஐவரும் கூட்டுச் சேர்ந்துதான் பலவித ஊழல்களிலும் கறுப்புப் பணப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டவர்கள் என்றன புலனாய்வு இதழ்கள்.
உள்ளே சிக்கும் ஆதாரங்களில் தங்களையும் சிக்கவைக்கும் ஏதாவது இருந்துவிடுமோ என்ற பதற்றமும் நால்வரின் முகத்திலும் தெளிவாகத் தெரிந்தது.
ஒரு தொலைக்காட்சி சேனலுக்கான செய்திச் சேகரிப்பில் “தொழிலதிபர் சண்முகராஜன் நேர்மையானவர். இந்த வருமானவரிச் சோதனை அரசியல் பின்னணியில் நடத்தப்படும் சதிச் செயல்’’ என்று நிருபர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார் ரங்கநாதன். வடிவேலு அதை வலுவாக ஆமோதிக்கும் வகையில் தலையசைத்தார். கந்தசாமி தன் காருக்குள் அமர்ந்தபடி மவுனம் சாதித்தார். ருக்மணி தன் கைப்பையை இறுகப் பற்றியபடி இறுக்கமாகக் காட்சி தந்தார்.
வீட்டிலிருந்து யாராவது வருமான வரி அதிகாரி வெளிப்படுவாரா, அவர் ஏதாவது புதிய தகவலைக் கூறுவாரா? ஊடகங்கள் காத்திருந்தன.
அந்த நேரத்தில் எதிர்பாராத ஒரு நிகழ்வு நடந்தது. வீட்டின் உள்ளே ஏதோ பரபரப்பை உணர முடிந்தது. அடுத்த சில நொடிகளில் வீட்டுக்குள்ளிருந்து கையில் ஒரு தாளை எடுத்தபடி அந்த வீட்டுப் பணியாள் வெகு வேகமாக க்ரில் கதவை நோக்கி ஓடிவந்தார். சற்றுத் தாமதமாகச் சுதாரித்துக்கொண்ட வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் சற்றுப் பின்னால் அவரைத் துரத்தி வந்தார்.
ரங்கநாதன் முகத்தில் எதையோ புரிந்துகொண்ட பதற்றம் தெரிந்தது. அவர் அந்தப் பணியாள் கொண்டுவந்த அந்தத் தாளை வாங்கிக்கொள்ளத் தயாராகத் தன் கைகளை வைத்துக்கொண்டார்.
ஆனால், அந்தப் பணியாள், ரங்கநாதனின் எண்ணம் ஈடேறவில்லை. பின்னால் வந்துகொண்டிருந்த வருமானத்துறை அதிகாரி வேகமாகச் செயல்பட்டு அந்தப் பணியாளின் கையிலிருந்த அந்தத் தாளைப் பிடுங்கிக்கொண்டார்.
“இதுதான் அந்த வேலைக்காரர் உள்ளேயிருந்து கடத்திவந்த தாளின் நகல். வருமானவரித் துறையிலிருந்து இது கசிந்திருக்கிறது’’ என்றபடி இன்ஸ்பெக்டர் விக்ரம் ஒரு தாளைத் துப்பறியும் ராம்சேகரிடம் நீட்டினார்.
“மிஸ்டர் ராம்சேகர் இது ஏதோ மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறி வாங்குவதற்காக அந்தப் பணியாளிடம் கொடுக்கப்பட்ட தாள்போல இருக்கிறது. ஆனால், இது ஏதோ ஒருவிதத்தில் மிக முக்கியமானது என்பதால்தான் அது வருமானவரித் துறையிடம் சிக்கக் கூடாது என்று அந்த விசுவாசமான வேலைக்காரர் நினைத்திருக்கிறார். உங்களுக்கு ஏதாவது புரிகிறதா பாருங்களேன்’’ என்றார்.
ராம்சேகர் அந்தத் தாளைக் கவனமாக ஆராய்ந்தார். தாளின் வலது புறத்தில் மேலாக முன்தின தேதி குறிக்கப்பட்டிருந்தது. கீழே சில காய்கறிகளின் உருவங்கள் வரையப்பட்டிருந்தன. பார்க்கும்போதே அவை என்னென்ன காய்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் அந்தத் தாளைக் கவனித்தார் ராம்சேகர்.
அவர் முகம் மலர்ந்தது. ‘கில்லாடிதான்’ என்ற வார்த்தையை அவர் உதடுகள் உதிர்த்தன.
“என்ன விஷயம் ராம்சேகர்?’’ என்று ஆர்வத்துடன் கேட்டார் இன்ஸ்பெக்டர்.
“பணப்பட்டுவாடாவாகத்தான் இருக்க வேண்டும்’’ என்று புன்னகைத்தார் ராம்சேகர்.
அந்தத் தாளில் உள்ளதைக் கொண்டு ராம்சேகர் கண்டுபிடித்தது என்ன? நீங்களும் ஊகியுங்களேன். விடை அடுத்த வாரம்.
(துப்பறியலாம்)
சென்ற வார விடை ரவி வர்மா தனது எந்த மகளை சொத்துக்கு வாரிசாகத் தேர்ந்தெடுத்தார்? எதைக் கொண்டு ராம்சேகரால் இதைக் கண்டுபிடிக்க முடிந்தது? ரவி வர்மா தீவிர மாரடைப்புக்கு உட்படுகிறார். இறப்பு நெருங்கிவிட்டது என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. எந்த மகளுக்குத் தனது சொத்துப் போய்ச் சேர வேண்டும் என்பதை நண்பர் இன்ஸ்பெக்டர் விக்ரமிடம் சொல்லிவிடத் தீர்மானிக்கிறார். “உங்கள் தேர்வை என்னிடம் பகிர்ந்து கொள்வது நல்லது அல்லவா?”என்றுவிக்ரம் கேட்கும்போது, அந்தத் தேர்வு யார் என்பதை வெளியிடுகிறார் ரவி வர்மா. “யாமினி”என்ற பதிலில் ‘யா’ என்று கூறி முடித்தவுடனேயே மாரடைப்பு அதிகமாகிவிடுகிறது. ‘மினி’ என்ற பகுதி வெளிவராமலேயே போய்விடுகிறது. ஆனால் ‘யா’ (Yeah) என்பதை Yes என்பதன் அமெரிக்க வடிவம் என்பதாகத் தவறாகப் புரிந்துகொள்கிறார் விக்ரம். ஆனால், அமெரிக்க ஆங்கில வார்த்கைளை ரவி வர்மா வெறுப்பவர் என்பது தெரிந்தவுடன் அவர் இறுதியாகக் கூறிய ‘யா’ என்பது ஒப்புதலைக் குறிக்கவில்லை என்பதையும், யாமினி என்றுதான் அவர் கூறத் தொடங்கியிருக்கிறார் என்பதையும் ராம்சேகர் புரிந்துகொள்கிறார். (ரவி வர்மாவுடனான தனது இறுதி உரையாடல் முழுவதும் ஆங்கிலத்தில் அமைந்தது என்று இன்ஸ்பெக்டர் தெளிவாகக் குறிப்பிடுகிறார்). |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT